

தனது பாலைவன வாழ்க்கையை ‘அருஞ்சுரம்’ என்கிற தலைப்பில் நாவலாக எழுதியிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த ஆல்பர்ட் குமார் என்கிற அதியமான். அருஞ்சுரம் என்றால் பாலைவனம் என்று பொருள்.
அகநானூற்றில் பல இடங்களில் வருகிறது. ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் நாயகன் நஜீபின் அனுபவம்போல வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தை இது விவரிக்கிறது.
நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பி, தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து, பாலைவனத்தில் கொத்தடிமைகளாக வாழ்க்கையைக் கழிக்க நேரும் எத்தனையோ தமிழ் இளைஞர்களில் அதியமானும் ஒருவர்.
தனது அனுபவங்களை நாள்குறிப்புபோல எழுதியிருக்கிறார். நீங்களும் நானும்கூட எழுதிவிடக் கூடிய சாதாரண நாள்குறிப்புகள். ஆனால், நீங்களும் நானும் வாழ்ந்துவிடக் கூடிய வாழ்க்கை அல்ல அவருடையது. தனது கிராமத்து நூலகத்தில் புத்தகங்கள் வாசித்துக் கொண்டும், கவிதை எழுதிக்கொண்டும் எதிர்காலம் குறித்துக் கனவு கண்டபடியும் வாழ்ந்த அதியமானின் தந்தை திடீரென்று இறந்துவிட, காலம் இவர் தலைமீது குடும்ப பாரத்தை ஏற்றிவிட்டது.
வரைவியலாளர் (draughtsman) படிப்பு பயின்றிருந்த குமாருக்கு சூப்பர்வைசர் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டிய உள்ளூர்த் தரகரிடம் 70,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்.
வழக்கம்போல் ஏமாற்று நாடகத்தின் அடுத்த காட்சி, இரண்டு மாதங்கள் பம்பாயில் தங்குதல். ஒரு வழியாக சௌதி அரேபியா ரியாத் நகரத்தை அடைந்தபோது மகிழ்ச்சியில் மிதக்கிறார். ஆனால், ஒரு குட்டி வேனில் தொலைதூரத்தில் இருந்த அல்சுல்பி என்கிற நகரத்துக்கு அவரை அழைத்துச் சென்று, நடுப்பாலைவனத்தில் இறக்கிவிட்டு, இதுதான் உன் பணி இடம் என்கிறபோது, இவர் ஆசையில் மண் விழுகிறது.
அங்கே நீளமாக சுற்றுச் சுவர் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவருக்குத் தரப்பட்டது கொத்தனாருக்குச் சாந்து குழைத்துத் தரும் வேலை. வெயிலைக் காட்டிலும் நிஜம் இவரைச் சுடுகிறது.
ஒதுங்கவும் நிழலற்ற அந்தப் பகுதியில், சுற்றுச் சுவர் கட்டியதில் விழுந்த துண்டு நிழலில்தான் இளைப்பாற வேண்டும்; மதிய உணவு சாப்பிட வேண்டும்; வாழ்க்கையும் ஒரு துண்டு நிழலாகத்தான் வாய்த்தது அதியமானுக்கும் அவரோடு வந்த நண்பர்களுக்கும்.
வேலை முடிந்ததும் சில வேளை தொழிலாளர்களை அழைத்துப் போக வேன் வராது. ஏறத்தாழ 15 கி.மீ. பாலைவனத்தில் நடந்துதான் அறைக்குத் திரும்ப வேண்டும். மேலே ஆஸ்பெஸ்டால் கூரை. அக்கினிக் குண்டமாய்த் தகிக்கும் அந்த அறைக்குள் வியர்வை ஆற்றில் மிதந்தபடிதான் தூங்க வேண்டும்.
ஒரு இந்திக்காரர், மலையாளிகள், குமார் என்று இவர்களின் குழுவில் ஐந்து பேர் இருந்தார்கள். யாருக்கும் அரபி மொழி தெரியாது. இவர்களைக் கூட்டிச் செல்லும் கிருஷ்ணன் என்ற மலையாளிக்கு மட்டுமே அரபி தெரியும். கிருஷ்ணன் மூலம் முதலாளி சொன்ன செய்தி கொடுமையானது.
எத்தகைய கொடுநரகத்தில் விழுந்துவிட்டோம் என்று புரியவைத்த செய்தி அது. பம்பாய் தரகரிடம் தற்போதைய அரபி எஜமானர் கொடுத்த தொகையை இவர்கள் வேலை செய்தே கழிக்க வேண்டும். அதன் பிறகே சம்பளம். மாதம் 1,000 ரியால்கள் என்று தரகர் அளித்த உறுதிமொழி பொய். 450 ரியால்கள் மட்டுமே தர முடியும் என்று எஜமானர் கூறிவிட்டார். அதையும் கண்ணால் கண்டதில்லை. நேராக மளிகைக் கடைக்குப் போய்விடும்.
எப்படியோ கஷ்டப்பட்டுச் சேர்த்த ரூ.10,000 மதிப்பிலான ரியால்களைத் தனது தாய்க்கு அனுப்பிவைக்கிறார். அதுவும் ஓராண்டு கழித்து. அதன் பிறகு சம்பளமே தருவதில்லை. மூன்று ஆண்டுகளில் அவர் அனுப்பிய மொத்தத் தொகையே இவ்வளவுதான்.
ஓர் இடத்தில் சுற்றுச் சுவர் கட்டிய பின் மற்றோர் இடத்தில் இதே வேலையைச் செய்யப் போயாக வேண்டும். கட்டிய சுவருக்கு உள்ளே தோட்டம் அமைக்க வேறொரு தொழிலாளர் கூட்டம் வரும். அவர்கள் முகத்திலும் துயரம் மண்டிக்கிடக்கும்.
ஆட்டு மந்தைத் தொழுவத்தில் தானும் ஒரு ஆடாக அடைக்கப்படவில்லை என்ற ஆறுதல் மட்டுமே குமாருக்கு மிஞ்சியது. ஜேம்ஸ் என்று ஒரு நண்பர் சற்றுத் தொலைவில் இருக்கிறார்.
அவர் ஒரு நல்ல அரபியிடம் வேலை பார்க்கிறார். ஏ.சி. அறை, பொழுதுபோக்கு அம்சங்கள், சமையலுக்கு ஆள் என்று எல்லாமே அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. வாரம் ஒருமுறை என்னோடு வந்து உணவருந்துங்கள், என்கிற அழைப்பை மறுத்துவிடுகிறார்.
தனது நண்பர்கள் காய்ந்த ரொட்டியும், அழுகிய பழங்களும் உண்டு பசியாறும் அவல நிலையில் இருக்கும்போது, தான்மட்டும் வயிறு நிறைய உண்பதற்கு அவர் மனம் ஒப்பவில்லை. அதியமான், கடல் கடந்து சென்றவராயினும் கடவுளுக்கு அருகில் சென்றுவிட்டதாகவே நம்மை உணரவைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நாவலில் உண்டு.
இங்கு நான் கடவுள் என்று குறிப்பிடுவது ராமனையோ, கிருஷ்ணனையோ, அல்லாவையோ, இயேசுவையோ அல்ல. சக மனிதர் மீது அன்புகாட்டுவதும், அவர்களைச் சகித்துக்கொள்வதும் இறைப் பண்புகள் அல்லவா? வேலை முடிந்த பிறகும் கூலி தர மறுக்கும் அரபியை அடிக்கப் பாய்ந்த அருள் என்கிற சென்னை இளைஞனைத் தரதரவென்று பள்ளிவாசலுக்கு இழுத்துப்போய் முத்தப்பா (மதகுரு)விடம் கொண்டுவிடுகிறார்கள்.
அவனைச் சாட்டையால் அடி அடி என்று அடிக்கிறார்கள். அதற்குப் பிறகு அருளைப் பார்க்கவே இல்லை. அவன் இருந்த இடத்தில், அவன் உடைமைகள் மட்டுமே சிதறிக் கிடந்தன. அப்புறம் இந்தியா திரும்பிய பிறகு அருளை சென்னையில் வைத்துச் சந்தித்ததாகக் கூறுகிறார் அதியமான். “குமாரு அண்ணா, தப்பிச்சு வந்துட்டீங்களா” என்று கண்ணீர் மல்கக் கட்டிக்கொண்டார் அருள்.
இடர் சூழும் வேளைகளில்கூட அவரது கவிமனம் பாலைவனத்தைக் கண்டும் ஆறுதல் கொள்கிறது. தன் வாழ்வைப் போலவே இருண்டு கிடக்கும் வானத்தில் யாரோ கூடை நிறைய நட்சத்திரங்களை வாரி இறைத்தபடி சென்றிருப்பார்களோ என்று வானத்து அழகை வர்ணிக்கிறார். அதியமான் ஒருமுறை வேலைக்குப் புறப்பட மறுத்து அறையிலேயே தங்கிவிடுகிறார் பத்து நாள்கள். தனிநபர் ஒத்துழையாமை! இந்தச் செய்தி அவரது எஜமானரிடம் சொல்லப்படுகிறது. அதியமானிடம் இருந்த ஏதோ ஒரு நடத்தை காரணமாக எஜமானர் எடுத்த முடிவை மிக இயல்பாகப் பதிவுசெய்கிறது நாவல். இறுதியில் அவரது சொந்த ஊரில் நிறைவடைகிறது.
அதியமான், கடல் கடந்து சென்றவராயினும் கடவுளுக்கு அருகில் சென்றுவிட்டதாகவே நம்மை உணரவைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நாவலில் உண்டு.
அருஞ்சுரம் (நாவல்)
தமிழினி பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 8667255103
- தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com