

‘முன்றில்’ சிற்றிதழின் தொகுப்பு நூல் இது. 19 இதழ்களையும் ஒளி அச்சு செய்து, பழைய வடிவத்தில் அப்படியே தொகுத்து வெளியிட்டுள்ளது பரிதி பதிப்பகம். பலர் செய்திருப்பதுபோல இதழில் வந்த கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று தனித் தனியாகத் தொகுக்காமல், அப்படியே முழுமையாகக் கவிஞர் ரவி சுப்பிரமணியத்தின் காட்சியோடு கூடிய கவித்துவம் செறிந்த முன்னுரையோடு தந்திருப்பது இந்தப் பதிப்பின் சிறப்பு எனச் சொல்ல வேண்டும்.
முழுத் தொகுப்பையும் இன்று ஏறத்தாழ கால் நூற்றாண்டு கழித்து வாசிக்கும்போது 80, 90களில் நிகழ்ந்த தமிழ் இலக்கியச் சொல்லாடல்களுக்குள் நாம் பயணிக்கிற அனுபவத்தை அடைய முடிகிறது.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற கையோடு 1988இல் எழுத்தாளர் ம.அரங்கநாதன் ‘முன்றில்’ இதழைத் தொடங்கியுள்ளார். முதல் இதழில் எந்த இடத்திலும் எந்த மாதம், எந்த ஆண்டு என்பது இல்லை. சிறப்பாசிரியர் க.நா.சுப்பிரமணியம் என்று மட்டும் இருக்கிறது. இரண்டாவது இதழ் அக்டோபர் 1988இல் வெளிவந்தது.
க.நா.சு.வைச் சிறப்பாசிரியராகக் கொண்டு நான்கு இதழ்கள் வெளிவந்துள்ளன. 5, 6, 7, 8 ஆகிய இதழ்களில் ஆசிரியர் பெயர் இல்லை. இடையில் க.நா.சு. மறைந்துவிட்டதால், ஆசிரியர் பெயர் இடப்படாமல் இருக்கலாம்.
இந்த இதழ்களில் க.நா.சு. குறித்த, பார்க்கக் கிடைக்காத முக்கியமான கட்டுரைகள் பரவலாக இடம்பெற்றுள்ளன. 9, 10, 11, 12 ஆகிய நான்கு இதழ்கள் அசோகமித்திரனைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளன. 13, 14, 15, 16, 17, 18, 19, ஆகிய ஏழு இதழ்களும் ஆசிரியர் பெயர் இல்லாமலேயே வெளிவந்துள்ளன. இவ்வாறு ஜனவரி 1996 வரை, பல இடைவெளிகளோடு மொத்தம் 19 இதழ்கள் வெளிவந்துள்ளன.
இந்தத் தொகுப்பில் மிக அற்புதமான பல கட்டுரைகள் அமைந்துள்ளன. க.நா.சுப்பிரமணியத்தின் ‘இலக்கிய ஆசிரியரின் பார்வை’, ‘வறுமை ஒழியட்டும்’, ‘சிறு பத்திரிகை’ என்கிற தலையங்கக் கட்டுரை - எல்லாமே இன்றும் வாசிப்பு அனுபவம் தருபவையாக அமைந்துள்ளன. அசோகமித்திரனின் ‘எது முக்கியம்?’ என்கிற மொழிபெயர்ப்பு பற்றிய கட்டுரையும் ‘விருதுகளும் போட்டிகளும்’ என்ற நமது பரிசுக் கலாச்சாரத்தைப் பற்றிய கட்டுரையும் இன்றைய வாசகர்கள் வாசிக்கத்தக்கவை.
மேலும், உலகத் திரைப்படம், ஓவியம், சிற்பம், இசை ஆகிய நுண்கலைகளில் அரங்கநாதன் ஆர்வம் மிக்கவர் என்பதால், அவை குறித்த ஆழமான கட்டுரைகளும் வாசிக்கக் கிடைக்கின்றன. இந்திரனின் ‘ஆதிமூலத்தின் அரூப ஓவியங்கள்’ அப்படிப்பட்ட ஒன்று. வல்லிக்கண்ணனின் ‘இன்றைய இலக்கியத்தின் நிலைமை’ என்று தலைப்பிட்ட கட்டுரை நம்முடைய சமகாலத்து நிலைமையையும் பிரதிபலிப்பதாக உள்ளது ஆச்சரியம்தான். ஞானியின் ‘மரபுக் கவிதையை ஏன் பயில வேண்டும்?’ என்ற கட்டுரையும் அப்படிப்பட்ட ஒன்றுதான் .
சுஜாதா எழுதிய ‘மஞ்சள் ரத்தம்’ என்ற கதை குறித்து து.ரவிக்குமார் தலித்தியப் பார்வையில் எழுதிய கட்டுரையும் அக்கட்டுரைக்கு மறுப்பாக ராஜன் குறை எழுதிய கட்டுரையும் அன்றைக்கு நடந்துள்ள இலக்கிய உரையாடல், எவ்வளவு ஆழமாகவும் மேன்மையான முறையிலும் நடந்துள்ளது என்பதை இன்றைய வாசகர்கள் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகும்.
இதுபோலவே தமிழவன், நாகார்ஜுனன் ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இருத்தலியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சார்த்ரின் ‘மீள முடியுமா?’ என்ற நாடகத்தை வெளி ரெங்கராஜன் அதன் கனம் குறையாமல் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இலக்கிய இதழுக்கு எப்போதுமே சுவை கூட்டுவது வல்லிக்கண்ணனுடைய வார்த்தையில் சொல்வதென்றால் ‘அக்கப்போர்’ எழுத்துகள்தான் என்பது தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரமிள், வெங்கட் சாமிநாதன் ஆகியோரும் ‘முன்றி’லில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
முன்றில் தொகுப்பில் பெரிதும் ஆர்வம் கொள்ளத்தக்கதாக அமைந்தவை ‘முன்றில் செய்திகள்’, ‘அக்கம் பக்கம்’, ‘முன்றில் தன் விளக்கம்’ ஆகிய தலைப்புகளில் அமைந்த பகுதிகளாகும். ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில் தமிழ் இலக்கியச் சூழலில் நடந்த நடப்புகளை அறிந்துகொள்வதற்கான ஆவணங்கள் இவை.
முன்றில் இதழ்கள்
(முழுத் தொகுப்பு)
பரிதி பதிப்பகம்
விலை: ரூ.1,250
தொடர்புக்கு: 72006 93200
- தொடர்புக்கு:drpanju49@yahoo.co.in