

பாலகுமார் விஜயராமனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. ‘ஒருவன் எதைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறானோ, அதில் சொதப்ப வைப்பதுதான் விதியின் விளையாட்டு’ என நம்பும் எளிய மனிதர்களான ஆம்புலன்ஸ் ஓட்டுநர், புலம்பெயர் தொழிலாளர்கள், ஹோட்டல் சிப்பந்தி, இயந்திரங்களை இயக்கும் தொழிலாளி, குழந்தையைக் காக்க வாழ்வைப் பணயம் வைக்கும் எளிய தகப்பன், ஏக்கத்தை வாழ்வாகக் கொண்ட பெண்கள், நவீன வாழ்வில் தன்னைத் தொலைக்கும் பெண்கள், நிச்சயமற்ற வேலையில் வாழ்வைத் தொலைப்பவர்கள் எனச் சமகால சமூகத்தின் வாழ்க்கை சார்ந்த மனோபோக்குகளைக் கதைக்களமாக வைத்துள்ளார்.
ஆதிக்க மனப்போக்கைக் கொடிய விலங்குகளாகச் சித்தரித்து, அந்த விலங்கின் பெயர் ஆண் என முடிப்பதில் இருக்கும் உத்தி, எதையாவது செய்து வைரலாக்கித் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பதில் இருக்கும் நோய்க்கூறுகளைக் கதையாக்குவதில் இருக்கும் அனுபவம், தன் வளர்ப்புப் பறவையின் குஞ்சு பிழைத்தால் தன் குழந்தையும் பிழைக்கும் எனும் நம்பிக்கை கொண்டவனின் குழந்தையை அறிவியல் காப்பாற்றுவதில் இருக்கும் முரண் ஆகிய நுட்பங்கள் கவனிக்கத்தக்கவை. நஞ்சு மனிதர்களால் விதைக்கப்பட்டுச் செடியாக வளர்ந்து, மனித மனங்களுள் ஊடுருவிப் பெரும் மரமாக நின்று வாழ்வைச் சிதைக்கிறது என்பதன் காட்சிப்படுத்தலே ‘நஞ்சுக் கொடி’ தொகுப்பின் கதைகள். - ந.பெரியசாமி
நஞ்சுக்கொடி
பாலகுமார் விஜயராமன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 04652 278525
வளைகுடாவின் இந்திய மீட்பர்: வளைகுடா நாடுகளுக்குப் போய், கை நிறைய சம்பாதித்து, குடும்பத்தைக் கரை சேர்த்தவர்களின் கதைகள் மட்டுமே நம் சமூகத்தில் உரத்த குரலில் பேசப்படுகின்றன. பாலைவனப் பூமியில் சக மனிதர்களாலும் இயற்கையாலும் நேரும் பேரிடர்களில் சிக்கி, ‘சொந்த ஊரையும் உறவுகளையும் இனி ஒரு முறையாவது காண்போமா?’ என்ற ஏக்கத்துக்கு உள்ளானவர்களின் கதைகளுக்கு நம் செவிகள் அவ்வளவாகப் பழக்கப்படவில்லை.
அமானுல்லாவுக்கு அத்தகைய மக்களின் அழுகைகள் தற்செயலாக அறிமுகமாகின.
அமானுல்லா 1970களில் திருவனந்தபுரம் அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வேலைக்காக ஐக்கிய அரபு நாட்டுக்குச் சென்றவர். ஷார்ஜா மின்சாரம், குடிநீர் ஆணையத்தின் களப்பணிகளில் அவர் ஈடுபட்டார். துன்பத்தில் இருப்பவர்களுக்குத் தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படை மனித நேயம் கொண்ட அமானுல்லாவுக்கு, அத்தகைய சூழல்கள் அந்நிய மண்ணில் அமைந்துகொண்டே இருந்தன.
பிழைக்க வந்த இடத்தில் பல வகையான சிக்கல்களில் மாட்டிக்கொண்ட சக இந்தியர்கள் பலரைக் காலம் அவர் முன் நிறுத்தியது. தனக்குள் இருந்த மனிதநேயத்தை மரித்துப்போக விடாத அமானுல்லா, அவர்களுக்குத் தயக்கமோ அச்சமோ இன்றி உதவிக்கரம் நீட்டினார்.
அதனால் பலர் உயிர் பிழைத்தனர்; மிக மோசமான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்; எதிர்காலம் குறித்த நம்பிக்கையை முற்றிலும் இழந்திருந்த அவர்கள், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடிந்தது. அமானுல்லா என்றால் ‘மீட்பர்’ என்று பொருள்.
பணபலமோ, ஆள்பலமோ, சராசரி மனிதனுக்கான உடல் பலமோ இல்லாத அந்த எளிய தொழிலாளி மூலம், அவரைப் போலவே எளியவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வுகள்தான் இந்நூலின் பேசுபொருள். துரோகம், அவலம், இழிவு போன்றவற்றுக்கு இடையே பாலைவனச்சோலை போல அன்புக்கும் இந்த உலகில் இடம் இருக்கிறது என்ற ஆசுவாசத்தை அளிப்பதுதான் இதன் சிறப்பு. - ஆனந்தன் செல்லையா
பாலைச்சுனை தீபேஷ் கரிம்புங்கரை (தமிழில்: சுனில் லால் மஞ்சாலும்மூடு)
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044-24332424, 044-24330024
நினைவில் வாழும் ஜெயகாந்தன்: எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஜே.கே.) வாழ்வில் இடைப்பட்ட பதினோரு ஆண்டுகளில் (1994-2005) அவரோடு நெருக்கமாகப் பழகிய அவரது முதல் வரிசை நண்பர் கௌதமன். ஜெயகாந்தன் உடனான ஆசிரியரின் முதல் அறிமுகப் படலமே ஒரு சில அத்தியாயங்களுக்கு விரிவது ரசிக்கத்தக்கதாக உள்ளது. தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் ஜே.கே.வுடன் பயணம் செய்த அனுபவங்களையும் அப்போது நிகழ்ந்த அரிதான சம்பவங்களையும் தத்ரூபமாக நம் கண்முன் கொண்டுவரும் கட்டுரைகள் இவை.
இந்த நூல் ஆசிரியர் உடன் இருந்த அந்தக் காலகட்டத்தில் ஜே.கே. வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பல்வேறு சமூக, கலை இலக்கியக் கூறுகளுடன் பகிர்ந்துள்ளார். இலக்கிய உலகின் பல்வேறு ஆளுமைகளையும் அவர்களது சமூகப் பங்களிப்பையும் ஜெயகாந்தனின் நினைவுகளோடு நம்மிடம் முன்வைக்கிறது இந்த புத்தகம். இதில் இடம்பெற்றிருக்கும் தமிழின் பத்திரிகை உலகப் பிதாமகர்களான ‘மணிக்கொடி’ சீனிவாசன், ஏ.என்.சிவராமன், வல்லிக்கண்ணன் போன்றோரை வெளிப்படுத்தும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
ஜே.கே.வின் சில கதைகளைப் பற்றியும் அவரது உன்னதப்படைப்பான ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்தைப் பற்றியும் விரிவாக விவாதித்திருப்பது இந்த நூலின் முக்கியக் கூறுகளில் ஒன்று. ஜெயகாந்தன் மொழிபெயர்த்த ரொமெய்ன் ரோலண்டின் ‘வாழ்விக்க வந்த காந்தி’ குறித்த ஆசிரியர் பார்வையையும் நுட்பமாக இந்த நூல் பகிர்ந்துள்ளது. மேலும், காந்தியைப் பற்றிய ஜே.கே.வின் புதிய கண்ணோட்டமும் இதன் வழி வெளிப்பட்டுள்ளது.
ஜே.கே.வின் மணி விழா நிகழ்வில் அவர் ஆற்றிய அரிதான உரை சில அத்தியாயங்களில் அட்சரம் பிசகாமல் பதிவாகியுள்ளது சிறப்பு. இசையமைப்பாளர் இளையராஜாவை, ஜெயகாந்தனின் ‘பாரீசுக்குப் போ’ நாவலின் சாரங்கனோடு ஒப்புமைப்படுத்திய கட்டுரை புதிய பார்வை கொண்டது.
உலக இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் குறித்து ஜெயகாந்தனால் எழுதப்பட்ட புத்தகத்தோடு, டால்ஸ்டாயின் சமூக வாழ்வை ஒரு கட்டுரை ஆராய்கிறது. எளிமையும் நேர்மையும் வகுத்த தன் வாழ்வை ஜே.கே. எவ்வாறு கொண்டாடி நிறைத்தார் என்பதை இந்தப் புத்தகம் நமக்கு நெருக்கமாய்க் காட்டுகிறது. ஜெயகாந்தனின் இறுதிக் காலத்தை, நூல் ஆசிரியர் கௌதமன் தன் நினைவலைகள் வழி வாசகர்களுக்குத் தத்ரூபமாக இந்நூலில் உருவாக்கிக் காட்டுகிறார். - வர்த்தமானன், பதிப்பாளர்
ஜே.கே. சார்
கௌதமன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 99404 46650
அம்பேத்கரின் அரிய உரைகள்: சாதிப் பாகுபாடுகளிலிருந்தும் வன்கொடுமைகளிலிருந் தும் விடுபடத் தலித் மக்கள், இந்து மதத்திலிருந்து வெளியேறுவதும் பெளத்த மதத்தை ஏற்பதுமே தீர்வு என்று அம்பேத்கர் முன்வைத்ததார். 14.10.1956 அன்று நாக்பூரில் 10 லட்சம் பேரோடு சேர்ந்து அம்பேத்கர் பெளத்த மதத்தை ஏற்றார். இது தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் அம்பேத்கர் ஆற்றிய முக்கியமான உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
1935இல் மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள இயோலாவில் ஆற்றிய உரையில்தான் ‘நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்று அம்பேத்கர் அறிவித்தார். இந்த உரையின் முழு வடிவம் கிடைக்காத நிலையில் அதன் சாராம்சமான நான்கு வரிகள் மட்டுமே பரவலாக அறியப்பட்டிருந்தன. பகவான் தாஸ் என்பவர் தொகுத்த ஒரு நூலில் இயோலா உரையின் வேறு சில பகுதிகளும் இருந்துள்ளன. அவற்றையும் சேர்த்து இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது.
1930களில் மகாராஷ்டிரத்தின் கல்யாண், தாதர், பாந்த்ரா ஆகிய இடங்களில் அம்பேத்கர் ஆற்றிய உரைகள் நாக்பூரில் பெளத்தம் ஏற்ற மறுநாளில் ஆற்றிய புகழ்பெற்ற உரை ஆகியவற்றோடு வேறு சில உரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இயோலா மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையைப் பாராட்டி 20.10.1935 அன்றைய ‘குடி அரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கமும், எம்.சி.ராஜாவுக்கு பதில் அளிக்கும் விதமாக அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையும் நூலின் பின்னிணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
அம்பேத்கர் பெளத்தம் ஏற்ற நிகழ்வின் 60ஆம் ஆண்டை ஒட்டி 2016இல் இந்நூலின் முதல் பதிப்பு வெளியானது, தலித் முரசு தொடங்கப்பட்டு 25ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி 2022 இல் இந்நூலின் ஏழாம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நவீன இந்தியாவின் மகத்தான புரட்சியாளரான அம்பேத்கர் தன் வாழ்வில் எடுத்த முக்கியமான முடிவையும் அதன் பின்னணியையும் அதைச் செயல்படுத்துவதற்கான அவரது பயணத்தையும் உள்வாங்கிக்கொள்வதற்கான ஆவணம் இந்நூல். - கோபால்
நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
டாக்டர் அம்பேத்கர்
தமிழில்: தாயப்பன் அழகிரிசாமி
வெளியீடு: தலித் முரசு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 76670 33666