Published : 28 Apr 2018 08:54 AM
Last Updated : 28 Apr 2018 08:54 AM

நைஜீரியாவின் இலக்கிய முகங்கள்

சினுவா அசேபே

ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை. காலனியாதிக்கத்தின் பாதிப்புகளையும், அது தொல்குடி மக்களின் வாழ்வில் அடையாளச் சிக்கல்களை ஏற்படுத்தியதையும் தனது எழுத்துக்களின் அடிநாதமாகக் கொண்டிருந்தார். ஒரு கற்பனை நாடு, அரசு, அதன் ராணுவச் செயல்பாடுகள், தலைவரின் பதவி வெறி போன்றவற்றையும், அறம் வெல்ல வேண்டும் என்ற முடிவுடனும் தனது அழுத்தமான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர் இவர்.

வோலே சோயின்கா

இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். நைஜீரிய இலக்கியத்தின் முகமாகப் பார்க்கப்படுகிறார். இவரது நாடகங்கள், கவிதைகள், புதினங்கள் பெரும்பாலும் கட்டுடைத்த சமூக, அரசியல் பிரக்ஞைகளைச் சுதந்திரமாக விவரிக்கின்றன. நாட்டின் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் காத்திரமான விமர்சனத்தைத் தொடர்ந்து முன்வைத்ததால், அச்சுறுத்தல் காரணமாகச் சில வருடங்கள் நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்தது. அந்நாட்களில் ராணுவ அரசாங்கத்தால் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், குடியாட்சி மலர்ந்ததும் மீண்டும் நாடு திரும்பி சுதந்திரமாக வாழ்ந்துவருகிறார்.

சிமாமந்தா அடிச்சி

நவீன புனைவுலகின் அடையாளம். வளங்களை இழந்த நாட்டின் நலிந்த பொருளாதாரச் சூழலில் இளைய சமுதாயத்தினரின் நிச்சயமற்ற எதிர்காலம், புலம்பெயர நேரும் நிர்ப்பந்தங்கள், அதன் பிறகும் தீராத இனப் பிரிவினைகளால் கறுப்பின மக்கள் எதிர்கொள்ளும் விளிம்புநிலை வாழ்வு, தனிமை, அவமானம் இவற்றையெல்லாம் தன் எழுத்துகளின் மையக்கருவாகக் கையாள்கிறார். பெண்களின் சுயமும் இருத்தலும் இவரது படைப்புகளின் ஆன்மாவாக இருக்கின்றன.

“இலக்கியம் அதன் தூய்மைத் தன்மைக்காக மட்டுமே படைக்கப்படக் கூடாது, காலத்தின் நிகழ்வுகளுக்கேற்பத் தாக்கங்களை ஏற்படுத்தும் வரைவுகளைத் தாங்கி இருக்க வேண்டும். அதுவே பொறுப்பான எழுத்து” என்று குறிப்பிட்டார் சினுவா. நைஜீரிய இலக்கியங்கள் வாழ்வியலிலிருந்து ஒருபோதும் விலகியதில்லை. துயர வாழ்வு, அரசின் அடக்குமுறை, சமூக அவலம், சிதைந்துபோன தொன்மத்தின் விழுமியங்கள் போன்றவற்றின் இடையே மாறாத நம்பிக்கையுடன் வாழும் மானுடர்களின் கதையை அது எழுதிச்செல்கிறது.

- லதா அருணாச்சலம்

தொடர்புக்கு: lathaarun1989@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x