Published : 07 Apr 2018 09:44 AM
Last Updated : 07 Apr 2018 09:44 AM

நூல்நோக்கு : திருந்தச் சொல்லி, திருந்திடச் சொல்லி…

பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் படிக்கிற ஒருவர் வியப்புக்கு ஆளாகும் விஷயங்களில் ஒன்று, நீள நீளமான வாக்கியங்கள். ஆனால், அனைத்தும் எளிமையோ எளிமையாக இருக்கும். சொல்ல வந்த கருத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி, அதை நினைவில் பதியவைக்கும் முயற்சி அது. எப்போதும் அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனித மனத்தில், எந்தவொரு கருத்தையும் மூன்று முறை சொல்லி கவனத்தை ஈர்க்க முயற்சித்தது பவுத்தம். பெரியாரும் அதே அணுகுமுறையைக் கையாண்டார் என்று கொள்ளலாம்.

‘இல்லை, இல்லை, இல்லவே இல்லை’ என்ற முழக்கமே அதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. இந்த அடுக்குச் சொல் உபயோகம், ஒருபொருட் பன்மொழியாய் இன்னும்கூட அரசியல் மேடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பெரியார் பெருந்தொண்டரான சு.ஒளிச்செங்கோ, பெரியார் கையாண்ட அடுக்குச் சொல் தொடர்களை அகரவரிசையில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.

கூடவே, பெரியார் நாகம்மையின் காதல் திருமணம் பற்றிய கட்டுரை; க.நா.சுப்ரமணியம் உள்ளிட்ட விமர்சகர்கள் பெரியாரின் இலக்கியத் தரமான எழுத்துநடையைப்பற்றிக் கூறிய அபிப்ராயங்கள்; பெரியாரின் தாயார், கைவிடப்பட்ட வைணவ பிராமண சிறுவனை வளர்த்து படிக்கவைத்து சார்பதிவாளராக்கியது தொடர்பான கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் திருச்சியில் பெரியாரைச் சந்தித்து உரையாடிய பிறகு, ‘பெரியார் ஒரு மார்க்ஸியவாதி’ என்று பிளிட்ஸ் இதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம், ராஜாஜிக்கும் தனக்குமான உறவின் நெருக்கத்தைப்பற்றி பெரியார் எழுதிய கட்டுரை ஆகியவையும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விஜயபுரத்தில் 1967-ல் கடவுள் மறுப்பு முழக்கத்தை அறிவித்த நாட்களில், பெரியார் அபிதான கோசம் நூலைப் படித்துக்கொண்டிருந்தார் என்ற தகவலையும் இந்நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ள புகைப்படம் எடுத்துச்சொல்கிறது. அடுக்குச் சொல் தொடர்களோடு அவை இடம்பெற்ற வாக்கியங்களையும் சேர்த்திருக்கலாம்.

பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்

சு.ஒளிச்செங்கோ

சங்கமி வெளியீடு,

விலை- ரூ.60.

தொடர்புக்கு- தமிழ்வெளி,

90940 05600

- புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x