Published : 14 Apr 2018 09:47 AM
Last Updated : 14 Apr 2018 09:47 AM

தொடுகறி: ராகுல் கைக்குச் சென்ற பெருமாள்முருகன்

ராகுல் கைக்குச் சென்ற பெருமாள் முருகன்

கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரு வந்திருந்த ராகுல் காந்திக்குப் புத்தகங்கள் பரிசளிக்கும் காணொளியைத் தமிழக மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.

ஒரு தேசியத் தலைவரும் மாநிலத் தலைவரும் போல அல்லாமல் தன் தம்பிக்குப் புத்தகம் வாங்கித்தருவதைப் போல அவர்களின் நடவடிக்கையும் முகபாவனையும் இருந்தது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சித்தராமையா அன்பளிப்பாகத் தரும் புத்தகங்களில் ஒன்று, என்.கல்யாணராமன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமாள் முருகனின் சிறுகதைத் தொகுப்பான 'தி கோட் தீஃப்’.

இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு மலர்

இலக்கிய நிகழ்வுகள் நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். வெறுமனே நிகழ்வுகளை நடத்துவது என்பதைத் தாண்டி ஒவ்வொரு நிகழ்வுகளும் காணொளியாகவோ எழுத்துவடிவிலோ ஆவணமாக வேண்டும். அவ்வகையில் ரமணாலயம், உரையாடல், இராசபாளையம் தமிழ்ச்சங்கம், ‘வைகறை முரசு’ வாசகர் வட்டம் ஆகியோர் சார்பில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளின் உரைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டுவந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஏப்ரல் 21 அன்று இராசபாளையம் ரமணாலயத்தில், ஆ.இரா.வேங்கடாசலபதி இந்நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார். பூ.லோக நாகராஜா இந்நிகழ்வுக்குத் தலைமை ஏற்கிறார்.

விஜயா பதிப்பக விருதுகள்

விஜயா பதிப்பகத்தின் முன்முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளாக படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. மூன்றாவது ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியலை விஜயா வேலாயுதம் அறிவித்துள்ளார். ஜெயகாந்தன் விருது கலாப்ரியாவுக்கும், மீரா விருது யூமா வாசுகிக்கும், புதுமைப்பித்தன் விருது இசைக்கும், சக்தி வை.கோவிந்தன் விருது நூலகர் சுப்பிரமணிக்கும், வானதி விருது ஈஸ்வரி புத்தக நிலையம் ராமுவுக்கும் கிடைத்திருக்கின்றன. விருது வழங்கும் விழா ஏப்ரல் 22 அன்று கோவையில் நடைபெறவுள்ளது.

குழந்தை ஓவியன்

கிருஷ்ணகிரி ஆர்.சி.ஃபாத்திமா தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் கவிவேலன், சிறு வயதிலேயே ஓவியங்கள் வரைந்து அசத்திவருகிறார். பெற்றோர் கதிர்பாரதி, கவிதாபாய் இருவரும் கவிவேலனின் ஓவிய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு உற்சாகமூட்டியிருக்கிறார்கள். இதுவரை ஆயிரத்தும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கும் கவிவேலன், தனது ஓவியங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். ‘தூரிகை’ எனும் தலைப்பில் கவிவேலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஓவியங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இளம் ஓவியனின் தூரிகைப் பயணம் வண்ணமயமாகத் தொடரட்டும்!

‘காலத்தின் வாசனை’க்கு மரியாதை!

‘நீலமலை’ சிற்றிதழும், ‘நெருஞ்சி’ இலக்கிய இயக்கமும் இணைந்து வழங்கும் 2017-ல் வெளிவந்த சிறந்த கட்டுரை நூலுக்கான விருது, ‘தி இந்து’ தமிழில் வெளிவந்து நூலாக்கம் பெற்ற தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய ‘காலத்தின் வாசனை’ நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: மு.மு., ம.பாஸ்கரன், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x