

சரட்சந்த் தியம், சொரொக் கைபம் கம்பினி, தங்ஜம் இபோபிஷக், எஸ்.பானுமதி தேவி, ராபின் எஸ்.நங்கோம், யும்லெம்பம் இபோம்சா ஆகிய ஆறு கவிஞர்கள் எழுதியுள்ள 36 கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. பாரபட்ச அரசியலின் காரணமாக ஏற்பட்ட மணிப்பூர் கலவரம், அவ்விலக்கியங்களின் போக்கையே மாற்றிவிட்டது என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம்.
இயற்கை எழில் சூழ்ந்த வடகிழக்கு மாநிலம் மணிப்பூர். இயற்கை வளமும் எழிலும் எப்போதும் ஆபத்தானவை. இயற்கை வளமுள்ள பகுதிகளில் வாழ்வது பல நேரங்களில் சாபமாக மாறிவிடுகிறது. அதிகாரம் மிக்கவர்களால் எப்போது வேண்டுமானாலும் அந்நிலம் ஆதி குடிகளிடமிருந்து தந்திரமாகப் பிடுங்கப்படலாம்.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, வழக்கம்போல் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இரண்டு குழுக்களிடையே அவ்வப்போது நடைபெறும் கலவரங்களுக்கு ஆளும் அரசும் மறைமுகக் காரணமாக இருப்பதை உணர முடிகிறது.
பெண்கள் எதிர்கொண்ட மோசமான துயரங்களும் அந்நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட சுரண்டலையும் இக்கவிதைத் தொகுப்பு காத்திரமாக முன்வைக்கிறது. இக்கவிதைகள் அந்நிலத்திலுள்ள ஆதிக்க அரசியலின் தாக்கத்தைக் குறியீடுகளாக மாற்றிப் பேசுகின்றன.
அம்மக்களைப் பார்வையற்றவர்களாக மாற்றி, எஸ்.பானுமதி தேவி எழுதிய கவிதை முக்கியமானது. இம்மாநிலத்தின் பெரும்பான்மை குடிமக்கள் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள். மெய்தி என்றழைக்கப்படும் மொழியே மணிப்பூர் மக்களின் ஆதி மொழியாகக் கருதப்படுகிறது.
அதுவே, மணிப்பூர் இலக்கியம் வளர்ந்தமைக்குத் தோற்றுவாய். மெய்தி மொழியைப் பேசிய மக்களே இன்றைய மணிப்பூர் மொழியைப் பேசுகிறார்கள். இயற்கையை, மனிதனை, காதலைப் பற்றிப் பாடிக்கொண்டிருந்த தொடக்கக் காலக் கவிதைகளைப் போல இன்றைய மணிப்பூர் இலக்கியம் இல்லை என்பதையும் இத்தொகுப்பின் வழியாக அறிய முடிகிறது.
மணிப்பூர் மக்கள் இயற்கையின் ஒரு பகுதியாகவே தங்களைக் கருதிக்கொள்கிறார்கள். ‘எங்களது புற உடலை அப்புறப்படுத்த முடியும்/இம்மலைகளைச் சூழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் ஆன்மாவை/என்ன செய்ய முடியும்?’ என்கிற கேள்வியை ராபின் எஸ்.நங்கோமின் கவிதையொன்று கேட்கிறது. ஆதிக்கத்துக்கு எதிரான உலகக் கவிதைகளில் ஒன்றாக இக்கவிதை தன்னை இணைத்துக்கொள்கிறது. ஏனெனில், உலகம் முழுக்க மனிதர்கள் மீதான ஒடுக்குதலுக்கு ஒரே முகம்தான் என்று தோன்றுகிறது.
அதிகாரம் மிக்கவர்கள் மலைகள் மீதும் அங்கு வாழும் பூர்வ குடிகள் மீதும் அதிகாரத்தை முதலில் செலுத்துகிறார்கள். மலை என்றாலே வளம் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. இக்கவிதைகளை வாசிக்கும்போது நம் குறிஞ்சித்திணை மக்கள் நினைவுகளில் குறுக்கீடு செய்கிறார்கள்.
வளம் குன்றா பறம்பு மலையைப் பாரியும் கொல்லி மலையை ஓரியும் அதிகாரம் மிக்க மூவேந்தர்களிடம் இழந்ததை நினைவூட்டுகிறது. மலையடிவாரத்தில் பூர்வ குடிகளுக்கு எதிரானவர்கள் காலந்தோறும் தொடர்ந்து முகாமிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
மலையைக் கவர்தல் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்வதை இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் நினைவூட்டுகிறது. ‘எதுவும் கேட்க வேண்டாம்/அங்கே உள்ளே என்ன நடக்கிறது என்று/நம் பல்லும் நகமும் உடைந்திருக்கலாம்/பேசும் தைரியம் நம்மிடம் இல்லை/நம் தலையில் அடிபடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்/நாம் எதையும் உயர்த்தக் கூடாது/நீயும் ஒரு மனிதன்/நானும் ஒரு மனிதன்’.
எஸ்.பானுமதி தேவியின் ‘அம்மாவுக்காக’ என்னும் கவிதை, தாய்நாட்டுப் பற்று மிக்கவர்களாய் முன்பிருந்த தியாகிகள், இப்போது சத்தியத்தைக் கைவிட்டு மாறிய நிலையையும் பெருமித உணர்வுடன் பாடிய ‘வந்தே மாதரம்’ எனத் தொடங்கும் நாட்டுப்பாடல், புலம்பல் கீதமாக மாறி ஒலிப்பதையும் உணர்த்துகிறது.
மணிப்பூரில் அன்றாடம் நடக்கும் எண்ணற்ற அநீதிகளைக் கண்டும் அதற்கு எதிர்வினை ஆற்ற இயலாமல் தனது வாழ்க்கையை வெறுமனே நகர்த்திச் செல்பவனின் புலம்பலைப் ‘பூர்வீக நிலம்’ என்ற கவிதை காட்டுகின்றது. ஆதிக்க அரசின் தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம், நிலச்சூழல் கொடூரமான முறையில் அழிவுறுவதை நம் கண்முன் கொண்டுவருவதாய் ‘மோசமான இடங்கள்’ என்னும் கவிதை அமைகின்றது.
மணிப்பூரின் பழைய முகம் சிறிது சிறிதாகச் சிதைந்து வருகிறது. இயல்பாக இருந்த அந்நிலத்தின்மீது ஒப்பனைகள் பூசப்படுகின்றன. தாராளமயம் போன்ற நவீனத்துவக் காரணிகளால் மணிப்பூரின் நிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இக்கவிதைத் தொகுப்பு நம்முடன் பகிர்ந்துகொள்கிறது.
மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி. எதிர்காலத்தில் இலக்கியத்திலும் நினைவுகளிலும் மட்டுமே இருக்கக்கூடிய நிலமாக மணிப்பூர் மாறிவிடக் கூடாது. ஆற்றையே திசை மாற்றிவிடும் அதிகாரத்துக்கு எதிரான குரலாக, ‘எரியும் தீப்பிழம்புகளின் நூறு நாக்குகள்’ என்கிற இக்கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது.
துயரங்களைத் தீவிரத் தொனியில் எழுதும்போது படைப்பூக்கம் இயல்பிலேயே தன்னைச் சுருக்கிக் கொள்கிறது. இந்தத் தொகுப்பிலும் இது நடந்துள்ளது.
எரியும் தீப்பிழம்புகளின் நூறு நாக்குகள்
(தமிழில்: பா.இரவிக்குமார், ப.கல்பனா)
மலர் புக்ஸ்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 93828 53646
- தொடர்புக்கு: msoniya118@gmail.com