

மவ்லானா வஹீதுத்தீன் கானின் ‘Quranic Wisdom’ எனும் ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. ‘இறைவனின் படைப்புத் திட்டம்’தான் குர்ஆனின் பேசுபொருள். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டே திருக்குர்ஆனின் அனைத்து வசனங்களும் அமைந்திருக்கின்றன. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் இந்தப் படைப்புத் திட்டத்தைப் பல்வேறு கோணங்களில் விளக்குகின்றன; வாசகரைக் குர்ஆனிய ஞானத்தின் ஆழங்களுக்கு அழைத்துச்செல்கின்றன.
குர்ஆனை எப்படி வாசிக்க வேண்டும், குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்தின் மீதும் எவ்வாறு சிந்தனையைச் செலுத்த வேண்டும், அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளைத் திருக்குர்ஆனின் வழிகாட்டுதலோடு எவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்பவை குறித்தெல்லாம் இந்நூல் எளிய உதாரணங்களைக் கொண்டு விளக்குகிறது.
நம்முடைய வெற்றிகள் அனைத்தும் இறைவனின் படைப்புத் திட்டத்துடனான ஒத்திசைவில்தான் இருக்கிறது. இந்தப் படைப்புத் திட்டத்துக்கு எதிராகச் செயல்படும்போது மட்டுமே தோல்விகளை எதிர்கொள்ள நேர்கிறது என்கிறது இந்நூல்.
மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கட்டுரைகள் இவை. மவ்லானா வஹீதுத்தீன் கானின் நூல்கள் அனைத்துமே மனிதர்களின் உள்ளத்தில் இறை மேன்மையையும் இறையச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டவை. அந்த வரிசையில் இந்த நூலும் ஒன்று. வாசகர்கள் இந்தக் கட்டுரைகள் மூலமாக அகத்தூண்டுதல் பெறுவதும் இறை நெருக்கத்தை உணர்வதும் உறுதி. - ஃபைஸ் காதிரி
குர்ஆனிய ஞானம்
மவ்லானா
வஹீதுத்தீன் கான்
(தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி)
குட்வேர்ட் புக்ஸ்
விலை: ரூ.275
தொடர்புக்கு: 97908 53944
பொன் வால் நரியின் அதிசயக் கதை தெரியுமா? - தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தபோது, அவர் காலத்தில் வாழ்ந்த பாரதிக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை? பாரதியின் படைப்புகளையும் தாகூரின் படைப்புகளையும் ஒப்பிட்டு, பாரதிக்கு நோபல் பரிசு கிடைக்காததற்கு அவருடைய படைப்புகள் ஆங்கிலத்தில் அதிகம் வெளிவரவில்லை என்கிற காரணத்தைச் சொன்னதோடு, நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று வாசகர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுகிறார் நூலாசிரியர்.
நூறு ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட பாரதியின் பெண்ணியக் கருத்துகளை, இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மகாகவியின் மீதுள்ள பிரமிப்பு கூடுகிறது.
இப்படிப் ‘பொன் வால் நரியின் அதிசயக் கதை’யில் ஆரம்பித்து ‘வேதாந்தி பாரதி’ வரை 99 அத்தியாயங்களில் சுவாரசியமான தகவல்களை அளித்து, அவற்றை அலசி ஆராய்ந்து, உதாரணங்களுடன் எழுதியிருக்கிறார் என்.விஜயராகவன். ‘மகாகவி சுப்ரமணிய பாரதியார்’ என்கிற இந்த நூல், நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டது என்று நினைக்கும் அளவுக்குச் சிறப்பான மொழிபெயர்ப்பு, ஆங்காங்கே முழுப் பக்கப் படங்கள் என நேர்த்தியான தயாரிப்பாக இருக்கிறது. - எஸ்.சுஜாதா
மகாகவி சுப்ரமணிய பாரதியார்
என்.விஜயராகவன் (தமிழில்: பி.ஆர்.மகாதேவன்)
அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை: ரூ.600
தொடர்புக்கு: 92892 81314.
நம் வெளியீடு - நிர்வாக நூல்கள் குறித்த நூல்: தொழில்முறை நிர்வாக ஆலோசகரான டாக்டர் ஆர்.கார்த்திகேயன், வணிகம், நிர்வாகம் ஆகியவை குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிய தெளிவான அறிமுகத்தை ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் தொடர்ந்து கட்டுரைகளாகக் கவனப்படுத்தினார். அந்தக் கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகளைச் சேர்த்து வெளிவந்திருப்பதே ‘வணிக நூலகம்' என்னும் இந்த நூல்.
வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இவரின் எழுத்தாற்றலின் பலமே, சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதுதான். புகழ்பெற்ற வணிக நிறுவனங்களின் முதலாளிகள் முதல், சிறிய அளவில் ‘ஸ்டார்ட் அப்' நிறுவனத்தைத் தொடங்கி, அதை அசுர வளர்ச்சிக்குக் கொண்டுசென்றவர்கள் வரை பலர் எழுதிய புத்தகங்களை, அவற்றின் சிறப்புகளை, அவர்கள் கடந்துவந்த சோதனைகளை நம் கண்முன் இந்நூல் விவரிக்கிறது.
வணிக நூலகம்
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.180
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74012 96562