எஸ்.வி.ராஜதுரை: 85 - தமிழ் அறிவுலகின் பேராளுமை

எஸ்.வி.ராஜதுரை: 85 - தமிழ் அறிவுலகின் பேராளுமை
Updated on
2 min read

சமகாலத் தமிழ் அறிவுச்சூழலை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளுடனும் அவற்றைத் தாண்டியும் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், மனித உரிமை சார்ந்த படைப்புவெளியில் மட்டுமல்லாது, களப் போராளியாகவும் இயங்கிவருகிறார்.

நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன் என்கிற வரிசையில் தமிழ் அறிவுச்சூழலுக்குப் பாரிய பங்களிப்பை நல்கியவர் எஸ்.வி.ராஜதுரை. தமிழ் அறிவுலகுக்கு மக்கள் சார்ந்த கருத்தியல், அரசியல் தெளிவை தமது எழுத்துகளில் அவர் வழங்கியுள்ளனர். மேற்கண்டவர்களது எழுத்துகள், பார்வைக் கோணங்களில் வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படைகள் ஒன்றாக அமைந்தன. இந்த அறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

அரசியல், கருத்தியல் முரண்பாடுகளையும் தாண்டி ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றோருடன் நட்பைப் பேணியவர் எஸ்.வி.ஆர். ழான் பால் சார்த்தர், புரட்சியின் இலக்கணமாகத் திகழ்ந்த அந்தோனியா கிராம்ஷி, போர்த்துக்கீசிய நாவலாசிரியர் ஹொஸே ஸரமாகோ போன்ற ஆளுமைகளைத் தமிழ்ச்சூழலில் விரிவாக அறிமுகப்படுத்தியவர் எஸ்.வி.ஆர்.

மார்க்சியத் தத்துவம் சார்ந்து எழுதினாலும் அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாகவும் விரிவாகவும் உரிய சான்றாதாரங்களையும் கொண்டு எழுதும் பாணியைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

யானிஸ் வருஃபாகிஸின் ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’, ‘இரத்தம் கொதிக்கும்போது’ (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) ஆகிய மொழியாக்கங்களும் ‘ஸரமாகோ - நாவல்களின் பயணம்’, ‘ரஷியப் புரட்சி: இலக்கிய சாட்சியம்’ போன்றவை அவருடைய முக்கியமான பங்களிப்புகள். விரைவில், ‘உச்சிவெயில்’ தொகுப்பும் வெளியாகவுள்ளது.

இது ஒருபுறம் மனநிறைவளித்தாலும் 1848இல் 23 பக்கங்களில் வெளியான மார்க்ஸ் எங்கல்ஸ் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யை மொழிபெயர்த்து அனைவருக்கும் புரியும் வண்ணம் அறிமுகம், விளக்கக் குறிப்புகள் என விளக்கமான நூலை எழுதினார்.

‘அந்நியமாதல்’, ‘இருத்தலியமும் மார்க்ஸியமும்’ என்ற இரண்டு நூல்களும் அந்நியமாதல் குறித்து எழுதியவை. வ.கீதாவுடன் இணைந்து ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’, ‘ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்’, ‘கடைசி வானத்துக்கு அப்பால்’ போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

வ.கீதாவுடன் இணைந்து ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற விரிவான ஆய்வுநூலையும் எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ நூல் எஸ்.வி.ஆரால் எழுதப்பட்டு வெளிவந்தது. இவற்றின் துணைநூலாக ‘பெரியார் மரபும் திரிபும்’, ‘ஆகஸ்ட் 15 துக்கநாள் – இன்பநாள்’ ஆகிய நூல்களும் வெளிவந்தன.

2007-08இல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியாரியல் உயராய்வு மையத் தலைவராகப் பணியாற்றினார். இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையின் மொழியாக்கம் குறுநூலாக வெளியானது. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தொடர்பான திரிபுகளுக்கு மறுப்பாக அவர் எழுதியவை ஆயிரம் பக்கங்களைத் தாண்டும்.

மரணதண்டனை எதிர்ப்பு, தடா, பொடா சட்ட எதிர்ப்பு, தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக களப்போராளியாகக் களம் கண்டார்.

ஏப்ரல் 10 அன்று தனது 85வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்த எஸ்.வி.ராஜதுரை, எழுத்துப் பணிகளிலிருந்து விடைபெறும் முடிவை அறிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக முகநரம்பு வலியால் அவதியுற்று வரும் நிலையில், சில மாதங்களாக வாதை பல மடங்கு அதிகரித்துள்ளதால் எழுத்துப் பணியிலிருந்து ‘விடைபெறுதல்’ தலைப்பிலான அவரது கட்டுரை வெளியாகியுள்ளது.

‘‘ஒரு மனிதன் தனது தொழில்பாட்டில் நிகழ்த்தும் கடைசிச் செயல் (Swan song). இதனால் சமுதாயத்திற்கோ எழுத்துலகிற்கோ எந்த இழப்பும் இல்லை” என இது குறித்துக் கருத்துத் தெரிவித்தார் எஸ்.வி.ஆர். இது அவருக்கான சுமை இறக்கமாக இருந்தாலும், தமிழ் அறிவுலகத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் இழப்பாகவே அமையும்.

“இனி இலக்கிய வெளியைப் பொறுத்தவரையில் வாசிப்பு மட்டுமே ஒரே உறவு. எப்போதேனும் பிடித்த கவிதைகளை உடல்நிலை அனுமதிக்கும் அளவிற்கு மொழிபெயர்க்கலாம்” என்று சொல்லியிருப்பது சற்று ஆறுதலைத் தருகிறது.

- தொடர்புக்கு: musivagurunathan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in