Published : 21 Apr 2018 09:46 AM
Last Updated : 21 Apr 2018 09:46 AM

தொடு கறி: புத்தக தினப் பெருவிழா

பு

த்தகக் காதலர்களுக்கோர் நற்செய்தி! உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை-பெரியார் திடலில் ‘சென்னை புத்தகச் சங்கமம்’ தொடங்கிவிட்டது. ஏப்ரல் 25 வரை நடைபெறும் இந்நிகழ்வில் எல்லாப் புத்தகங்களும் 50% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. தற்போது பதிப்பில் இல்லாத பல அரிய பொக்கிஷங்கள் இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கின்றன. அனுமதிக் கட்டணம் கிடையாது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் அமர்வுகள் நடைபெற உள்ளன. புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று வீ.அரசுக்கும், லிங்கத்துக்கும் சிறந்த வாசகர் விருதான ‘புத்தகர்’ விருது வழங்கப்படுகிறது!

புத்தகப் பரிமாறல்!

சென்னை வடபழனியில் செயல்பட்டு வரும் ‘பியூர் சினிமா’, ஏப்ரல் 22, 23 இரு தினங்களும் புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வதற்காக வாசகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பழைய புத்தகங்களைக் கொண்டுசென்று ஒரு பெட்டியில் போட்டுவிட்டு, அருகிலுள்ள பெட்டியிலிருந்து வேறொரு புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும், உலகின் சிறந்த நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஞாயிறு முழுவதும் திரையிடப்படுகின்றன. வாசகர்கள் படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம். சிறப்பான கருத்துப் பகிர்வுக்குப் பரிசும் காத்திருக்கிறது.

நூல் விமர்சனப் போட்டி

தமிழில் நூல் விமர்சனங்கள் அருகிவரும் சூழலில், விமர்சனக் கலையை ஊக்குவிக்கும் வகையில் நூல் அறிமுக / விமர்சனப் போட்டியை நடத்துகிறது ‘அந்திமழை’ மாத இதழ். சிறப்பான விமர்சனம் எழுதி முதல் பரிசை வெல்பவருக்கு ரூ.10,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விமர்சனங்கள் 300 முதல் 600 சொற்களுக்குள் இருக்க வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: andhimazhaimagazine@gmail.com. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15/6/2018.

மீண்டும் அண்ணா!

நீட் தேர்வுக்கு எதிராக உலகத் தமிழர் அமைப்பு நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்திருக்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் கர்க சாட்டர்ஜி. இன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில், அவரது ‘உனது பேரரசும் எனது மக்களும்’ (ஆழி பதிப்பகம்) புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்வில், அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார். அண்ணாவின் எழுத்துகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய இந்தத் தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது இந்நிகழ்வு!

பெண் எழுத்து!

‘புத்தகம் பேசுது’ சார்பில் ‘சமகால தமிழக இலக்கியப் பரப்பில் பெண் படைப்பு (1950-2017)’ எனும் சிறப்புக் கருத்தரங்கம் கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

தொகுப்பு:

மானா பாஸ்கரன், மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x