நூல் நயம்: ஒரு பள்ளியின் கதை

நூல் நயம்: ஒரு பள்ளியின் கதை
Updated on
4 min read

தேனி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு தொடக்கப்பள்ளி ஈராசிரியர் பள்ளியானது குழந்தைகள் எண்ணிக்கைக் குறைவால் எப்படியெல்லாம் துயரப்படுகிறது, செயல்படுகிறது, அங்கு இருக்கக்கூடிய குழந்தைகளை இருத்திக்கொள்வதற்கும் புதிய குழந்தைகளைச் சேர்ப்பதற்கும் ஒரே ஆசிரியராக இருந்து கவிதா எவ்வளவு துயரப்படுகிறார் என்பதை இந்த நாவல் இயல்பாகச் சொல்கிறது. இழுத்து மூடப்படுகிற ஓர் அரசுப் பள்ளியை நாவல் களமாகக் கொண்டுள்ளது.

ஈராசிரியர் பள்ளியில் இருக்கக்கூடிய வேதனைகளும் ஈராசிரியர் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் அரசாங்கத்தின் பணிகளுக்காக வெளியே சென்றுவிட்டால், மிச்சமுள்ள ஒரே ஆசிரியர் எப்படி எல்லாம் சிரமப்படுகிறார் என்பதனையும் நாவல் பேசுகிறது.

ஓராசிரியர் பள்ளியில் ஓர் ஆசிரியரே ஐந்து வகுப்புகளிலும் படிக்கும் மாணவர்களுக்கும் அனைத்துப் பாடங்களையும் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் நிர்வாகச் சிக்கல்களையும் எதிர்கொண்டு எப்படியெல்லாம் அவர்கள் வாழ்க்கையை மன அழுத்தத்துடன் கடந்து வருகிறார்கள் என்பதைப் பதிவுசெய்துள்ளது.

ஓர் ஆசிரியரின் பணி சார்ந்த சிக்கல்களுக்கு அப்பால் குடும்பத்தில் ஒரு பெண் ஆசிரியர் வகிக்கும் பொறுப்புகள் குறித்தும் தொட்டுப் பேசுகிறது நாவல். தலைமை ஆசிரியருக்கும் உதவி ஆசிரியருக்கும் நடக்கும் உரையாடல்கள், ஆசிரியர்களான கனகாவுக்கும் கவிதாவுக்கும் இடையிலான நட்பு, ஆட்டோ பிடித்து மாணவரை அழைத்து வரும் ஆசிரியர், குடும்பச் சண்டையால் - தொழில் செய்வதால் ஊர் மாறும் குடும்பங்கள், அவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் காட்சிகள், மதிய உணவு சமைப்பதில் உள்ள சிக்கல் எனப் பல விஷயங்களைத் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்களுடன் என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது.

ஆசிரியர்கள் பலரது மெத்தனத்தால் அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியடைகின்றன என்பதையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை நூலாசிரியர். கல்வி உரிமைச் சட்டத்தின் பேரில் இங்குள்ள குழந்தைகளைப் பல கோடி ரூபாய் பணம் கொடுத்து, இதுவரை பல வருடங்களில் எத்தனை லட்சம் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கு அரசு அனுப்பியிருக்கிறது என்பதைப் பற்றியும் இந்த நாவல் சிந்திக்க வைக்கிறது.

கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைத் தெள்ளத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார் நாவலாசிரியர். 25 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளியில் அரசு நிதியால் படிக்கக்கூடிய கல்வி உரிமைச் சட்டத்தால் ஒவ்வொரு பள்ளியும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது நாவலில் ஒரு சான்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வியின் அத்தனை சிக்கல்களையும் பேசுகிறது நூல். அங்கே நிலவக்கூடிய ஆசிரியர்களுடைய மனோபாவம், ஊர் மக்களின் நடத்தை, தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், அரசின் மெத்தனம், கல்வி உரிமைச் சட்டத்தின் மாற்ற வேண்டிய கூறுகள், ஆசிரியர்களின் அலட்சியம் என ஒட்டுமொத்தமாகத் தமிழகப் பள்ளிக் கல்வியின் நிலையைப் பேசுகிறது நாவல். - சு.உமா மகேஸ்வரி, ஆசிரியர்; தொடர்புக்கு: uma2015scert@gmail.com

ஓரெண்டே... ரெண்டே... (நாவல்)
இதயநிலவன்

பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 044-24332424

ஒளிரும் கவிதை மனம்

அய்யப்ப மாதவனின் 18ஆவது கவிதை நூல் இது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைத் தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரின் முந்தைய கவிதை நூல்களான ‘எஸ் புல்லட்’, ‘புத்தனின் விரல் பற்றிய நகரம்’ ஆகியன பரவலாகக் கவனம்பெற்ற நூல்கள். முன்னுரை, வாழ்த்துரை, அணிந்துரை, ஆய்வுரை எனப் பல பெயர்களில் வாசகரை நூலின் தொடக்கத்திலேயே நிறுத்திவைக்காமல், சட்டெனக் கவிதைக்குள் நுழைய அனுமதித்திருப்பது நல்ல அம்சம்.

‘ஒரு கவிஞன் எப்போதும்/உலகைக் கவிதைகளில் காண்கிறான்’ என்று சொல்லும் கவிஞர், தனது கவிதைகளின் வழியாகப் புதிய உலகம் ஒன்றைச் சமைத்துள்ளார். அன்பே உருவான அவ்வுலகுக்குள் மைனாக்களும் மஞ்சள் பூக்களும் சிட்டுக்குருவிகளும் வெள்ளை நிலாவும் மாசுபடாத நதிகளும் நம்மை இரு கரம் விரித்து அழைக்கின்றன.

‘உன் பறவையை யாரோ / திருடப் பார்க்கிறார்கள் / உன் இரவின் தனிமையை யாரோ / அபகரிக்கப் பார்க்கிறார்கள் / உன் கவிதையின் புனைவை / யாரோ எடுக்கப் பார்க்கிறார்கள்’ என்று எழுதியிருக்கும் கவிஞரின் கவிதையை யாராலும் எளிதில் எடுத்துவிட முடியாது. அது, எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் கவிதை. - மு.முருகேஷ்

உன் பெயர் நட்சத்திரமல்ல
அய்யப்ப மாதவன்

அன்னம் வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 75983 06030

மணிப்பூர் அனுபவங்கள்: மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் 2022 நவம்பரில் நடந்த இலக்கிய விழாவில் வட கிழக்கு மாநிலங்களின் படைப்பாளிகளுடன், வங்கதேசம், திபெத், மலாவி, லசோதோ, யேமன் நாடுகளின் பன்மொழி எழுத்தாளர்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருமொழி எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரது அந்தப் பயண அனுபவமே இந்நூல்.

பொறியியலாளராகவும் சூழலியலாள ராகவும் கவிஞராகவும் இருமொழி எழுத்தாள ராகவும் இருக்கும் ஒருவரின் பயணப் பார்வை எவ்வளவு கூர்மையாகவும் நுட்பமாகவும் அழகியலுடனும் வாசகரும் பயணத்தில் பங்கெடுத்தது போன்றதொரு அனுபவத்தையும் தரும் என்பதற்கு ‘மணிப்பூர் நினைவுகள்’ நூல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

வெறும் அனுபவமாக மட்டுமல்லாது, கொல்கத்தாவிலிருந்து மணிப்பூர் விமான நிலையம் வரையில் சந்தித்த நெருங்கிய நட்புகள், புதிய நண்பர்கள் என அன்பின் அடர்வு, மணிப்பூரின் வரலாறு, மொழி, கலாச்சாரம், இலக்கியம், சுற்றுச்சூழல், உணவு முறை, அங்கு வாழும் கானுயிர்கள், நீர்நிலைகள், மிதக்கும் மேடை, கோட்டைகள், அரசர்கள், அரசிகள், எழுதப்பட்ட நூல்கள், மண்சார்ந்த பாடல்கள், நடனம், அருங்காட்சியகம், ஓவியம், சிற்பம், சாலைகள், அதையொட்டியுள்ள வயல்கள், மலைகள் எனப் பல்வேறு காட்சிகளை, நிகழ்வுகளை நம் கண் முன் விரியவைக்கிறது இந்நூல்.

மணிப்பூரில் மாலை நான்கு மணிக்கே சூரியன் மறைந்துவிடும் என்கிற செய்தி அந்நிலப்பரப்பின் உயரம், இன்னும் பலவற்றை ஆய்வுகொள்ளச் செய்கிறது. ஃபௌஒய்பி உணவு விடுதி பற்றிய குறிப்பு வருகிறது. ஃபௌஒய்பி என்றால் நெல் என்பது நேரடிப் பொருள். கூடுதலாக விவசாயம், செழிப்பு ஆகியவற்றின் அதிதேவதையான பெண் தெய்வத்தையும் அது குறிக்கும்.

மணிப்பூருக்கு மட்டுமே உரிய மான் இனத்தின் பெயர்தான் சங்காய். அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய மான் இனத்தைக் காக்கும் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு, சங்காய் விழா நடைபெறுகிறது என்பது ஒருசேர மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.

பிரபல மணிப்பூர் ஓவியக் கலைஞர் ஆர்.கே.சி.எஸ். என அழைக்கப்படும் ராஜ்குமார் சந்திரஜித்சனாவின் மூல ஓவியங்கள் இடம்பெற்றுள்ள அருங்காட்சியகம் பற்றியும் இதில் எழுதியுள்ளார். மணிப்பூர் இந்திய யூனியனுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பற்றிய ஓவியத்தில் மணிப்பூர் சார்பில் ஒப்பமிட்டவர்களின் முகத்தில் தெரிந்த கவலை ஆகியவற்றை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளதை நூலாசிரியர் கவனத்துடன் பதிவுசெய்துள்ளார்.

மணிப்பூரின் இறை வழிபாடு குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. பண்டைய மெய்த்தி வழிபாட்டு நெறியான சனமாஹிசம் வீழ்ச்சியடைய, பிராமண மக்கள் மணிப்பூருக்குக் குடிபெயர்ந்து, வைஷ்ணவக் கடவுளரை வணங்கும் முறை வளர்ந்துள்ளது. இப்படித்தான் மெய்த்தி வைஷ்ணவத் தோற்றம் பெற்றதாக செவிவழிச் செய்தியை நூல் கூறுகிறது. இந்நூல், இந்தியக் கலாச்சாரப் பண்பாட்டு மையத்திலும் மணிப்பூர் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட வேண்டிய நூல் என முன்மொழியலாம். - கோ.லீலா எழுத்தாளர், தொடர்புக்கு: leelpammu@gmail.com

மணிப்பூர் நினைவுகள்
ஐயாத்துரை சாந்தன்

வெண்புறா வெளியீடு
விலை: ரூ.60

யானைக்குத் தும்பிக்கை வந்தது எப்படி? - இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரரான ருட்யார்டு கிப்ளிங்கை அறியாத சிறார் இருக்க முடியாது. அவர் எழுதிய ‘தி ஜங்கிள் புக்’ நாவலாகவும் திரைப்படமாகவும் சிறார்களின் மனதைக் கொள்ளைகொண்டது. அதேபோல கிப்ளிங் தன் மகள் ஜோசபினுக்குச் சொன்ன சிறுகதைகளும் மிகவும் புகழ்பெற்றவை. வயது வித்தியாசமின்றி அனைவரையும் ரசிக்க வைப்பவை. ‘யானைக்குத் தும்பிக்கை வந்தது எப்படி?’, ‘திமிங்கலத்துக்குத் தொண்டை சிறிதானது எப்படி?’, ‘ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி?’ என்பதைப் போன்று 10 சுவாரசியமான கதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. சிறார் விரும்பும் விதத்தில் பெரிய எழுத்துகளில், படங்களோடு கூடிய பெரிய புத்தகமாக இருப்பது கூடுதல் சிறப்பு. - விஜி

தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி
(ருட்யார்டு கிப்ளிங் கதைகள்)

தமிழில்: கோகிலா
பட்டர்ஃப்ளை புக்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 75500 98666

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in