

மேனாள் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகப் பிரஞ்சுத் துறைத் தலைவர் சுந்தரவேலு பன்னீர்செல்வம், ஆல்பெர் காம்யுவின் ‘மகிழ்ச்சியான மரணம்’ (La mort heureuse) நாவலை மொழிபெயர்த்துள்ளார்.
இந்த நாவலை காம்யு 1936இல் தனது 23 வயதில் எழுதத் தொடங்கித் திருப்தி இல்லாமல் அப்படியே விட்டுவிட்டுப் பிறகு ஆறு ஆண்டுக்குள் புகழ்பெற்ற ‘அந்நியன்’ நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். 44 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. 47 வயதில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவர் இறந்து 11 ஆண்டுகள் கழித்து 1971இல் இந்த ‘மகிழ்ச்சியான மரணம்’ நாவல் வெளியிடப்பட்டது. ஆல்பெர் காம்யு வழக்கம்போல் இந்த நாவலிலும் வாழ்வு குறித்த தன் தத்துவ விசாரணைக்குக் கதையை ஒரு சிறு துரும்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
ஊழியம் செய்து பிழைக்கும் பத்ரீஸ் மெர்சோ இந்நாவலின் கதைத் தலைவன். விபத்து ஒன்றில் இரண்டு கால்களையும் இழந்து, பல ஆண்டுகளாக ஒரே நாற்காலியில் முடங்கிக் கிடக்கும் பணக்காரனான ஜாக்ரெஸின் நட்பு அவனுக்குக் கிடைக்கிறது. ஊனமுற்ற அந்தப் பணக்காரன் வாழ்வதற்கு விரும்பாமல் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான்.
ஆனால், முடியவில்லை. புதிய நண்பனான மெர்சோவிடம் “சாக விரும்பும் என்னை நீ கொலை செய்வதனால் அது குற்றம் ஆகாது; மேலும், இதன் மூலமாக என்னுடைய பணம் எல்லாம் உனக்குக் கிடைக்கும். நீ மிச்ச வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழலாம்” என்று சொல்லி ஒத்துக்கொள்ளவும் வைத்துவிடுகிறான். அதன்படியே அவனைக் கொலை செய்துவிட்டு ப்ராக் நகருக்குப் பயணம் செய்யத் தொடங்கிவிடுகிறான் மெர்சோ.
தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொள்கிறான். பயணத்தில் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கண்டடைகிறான். பணம், பணமென்று தேடுவதற்காகத் தனக்கான நேரத்தைக் கொலை செய்யும் கொடூரமான வாழ்விலிருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிட்டதாகவும் கூடவே இந்தப் பணத்தின் மூலம் கிடைத்த தன் நேரத்தைத் தன் விருப்பப்படி வடிவமைத்துக்கொள்ளத் தனக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்கிறான்.
இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட கடமை என்றும் நம்புகிறான். இறுதியாக அல்ஜீரியாவுக்குத் திரும்புகிறான். தனக்குப் பிடித்தமான நிலப்பரப்பில் தனக்கான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். கடைசியில், இறக்கும்போது இறுதிவரை சுயநினைவோடு இருந்து மரணம் அடைகிறான்.
இப்படி மரணம் அடைவதை ‘உணர்வு மரணம்’ என்கிற தலைப்பின் கீழ் இரண்டாவது பாகமாகவும், மெர்சோவால் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பன் ஜாக்ரெஸின் மரணத்தை ‘இயற்கை மரணம்’ என்கிற தலைப்பில் முதல் பாகமாகவும் நாவலைத் தனது அபத்தக் கோட்பாட்டுக்கேற்ப வடிவமைத்து வழங்கியுள்ளார் காம்யு.
இந்த நாவலில் வாசகர்களை வசக்கி இழுத்துப் போடும் பெரிய நிகழ்ச்சிகள், உத்திகள் என்று எதுவும் இல்லைதான். ஆனால், அத்தியாயம் 4இல் கொலை செய்யப்படும் கால்கள் இல்லாத பணக்காரன் ரோலண்ட் ஜாக்ரெஸ், தன்னைக் கொலை செய்யப் போகும் மெர்சோவுடன் நடத்தும் உரையாடல் படிக்கின்ற யாரையும் தனக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது.
“ஒரு மனிதன் தனது உடலின் தேவைகளுக்கும் மனதின் தேவைகளுக்கும் இடையில் எவ்வாறு சமநிலையைக் கொண்டுவருகிறான் என்பதைப் பொறுத்தே எப்பொழுதும் தீர்மானிக்கப்படுகிறான்”; “உன் உடலின் வரம்புகளை அறிவதுதான் உண்மையான உளவியல்.
நாமாக இருப்பதற்கு நமக்கு நேரமில்லை. மகிழ்ச்சியாக இருக்க மட்டுமே நமக்கு நேரம் இருக்கிறது”; “பணம் இல்லாமல் ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்”; “மகிழ்ச்சிக்குப் பணம் தேவையில்லை என்று நம்புவதற்குச் சில மேல்தட்டு மனிதர்களிடம் ஒருவித ஆன்மிக மோகம் இருப்பதை நான் கவனித்தேன். இது முட்டாள்தனமானது. இது தவறு. மேலும் ஓரளவுக்கு இது கோழைத்தனமானது”
இவ்வாறு நாவல் முழுவதும் மனித வாழ்வில் வினை புரியும் நுட்பங்களை மொழிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இறுதியில் மரணத்தை மனிதர்கள் எவ்வாறு நேருக்கு நேர், சுயநினைவுடன் எவ்விதக் கோழைத்தனமும் இன்றித் திறந்த கண்களோடு பார்த்தவாறே எதிர்கொள்ள வேண்டும் என்பதை மெர்சோவின் இறுதிக் கணங்களை விவரிப்பதன் மூலம் காம்யு காட்சிப்படுத்தி விடுகிறார்.
தமிழ் மொழிபெயர்ப்பில் அங்கங்கே சில நெருடல்கள் தென்பட்டாலும் காம்யு எழுதும் பின்னலான தத்துவார்த்த மொழியாடலை மொழிபெயர்க்கும்போது இது தவிர்க்க முடியாததுதான் என்று தோன்றுகிறது. அடுத்த பதிப்பில் ஒற்றுப் பிழைகள், தொடர்ப் பிழைகள் இல்லாமல் கவனமாகக் கொண்டுவர முயல வேண்டும். ஆனால், பெரும்பாடு படாமல், தமிழ் ஆர்வம் இல்லாமல் இவ்வளவு பெரிய மொழிபெயர்ப்புச் சாதனையைச் சாதித்துக் காட்ட முடியாது என்றும் பாராட்டத் தோன்றுகிறது.
மகிழ்ச்சியான மரணம்
ஆல்பெர் காம்யு
(பிரஞ்சிலிருந்து தமிழில்: சுந்தரவேலு பன்னீர்செல்வம்) தடாகம்
விலை: ரூ. 200
தொடர்புக்கு: 98400 70870
- தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in