Published : 15 Apr 2018 10:56 AM
Last Updated : 15 Apr 2018 10:56 AM

மக்கள் மொழியில் மகாபாரதம்: பெண்களின் துயர நாடகத்தை மையப்படுத்தும் தனித்துவமான பிரதி

வி

ல்லிபாரதம் துவங்கி பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’, எம்.வி.வெங்கட்ராமின் ‘நித்திய கன்னி’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உப பாண்டவம்’, ஜெயமோகனின் ‘வெண்முரசு நாவல் வரிசை’ எனத் தமிழகத்தில் மகாபாரதம் படைப்பாளிகளை எக்காலத்திலும் வசீகரித்தபடியேதான் உள்ளது. இந்திய அளவிலும் எம்.டி.வாசுதேவ நாயர், பைரப்பா, காண்டேகர் எனப் பல எழுத்தாளர்களும் பாரதத்தின் கதைகளை எடுத்தாண்டுள்ளார்கள். பாரதத்தை மீளுருவாக்கம்செய்யும் மரபு என்பது மகாகவி காளிதாசனில் இருந்தே துவங்குகிறது. சாகுந்தலம் அத்தகைய முயற்சியே. ‘அர்ஜுனனின் தமிழ்க் காதலிகள்’ என்றொரு தமிழக நாட்டாரியல் பாரதக் கதைகளின் தொகுப்பையும் அ.கா.பெருமாள் கொண்டுவந்துள்ளார். வியாச பாரதக் கதையுடன் பிராந்திய நாட்டாரியல் தொன்மங்கள் இணைந்து ஒரு கதை பெருவெளியை உருவாக்குகிறது. யட்ச கானம், தெருக் கூத்து, நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், உபன்யாசங்கள், திரைப்படங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் மகாபாரதம் இந்திய மக்களின் வாழ்வுடன் நெருக்கமாக பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இவ்வரிசையில் பூமணியின் ‘கொம்மை’யும் இணைந்துகொள்கிறது.

ஒவ்வொரு வாசிப்புக்கும் அதற்குரிய தனிச்சையான வசீகரம் உண்டு. மறுகுரலில், மகாபாரதம் எனும் அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள ‘கொம்மை’, பெண்களின் துயர நாடகத்தை மையப்படுத்தும் பிரதியாக மக்கள் மொழியில் தனித்தன்மையுடன் உருவாகியுள்ளது. ‘ஆதிக்கத்தால் அலைக்கழியும் அபலைகளுக்கு’தான் நாவலை அர்ப்பணித்துள்ளார் பூமணி.

சத்தியவதி, குந்தி, காந்தாரி, திரௌபதி, இடும்பி, உத்தரை என விழைவுகளின், விதியின் விசையில் துன்புறும் பெண்களின் கதைகளைக் கரிசனத்துடன் அணுகியிருக்கிறார் பூமணி. காந்தாரி, போருக்கு முன் தான் கண்ணைக் கட்டி திரட்டிய தவ ஆற்றலை மகனுக்குச் செலுத்துவதற்காகக் கட்டை அவிழ்த்துத் துரியனைக் காண்பதுதான் நாமறிந்த பாரதக் கதை. ஆனால், ‘கொம்மை’யில் குருக்ஷேத்திரத்தில் கவுரவர்கள் மாண்டுபோன பின்னர் அப்போதாவது அவர்களின் முகத்தை இறுதியாகக் காண வேண்டும் என்பதற்காகக் கண் கட்டை அவிழ்க்கும்போது அந்தத் துயரத்தின் வீச்சு முந்தைய வடிவத்தைக் காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக நம்மைச் சூழ்கிறது.

நாமறிந்த பாரதக் கதையிலிருந்து விலகி சில புதிய கதைகளைப் பூமணி சொல்கிறார். தெருக் கூத்து, நாட்டாரியல் தளங்களிலிருந்து எடுத்தாண்டிருக்கலாம் அல்லது அவரே உருவாக்கியுமிருக்கலாம். அதற்கான சுதந்திரத்தை பாரதம் எப்போதும் படைப்பாளிகளுக்கு அளித்தே உள்ளது. அதன் காரணமாகவே இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விரவிப் பரவ அதனால் முடிந்தது.

வட்டார வழக்கில் உரையாடல்கள் மிளிர்கின்றன. கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமமான உரையாடல்கள் இரண்டு அணுக்கமான நண்பர்கள் பேசிகொள்வதாக இருப்பது அவர்களை நமக்கு நெருக்கமாக்குகிறது. கிருஷ்ணனைக் கறுத்த மச்சான் என்றே அர்ஜுனன் அழைக்கிறான். கர்ணனின் மனைவி பொன்னுருவி பற்றிய கதை நாட்டார் மரபில் உள்ளது.

கண் தெரியாத ராதை புளிய மரத்தை, ‘ஒங்கிட்ட காய்க்கிற பழம் அதிகமா வாடாமலும் முழுக்கப் பழுக்காமலும் ஆகட்டும்’ என்று சபிப்பதும்கூட நாட்டார்த் தன்மை கொண்ட கதைதான். யதார்த்தக் கதையாகச் சுருக்கிவிடாமல் பாரதத்தின் மாயத்தன்மையையும் தக்கவைத்தபடி இரண்டுக்கும் இடையில் சமநிலை பேண முயன்றுள்ளார். அவ்வப்போது நாவலில் சில எளிய பாடல்கள் வருகின்றன; அவற்றில் சில ரசிக்கும் படியாகவும் சில துருத்தலாகவும் தென்பட்டன. சாமானிய மனிதர்களின் கதை எனும் தளத்தில் பயணிப்பதாலேயே, பூமணி ஏற்றுக்கொண்ட பேசுபொருளுக்கு இணங்க, கீதை உபதேசம், பீஷ்மரின் அம்புப் படுக்கை உபதேசம் போன்ற தத்துவப் பகுதிகள் எதிர்கொள்ளப்படாமல் கடக்கப்படுகிறது.

600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில், மக்கள் மொழியில் உணர்ச்சிபூர்வமானக் காவியமாகப் படைத்திருக்கிறார் பூமணி.

- சுனில் கிருஷ்ணன்,

தொடர்புக்கு: drsuneelkrishnan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x