Published : 03 Feb 2018 10:43 AM
Last Updated : 03 Feb 2018 10:43 AM

தொடுகறி: பொதிய வெற்பனின் புத்தகப் பயணம்

எரி நட்சத்திரம்

டந்த ஆண்டு (பிப். 3) மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமாருக்கு, நாளை (பிப். 4) மாலை சென்னை - கவிக்கோ மன்றத் தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் க.சீ. சிவகுமார் இறுதியாக எழுதிய குறுநாவலும் சிறுகதைகளும் ‘எரி நட்சத்திரம்’ என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ளன. இதே நிகழ்வில் அவருடைய மகள் ஸ்வேதா சிவசெல்வி எழுதிய `பயத்தின் திருவிழா' என்கிற சிறார் நாவலும், வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில், முதல் சிறுகதைத் தொகுதிக்கான க.சீ.சிவகுமார் நினைவுச் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கார்த்திக் பாலசுப்பிரமணியன். நரன் மற்றும் ரமா சுரேஷ் ஆகியோருக் குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கவிதைக் குடும்பம்

செஞ்சியில் கடந்த வாரம் நடைபெற்ற குறிஞ்சி விழாவில் சாந்தா – ஆதிலட்சுமியின் ‘கொக்காம் பயிர்’ கவிதை நூல் வெளியிடப்பட்டது. சிறப்பு என்னவென்றால், சாந்தாவின் மருமகள்தான் ஆதிலட்சுமி. தமிழ்க் கவியுலகில் மாமியார் - மருமகள் இருவரின் கவிதைகளும் ஒரே நூலாக வருவது இதுவே முதல்முறை. இருவரின் கவிதைகளிலும் பெண்கள் படும்பாடுகள் வட்டார மொழியில் பதிவாகியுள்ளன. ‘என் அம்மா எழுதிய கவிதைகளையும், என் மனைவி எழுதிய கவிதை களையும் ஒரே நூலாக பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” என நெகிழும் செந்தில் பாலாவும் கவிஞர் என்பது இன்னொரு சிறப்பு!

அலைகளின் கவிமுகம்!

28 ஆண்டுகளாகத் தான் நடத்திவரும் பதிப்பகத்தின் பெயரால் அறியப்படுபவர் ‘அலைகள்’ சிவம். டொமினிக் லேப்பியர்-லேரி காலின்ஸ் எழுதிய ‘ஃப்ரீடம் அட் மிட் நைட்’ நூலை ‘நள்ளிரவில் சுதந்திரம்’ எனத் தமிழில் பதிப்பித்ததோடு, சிக்மண்ட் ஃபிராய்ட், நான்கு வேதங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு என முக்கியமான பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஒரு பதிப்பாளராக மட்டுமே அறிந்திருந்த ‘அலைகள்’ சிவம், 1970-களில் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘என் காலத்தில் சில கவிதைகள்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளார். ‘அலைகள்’ வெளியிடும் நூல்கள் வழியே சமூக மீள்பார்வைக்கு வழிவகுத்தவர், தனது கவிதைகளின் வழியாகவும் சமூக விமர்சனங்களை முன்வைக்கத் தவறவில்லை.

எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராய விருதுகள்...

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்துவருகிறது. ஆறாவது ஆண்டாக, 2017-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது மு.ராஜேந்திரன் (வடகரை), பாரதியார் கவிதை விருது ப.முத்துசாமி (மலையினும் மாணப் பெரிது), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது உதயசங்கர் (பச்சை நிழல்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது டி.என்.ராமச்சந்திரன் (த பொயட்டிக்கல் வொர்க்ஸ் ஆஃப் திருலோக சீதாராம்), பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது ப.மு.நடராசன் (நீர் மேலாண்மை), ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது பெ.சுப்பிரமணியன் (கொங்கு நாட்டுப்புற இசைக் கருவிகள்), விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது அகளங்கன் (முற்றத்துக் கரடி), அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது ப.திருஞானசம்பந்தம் (பதினெண் கீழ்க்கணக்கின் யாப்பமைதி) ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்குத் தலா ரூ.25 ஆயிரமும் கடந்த புதனன்று பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன. விழாவில், வாழ்நாள் சாதனையாளருக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது சோ.ந.கந்தசாமி, சிறந்த தமிழறிஞருக்கான பரிதிமாற் கலைஞர் விருது கா.செல்லப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

பொதியவெற்பனின் புத்தகப் பயணம் ...

இலக்கிய வட்டத்தில் ‘பொதிகைச் சித்தர்’ என்றறியப்படும் வே.மு.பொதியவெற்பன், எப்போதும் அசராமல் இயங்கிக்கொண்டே இருக்கும் தீவிர படைப்பாளி. வரும் பிப்.11-ல் பொதியவெற்பனின் மகன் ஆ.பொ.பாக்யவினோத்-இராமலட்சுமி மணவிழா சிங்கம்புணரியில் நடைபெறவிருக்கிறது. மகனின் பெயருக்கு முன்னால், தனது மனைவி ஆண்டாளின் பெயரையும் முன்னெழுத்தாகச் சேர்த்தவர் பொதியவெற்பன். தான் கலந்துகொள்ளும் எல்லாக் கூட்டங்களுக்கும் நூல்களைக் கொண்டு சென்று அறிமுகப்படுத்தும் பொதியவெற்பனின் இல்ல மணவிழாவில் நூல் அறிமுகம் இல்லாமலா இருக்கும்..?

தொகுப்பு: மு.மு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x