

தமிழில் ‘கருக்கு’ நூலுக்குப் பிறகு வந்த தலித் பெண் ஒருவரின் தன்வரலாறு நூல் ‘கலக்கல்’ (1994). இந்நூலை எழுதிய விடிவெள்ளி, இறையியல் பயின்று, துறவற மடத்தில் இளம் கன்னியாஸ்திரியானவர். தன் உழைப்பால் அதன் துணைத் தலைவி ஆனவர். உடலையும் உள்ளத்தையும் உருக்கிய தன் பல்லாண்டுத் தவ வாழ்க்கை எப்படி முரண்களுடன் பயணிக்க வைத்தது; தனக்கான விடியலை விடிவெள்ளி எப்படிக் கண்டுகொண்டார் என்பதை இந்த நூல் காட்சிப்படுத்துகிறது.
திருச்சபையில் பெண்களின் குரல் எப்படி நசுக்கப்படுகிறது என்பதை பெண்ணியப் பார்வையில் ஆவணப்படுத்தியிருக்கிறார் விடிவெள்ளி. துறவற மடத்து ஆதிக்க சாதிப் பெண்களுள் அக்காள், தங்கை, அத்தை, சித்தி, பெரியம்மா, பேத்தி என உறவுக்கொடி அறுந்துபோகாமல் உயிர்ப்புடன் ஓடுகிறது.
இதற்கு மாறாக வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், திறமை குறைந்தவர்கள், மடங்களில் தங்கள் முக்கியத்துவத்தை எப்படி இழக்க நேரிடுகிறது, இதன் காரணமாக உடல் மற்றும் உளச் சிக்கலுக்குத் தலித் பெண்கள் எப்படி ஆட்படுகின்றனர் என விளக்கியிருக்கிறார்.
திருச்சபையில் பணி செய்யும் பெண்கள் மதக் கட்டமைப்பின் இறுக்கம், ஆணாதிக்கம், சாதியப் பாகுபாடு என மும்முனைத் தாக்குதலுக்குள்ளாகின்றனர் என்பதை இந்நூலின் சம்பவங்கள் சொல்கின்றன. வாட்டிகனில் வளமழை பொழிகிறது எனக் காட்டமாக விமர்சிக்கிறார் நூலாசிரியர்.
மாடமாளிகைகளில் வசிக்கும் போப், செல்வம் கொழிக்கும் தேவாலயங்களுடன் ஒப்பிட்டு ஏழை மக்களின் நிலையைக் கூறி மனம் வெதும்புகிறார். இளம்வயதில் கன்னியாஸ்திரியாக ஆசைப்பட்டு மாயவலைக்குள் சிக்கிக்கொள்ளும் பெண்கள், அதைவிட்டு விடுபடவும் இயலாமல், அதன் வரையறைகளை ஏற்கவும் இயலாமல் அல்லலுறுவதைத் தன் சொந்த ஆன்மப் பயணத்தின் மூலம் நமக்குக் காட்டுகிறார்.
‘ஒடுக்கப்பட்டோரிடமிருந்து மெல்ல மெல்ல மக்களை அந்நியப்படுத்தும் அசுர சக்தி கொண்டவை துறவற மடங்கள்’ எனச் சொல்கிறார். சபைகளுக்கு வரும் தலித் சகோதரிகள் எப்படி எளிய மக்களிடமிருந்து காலப்போக்கில் அந்நியப்பட்டுப் போகிறார்கள் எனச் சுயசாதிப் பெண்களையும் நேர்மையுடன் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார் விடிவெள்ளி.
அதே சமயம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பணிசெய்ய வேண்டும் என அவர் தன் கருத்தை முன்வைத்தபோது, ‘அவுங்க அந்த தாழ்ந்த ஜாதியில பொறந்ததுனாலதான் அவுங்க ஜாதிக்காரனுக்கே உழைக்கணுமுனு சொல்றாங்க’ எனச் சில மூத்த சகோதரிகள் முணுமுணுத்ததை வலியுடன் பதிவுசெய்கிறார்.
அரைகுறை ஆங்கிலக் கல்வியை நோக்கி சபையாரைத் திருப்பிவிட்டுத் தமிழின் பக்கவேர்களை நிறுவனப்படுத்தப்பட்ட மதம் அறுத்தது எனத் தன் மொழிப் பற்றை வெளிப்படுத்துகிறார். ‘பணவேட்டைக்காரர்களும் பதவிவேட்டைக்காரர்களும் ஒரு நாளும் சமதர்ம சமுதாயத்தை விரும்பமாட்டார்கள்’ என்று பெரியார் சொன்னதை அவர் திருச்சபைக்குள் அதிகமாக உணர முடிந்ததாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் வழி அவரது ஆழ்ந்த வாசிப்பும், சிந்தனைத் தெளிவும், அரசியல் புரிதலும் தெளிவாகத் துலங்குகிறது. - நிவேதிதா லூயிஸ்
கலக்கல்
விடிவெள்ளி
தடாகம் வெளியீடு
விலை: ரூ.120
தொடர்புக்கு: +91-98400 70870
நம் வெளியீடு: சிறார்களுக்கான திரைப்படங்கள்: படிக்கிற வயதில் திரைப்படம் பார்த்துச் சிறுவர்கள் சீரழிந்து விடுகிறார்கள் என்பதே பெரும்பாலும் இளையோர் குறித்த கவலையாகச் சமூகத்தில் உள்ளது. திரைப்படங்கள் குழந்தைகளைக் கெடுத்துவிடும் என்று புலம்புவதால் நெடுங்காலமாக நாம் இரண்டு விதமான சிக்கல்களுக்குள் சிக்கிச் சுழன்றுகொண்டிருக்கிறோம். ஒன்று, நல்ல சினிமாவைச் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தத் தவறுகிறோம்.
இரண்டாவது, நிதர்சனத்தைக் கண்மூடித்தனமாக ஏற்க மறுத்து நம் கண் முன்னே குழந்தைகள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்க வழி தெரியாமல் மறுகுகிறோம். உண்மையில் நாம் பேச வேண்டியது, எந்த மாதிரியான சினிமா, சமூகத்தை உய்விக்கும் என்பதே. அத்தகைய திரைப்படங்களை இளையோருக்கு அறிமுகம் செய்துவைத்தாலே போதும். அப்படியான நல்ல உலகத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் நூல் இது.
ஆசிரியருக்கு அன்புடன்
கலகல வகுப்பறை சிவா
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.160
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562