

சைக்கிளில் வரும்போது ஏற்பட்ட ஒரு விபத்தால், மருத்துவமனையில் படுத்திருக்கும்போது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் வைக்கம் முகமது பஷீர். எழுத்தாளராவது என்று முடிவுசெய்கிறார். ஆனால், கதையோ கவிதையோ எழுதிப் பழக்கமில்லை என்றாலும், அனுபவங்கள் இருப்பதால் கதை எழுத முடிவெடுக்கிறார்.
ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று என்ன எழுதலாம் என்று கேட்கிறார். எதையாவது எழுது என்கிறார்கள். ஹாஸ்டலுக்குச் செல்கிறார். ஜன்னல் வழியே ஒரு குழாயடியில் ஏராளமான பெண்கள் தண்ணீருக்காக நிற்கிறார்கள்.
ஹாஸ்டல் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களில் ஒரு காதலி இருக்கிறார். அவர்களுக்குப் பிடிக்காத ஒரு பெண்ணை பஷீர் எடுத்துக்கொள்கிறார். அந்தப் பெண்ணைப் பற்றிய கதை ‘என் தங்கம்’ என்கிற பெயரில் பிரசுரமாகிறது.
பஷீரின் முதல் கதை அனுபவத்தோடு, இந்தக் கட்டுரையில் அவர் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. தகழி சிவசங்கரப் பிள்ளை பத்தாம் வகுப்பில் படிக்கும்போதே கதைகளை எழுதிக்கொண்டேயிருக்கிறார்.
ஒரு காதல் கதைக்குத் தன்னுடன் படிக்கும் கமலம் பெயரை வைத்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிடுகிறார். தலைமையாசிரியரிடமிருந்து நோட்டீஸ் வருமோ என்று பயத்தில் இருக்கிறார். ஐந்தாம் நாள் கமலம் அந்தக் கதையைத் திருப்பித் தருகிறார்.
அதில் ‘எ வெரி குட் ஸ்டோரி, கங்கிராஜுலேஷஸ்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதுதான் அவர் கதைக்குக் கிடைத்த முதல் வாழ்த்து. கதைகள் எழுதிவந்த தகழி, தேர்வில் தோற்றுவிடுகிறார். பாடம் படித்த கமலம் மேல்வகுப்புக்குச் சென்றுவிடுகிறார். அதனால், அந்தப் பள்ளியைவிட்டுச் சென்றுவிடுகிறார் தகழி.
ஆண்கள் எழுதினால் புனைவு என்றும் அதையே பெண்கள் எழுதினால் உண்மை என்றும் சமூகம் காலம்காலமாக நம்பிவருகிறது. அம்ருதா ப்ரீதம் எழுதிய கவிதையில் வரும் ராஜன் யார் என்று அவர் அப்பா கேட்க, அப்படி யாரும் இல்லை என்று அம்ருதா மறுக்க, காகிதத்தைக் கிழித்து எறிந்துவிடுகிறார். பிறகு, நிறைய கவிதைகளை எழுதி, பஞ்சாபில் உள்ள இலக்கிய இதழில் அவை அடிக்கடி பிரசுரமாகின.
அம்ருதா தன் முதல் கதையை எழுதி, அந்தப் பத்திரிகைக்கு அனுப்புகிறார். அதை வாங்கிக்கொண்டாலும் பிரசுரிக்கவில்லை. காரணம் கேட்கும்போது, ‘கவிதை மட்டும் எழுதுங்கள். கதை வேண்டாம்’ என்கிறார்கள். தன்னைப் பற்றியுள்ள நம்பிக்கை நம்மிடமிருந்துதான் வர வேண்டும், பத்திரிகை ஆசிரியரிடம் இருந்தோ விமர்சகரிடம் இருந்தோ இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் அம்ருதா. இப்படிப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் 13 பேர் எழுதிய முதல் கதை அனுபவங்கள், அவர்கள் எழுதிய கதைகளைப் போலவே சுவாரசியமாக இருக்கின்றன. - எஸ்.சுஜாதா
எழுத்து மேதைகளின் முதல் கதைகள்
தொகுப்பும் மொழியாக்கமும்: குறிஞ்சிவேலன்
அகநி வெளியீடு
விலை: ரூ.125
தொடர்புக்கு: 94443 60421.
தமிழ்வழி ஆங்கிலக் கையேடு: தமிழ்வழியில் கல்வி கற்று, மதுரை செல்லூர் நெசவுத் தொழிலாளர்களுக்கு 15 ஆண்டுகள் ஆங்கிலம் கற்பித்தவர் நலங்கிள்ளி. தமிழ்வழியில் கல்வி கற்றவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெறுவது கடினம் என்கிற தயக்கத்தை உடைக்கும் வகையில் ஆங்கிலம் உள்ளிட்ட எந்த அந்நிய மொழியையும் கற்பதற்குத் தாய்மொழிப் புலமை அவசியம் என்று கூறுவதோடு, தமிழ் வழியிலேயே ஆங்கிலத்தைக் கற்பிக்கும் இந்த நூலை எழுதியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் 764 பக்கங்களுடன் ஒரே நூலாக வெளியானது ‘ஆங்கில ஆசான்’. இப்போது அந்த நூலின் ஒவ்வொரு இயலும் 11 தனித் தனி நூல்களாக நன்செய் பிரசுரம் மலிவு விலைப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
Be, வினைச் சொல், modals, tense, active voice, passive voice என ஆங்கிலத்தின் இன்றியமையாத கூறுகள் அனைத்தும் இந்த நூல்களில் விரிவாகக் கையாளப்பட்டுள்ளன. கடைசி நூல், அன்றாட ஆங்கில உரையாடல்களுக்கான பயிற்சி வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது அன்றாட நடைமுறை ஆங்கிலப் பேச்சுக்குப் பயன்படும். தமிழ் வழியில் ஆங்கிலம் கற்க விரும்புவோருக்கு இந்த நூல் தொகுப்பு நல்ல துணை என்று சொல்லலாம். - கோபால்
ஆங்கில ஆசான்
நலங்கிள்ளி
நன்செய் பிரசுரம்
விலை: ரூ.300
(11 நூல்களும் சேர்த்து)
தொடர்புக்கு: 9566331195, 9789381010
சிந்தனையின் எழுத்தோவியம்: மூத்த தமிழறிஞர் ஒளவை நடராசன், தனது 85ஆவது அகவையிலும் தொடர்ந்து தளர்வின்றி எழுதிக்கொண்டிருந்த சிறப்புக்குரியவர். ஆங்கில மொழியைச் சேர்த்தெழுதுவதைப் போலவே, தமிழிலும் சேர்த்தெழுதும் இயல்பினர். தட்டச்சு, கணினி ஆகியவற்றின் உதவியை நாடாமல், கடைசிக் கடிதத்தையும் தனது கையெழுத்திலேயே எழுதியவர்.
ஒளவை நடராசன் கைப்பட எழுதிய நூல்களுக்கான ஆய்வுரை, வாழ்த்துரை, கடிதங்கள், நினைவஞ்சலிக் குறிப்புகள், நூல் குறிப்புகள் என அனைத்தையும் பொக்கிஷம்போல் தொகுத்து வைத்திருந்த அவரது புதல்வர் ஒளவை அருள், 180 கைப்பிரதிகளையும் அப்படியே ஆவணமாக்கியுள்ளார். ஒரு பக்கம் கையெழுத்துப் படி, மறுபக்கம் எழுத்துருவில் எனப் பார்ப்பதற்கு, படிப்பதற்கு இலகுவாகவும் நூலைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
நூல் முழுக்கப் பொருத்தமான படங்களை இணைத்திருக்கும் பொன்னேரி பிரதாப்பின் பணியும் சிறப்பானது. பிறமொழிக் கலப்பில்லாமல் செறிவான தமிழில் எழுதியிருக்கும் ஒவ்வொரு சிறுகுறிப்பும் இன்றைய தலைமுறையினருக்குத் தமிழின் சிறப்பினை உணர்த்தும் எழுத்தோவியமாக அமைந்துள்ளது. - மு.முருகேஷ்
ஒளவையின் சிந்தனைப் புதையல்
ஒளவை அருள்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 96000 64311