Published : 17 Feb 2018 09:13 AM
Last Updated : 17 Feb 2018 09:13 AM
அன்புள்ள மாணவனே
மாணவச் செல்வங்களுக்கு வெ.இறையன்பு எழுதியிருக்கும் 30 கடிதங்களின் தொகுப்பே இந்நூல். ‘மடல்’ என்றே இக்கடிதங்களைக் குறிப்பிட்டு, ஓர் அடையாளத்தைப் பதிவுசெய்கிறார். ‘இவை அறிவுரையில்லை; உன்னை உயர்த்திக்கொள்ள உனக்கு உதவும் எனது எளிய ஆலோசனை’ என்கிற அடையாளம்தான் அது. பாடப் புத்தகங்களுக்குள் தங்கள் எதிர்காலத்தைத் தோண்டி எடுக்கும் புதையல் வேட்டைக்காரர்களாகக் கல்விக்கூடங்கள் மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்நாட் களில், இப்புத்தகத்தின் தேவை அதிகம். மாணவனைப் பார்த்து ‘தோழனே... உன் பெற்றோருக்கும் உண்மையாய் இரு. அதுவே சிறந்த ஒழுக்கம். அதுவே மேன்மை தரும் தூய்மை. அது உன்னை எப்போதும் மகிழ்ச்சி வளையத்துக்கு மையமாக வைத்திருக்கும்’ என்று ஒரு மடலில் எழுதிச் செல்கிறார். ‘பூக்களைப் பறிக்காமல் நேசி, பட்டாம்பூச்சிகளைப் பிடிக்காமல் ரசி. விண்ணில் பறவைகள் பறந்து செல்வதை அமைதியாகப் பார். கொக்கு கள் எப்போதும் ஒரே வடிவத்தில் இடம்பெயர்வதைப் பார். பல அரிய காட்சிகளை வாழ்வின் அழுத்தத்தின் காரணமாக நாம் தொலைத்துவிடுகிறோம்’ என்று மாணவர் உள்ளத்தில் மெல்லுணர்வு தீபத்தை ஏற்றுகிறார்.
அன்புள்ள மாணவனே
வெ. இறையன்பு
விஜயா பதிப்பகம்,
கோயம்புத்தூர் - 641 001.
விலை ரூ: 135 : 9047087058
மீன்கள் உறங்கும் குளம்
‘சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை’ என்று ஹைக்கூ கவிதைகள் குறித்து அப்துல்ரகுமான் சொன்னதைப் போல பிருந்தா சாரதி இந்தப் புத்தகத்தில் அடர்த்தியான, அதே சமயம் அழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார். பிருந்தா சினிமாக்காரராக இருப்பதால் ஹைக்கூவின் படிம அழகுக்கு இடையே காட்சியின் வெளிச்சத்தை வரவழைத்துவிடுகிறார் எல்லா ஹைக்கூக்களிலும். படிப்பதற்கு இனிதான இந்தக் கவிதை களுக்கு ஓவியர் செந்திலின் தூரிகைக் கோடுகள் அழகூட்டுகின்றன. ‘எது கிழிசல்/ எது நாணயம்/ பிச்சைக்காரன் விரித்த துண்டு’ என்கிற கவிதை யில் வொய்டு ஆங்கிள் விரிகிறதென்றால், ‘நெரிசல் மிகுந்த சாலையில்/ஊர்வலம் போகிறது வீடு/முகவரி மாற்றம்’ என்கிற வரிகளின் மீது ஊர்வது நகரத்தின் டீசல் நாகரிகமல்லவா!
தொகுப்பு: மானா பாஸ்கரன்
மீன்கள் உறங்கும் குளம்
பிருந்தா சாரதி
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு,
சென்னை - 78. விலை ரூ: 100
8754507070
மைக்ரோ பதிவுகள்
எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் காலம் இது. நெடிய வரலாற்றையும் நீட்டி முழக்க இங்கே நேரமில்லை என்பதைவிட, அதை விரும்புபவர்களைத் தேடவேண்டியிருக்கிறது. இப்படியான காலச்சூழலில் ட்விட்டர் எழுத்து (கீச்சு) பெருவெற்றியடைந்துவரும் வேளையில், அதை ராஜா சந்திரசேகர் தனக்கான கவித்துவ மேடையாக்கியிருக்கிறார். அவ்வை மற்றும் பாரதியின் ஆத்திசூடிகள் மாபெரும் வெற்றியை அணிய அதன் எளிமையான, ‘சுருக்’ வடிவமும் ஒரு காரணமென்றால், இன்றைய சில ட்விட்டர் பதிவுகளை ‘இந்தக் கால ஆத்திசூடி‘ என்று சொல்வது மிகையாகத் தெரிந்தாலும்.. சொல்லிக்கொள்ளலாம்தானே. தொடர்ந்து ட்விட்டரின் பதிவாக பெரும் கவனிப்பை ஈர்த்த வரிகளை எல்லாம் தொகுப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர். சட்டென்று ஒரே வாசிப்பில் படித்துவிடுவது மாதிரியான தோற்றத்தை இத் தொகுப்பு தந்தாலும், அப்படி ஒரே மூச்சில் படித்துவிட்டு ஆசுவாசம் கொள்ள முடியவில்லை. சில வரிகள் பூவிதழ்களாக விரிகின்றன. சில, கிடாரின் ஒற்றைக் கம்பியின் அதிர்வாக இருக்கிறது. சில உள்ளுக்குள் திருவிழா காண அழைக்கின்றன. உதாரணத்துக்குச் சில கீச்சுகள்: 1. உங்கள் மீதே மோதிக்கொள்வதுதான் மோசமான விபத்து. 2. மின்னல் கிழிக்க மழை தைக்கிறது 3. எல்லோருக்கும் நடிக்கத் தெரிந்திருக்கிறது/யாருக்கும் கலைக்கத் தெரியவில்லை 4. புன்னகை - உலகின் முதல் குறுஞ்செய்தி 5. மருந்துகளால் ஆனது என் உடல்/ நம்பிக்கைகளால் ஆனது என் நலம்.
மைக்ரோ பதிவுகள்
ராஜா சந்திரசேகர்
சந்தியா பதிப்பகம், சென்னை - 83
விலை ரூ: 185 984111397
கற்பனை கடவுள்
வெகுஇயல்பான எழுத்தின் மூலம் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை கதைக்களமாக்கியிருக்கிறார் நாச்சியாள் சுகந்தி. இன்றைய வைஃபை சூழ் நாட்களின் ஒளிச் சிதறல்கள் இச்சிறுகதைகளின் எல்லாப் பக்கங்களி லும் ஆங்காங்கே தேங்கியிருக்கின்றன. வால்பாறையில் கழிந்த இவரு டைய இளம்பருவத்து வாழ்வின் ஞாபகங்கள் சில கதைகளில் புன்னகைக்கின்றன. இத்தொகுப்பில் 11 கதைகளில் ஒன்று ‘புரியாது பூசணிக்கா’ என்றொரு கதை. இளம்பருவத்தில் ஏற்படும் எதிர்பாலினக் கிளர்ச்சிக்கு ஆட்படாமல், இரு உள்ளங்களின் உரையாடலுக்கு இடையே பூத்திருக் கும் நட்பைப் பேசும் கதை. கதையில் வரும் சண்முகம், புத்தகங்களால் ஜன்னல் செய்பவன். புத்தகம்தான் அவனுக்கு வேட்டை, புதையலும் அதுதான் அவனுக்கு. இப்படித்தான் சிலரது மாடத்தில் சண்முகம் போன்ற சிலர் அகல்விளக்கு ஏற்றி வைத்துவிடுகிறார்கள். அதுவும் அணையா விளக்கு. இன்னொரு கதை, ‘அறுத்துக் கட்டினவ’ உக்கிரம் மிதக்கும் கதை. குழந்தையுடன் தனித்து வாழும் செல்லம்மா என்கிற ஒரு வயல் மனுஷியைக் கண்முன்னே நிறுத்தும் கதை. ‘ஆதித் திமிர் அவள் கண்களில் ஜொலித்தது’ என்று கதை நிறைவுறும்போது, நம் கிராமங்களின் ஏதோ ஒரு முகம் சட்டென்று மின்னி மறைவதை உணர முடிகிறது.
கற்பனை கடவுள்.
நாச்சியாள் சுகந்தி
யாவரும் பப்ளிஷர்ஸ், விலை: ரூ.90. 9841643380
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT