நூல் நயம்: சமகாலத்தைப் புரிந்துகொள்ள உதவும் கதைகள்

நூல் நயம்: சமகாலத்தைப் புரிந்துகொள்ள உதவும் கதைகள்
Updated on
4 min read

தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும், புத்தாயிரத்துக்குப் பிந்தைய வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன. கதைகள் நேர்க்கோட்டில் சொல்லப்படுவதாகவும் சரளமான மொழியில் வாசிப்புக்கு உகந்ததாகவும் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கதைகளின் பேசுபொருள்களும் அவை கையாளப்பட்டுள்ள விதமும் இந்தக் கதைகளைத் தீவிர வாசிப்புக்கானதாக ஆக்குகின்றன.

கட்டுக்கோப்பானவராகவும் கண்ணியமானவராகவும் மதிக்கப்படும் ஒரு நடுத்தர வயது மனிதர், தன்னை அறியாமல் நிலை தவறும் தருணத்தைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது ‘திரைகள்’. மனித மனத்தின் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள் அசந்தர்ப்பமான சூழலில் உடைத்துக்கொண்டு வெளியேறுவதால் சுற்றத்தாருக்கு ஏற்படும் அதிர்ச்சியும் சம்பந்தப்பட்டவருக்கு விளையும் சங்கடமும், திடீரென்று பீடத்திலிருந்து தள்ளிவிடப்பட்டதை விளங்கிக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாத தத்தளிப்பும் இந்தக் கதையில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.

‘வெல்கம் டு மில்லெனியம்’ திருமணம் தாண்டிய பிறழ் உறவுகளின் இன்றைய முகத்தை முன்வைக்கிறது. ஒரு இளைஞன் மனதுக்குப் பிடித்த பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாக இரண்டு பெண்களிடம் வெவ்வேறு அனுபவங்களைப் பெறுவதைச் சொல்லும் ‘அனுபவம்’, பெண்களை ஒரே வார்ப்புக்குள் அடைக்கும் கற்பிதங்களை உடைக்கிறது.

ஒரு வெள்ளைக் காலர் தொழிலாளியின் அங்கீகாரத்துக்கான ஏக்கமும் அவனைக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கும் அலுவலகப் படிநிலை அரசியலும் (‘விருது’), விடுமுறை நாள்களில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு இடையே முகிழும் நட்பும் உறவும் (‘வின் பண்ணணும் சார்’) என இதுவரை அதிகம் பதிவாகியிராத நவீன வாழ்வின் பக்கங்களைப் புரட்டும் கதைகளும் தொகுப்பில் உள்ளன. புத்தாயிரத்துக்குப் பிந்தைய வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைச் சரியாக உள்வாங்கிக்கொள்ள இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் உதவலாம். - கோபால்

வெல்கம் டு மில்லெனியம்
அரவிந்தன்
காலச்சுவடு, விலை: ரூ.180
தொடர்புக்கு: 04652 278525

காவல் அதிகாரியின் சுயசரிதை: தமிழ்நாடு காவல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற வால்டர் ஐ.தேவாரம் எழுதியுள்ள நூல். சிறுவயதில் மூணாறில் தேயிலைத் தோட்டத்தில் தொடங்கி காவல் துறைத் தலைவராக மெரினா கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள அலுவலகத்தில் பணியாற்றியது வரையிலான சுயசரிதையை தேவாரம் சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.

குறிப்பாக, காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியபோது நடந்த பல்வேறு நிகழ்வுகள் நூலில் இடம்பெற்றுள்ளன. பரபரப்பாகப் பேசப்பட்ட நக்சலைட் ஒழிப்பு, வீரப்பன் வேட்டையில் அவர் அங்கம் வகித்ததும் இதில் அடக்கம். தேவாரம் பணியில் இருந்தபோது சாதித்த சாதனைகள், சந்தித்த சோதனைகள் உள்பட அனைத்து விஷயங்களையும் இந்நூல் அசைபோடுகிறது. - மிது

மூணாறிலிருந்து மெரினா வரை
வால்டர் ஐ.தேவாரம்
விலை: ரூ. 500

பல கருப்பொருள்கள் பல கருத்துகள்: கல்வி, மனநலம், பாலினச் சமத்துவம், தொழிலாளர், சுற்றுச்சூழல் போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. மனித நேயம் எல்லா நிலைகளிலும், குறிப்பாக நம் குடும்பத்தில் தொடங்கி எல்லாரிடத்திலும் வெளிப்பட வேண்டும் என்பதை வலுவாகத் தனது கட்டுரைகள் மூலம் பதிவுசெய்துள்ளார் ப.திருமலை.

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இல்லை. ஆசிரியர், மாணவர் உரையாடல் நடப்பதே இல்லை. இதைக் குறிப்பிட்டு ஒட்டுமொத்த சமூகத்தை மேம்படுத்த கல்வி அவசியம் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தியிருக்கிறார்.

துப்புரவுத் தொழிலாளர்கள் அடையும் துயரம் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் புள்ளிவிவரங்கள் மூலம் விரிவாக அலசுகிறது மற்றொரு கட்டுரை. அதுபோன்று குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் குறித்தும் ஏராளமான தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். இந்தியாவில் காற்று மாசுபாட்டின் காரணமாக உள்ள ஆபத்துக்களைப் புள்ளிவிவரங்கள் மூலம் விவரித்திருக்கிறார். இப்படிப் பல பொருள்களில் தெளிவான பார்வையை இந்தக் கட்டுரைகள்வழி ஆசிரியர் முன்வைக்கிறார். - எம்.ஜெ.பிரபாகர்

நமக்கு எதற்கு வம்பு
ப.திருமலை
மண் மக்கள் மனிதம் வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9865628989

சொற்களின் பிணைவு ருசி: திருநெடுங்கோதை தி.பரமேசுவரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு. மகடூஉ மொழிதல், பிரிவினும் சுடுமோ, விரவுமலர்க் காதை, கருப்பைப் பாடல்கள் என நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது இந்தத் தொகுப்பு. மரபின் வளமான தொடர்ச்சியாக இத்தொகுப்பின் கவிதைகளைப் பார்க்கலாம். பிரிவேக்கம், தனியாளாக இருத்தல், சிறுமியாகித் துடுக்குத்தனத்தோடு உண்மைகளைக் கேள்வியாக வைத்தல் எனக் கவிதைகள் பல்வேறுபட்ட தளங்களில் வாசிப்பவர்களைப் பயணிக்கச் செய்கிறது.

சங்க காலத் தலைவி தன் தலைவனின் பிரிவேக்கத்தில் தூக்கமற்றுத் தவிப்பதன் மனப்போக்கைத் தோழியிடம் சித்தரிக்கும் காட்சிகளை நடப்பு மொழியில் இக்கவிதைகள் நினைவுபடுத்துகின்றன.

புனிதப்படுத்தப்பட்ட உடல்கள் தொடங்கிப் போர்க்களம் வரை பெண்கள் எதிர்கொள்ளும் துயர்கள் ‘இசை ப்ரியா’க்கள் வரை நீண்டுகொண்டிருக்கும் அவலத்தையும், முகநூல் உள்பெட்டிகளைக்கூடப் பாதுகாப்போடு பார்க்க வேண்டிய சூழல், மகாகவிகள் குறித்த பகடி எனத் தொகுப்புக்குள் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.

‘மேனியெங்கும் படர்ந்திருக்கிறது/பல்லாண்டாய்ப் புணர்ந்த மனித எச்சம்’, ‘அவளை தூற்றுவோர் எவரும் பார்க்கவில்லை/தொடையிடுக்கில் உறைந்த குருதியை’ ஆகிய இரு வரிகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. காலங்கள் கடந்துவந்தபோதும் பெண்கள் குறித்த மதிப்பீட்டில் பெரிதாய் மாற்றங்கள் நிகழாத சூழலில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காட்சிப்படுத்துகின்றன இக்கவிதைகள். - ந.பெரியசாமி

திருநெடுங்கோதை
தி.பரமேசுவரி
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 9364128995

நம் வெளியீடு: சுவாரசியமாக ஆங்கிலம் கற்கும் வழி: ஆங்கிலத்தில் அசத்தலாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என்கிற ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அவர்கள் எல்லாருக்கும் ஆங்கிலத்தைச் சுவாரசியமாகக் கற்றுத்தரும் ஆசான்கள் வாய்ப்பதில்லை! இந்தக் குறையைப் போக்க, கேலிச் சித்திரங்கள், அவற்றில் இடம்பெறும் கிண்டலான உரையாடல்கள், பெட்டிச் செய்திகளின் வடிவில் வார்த்தைகள் உருவான கதை, அறிந்த ஆங்கிலச் சொற்றொடரின் அறியாத பயன்பாடு - இப்படி ஆங்கில மொழியின் நுட்பமான அம்சங்களைக்கூட எளிமையாக விவரிக்கும் தொடர்தான் ‘ஆங்கிலம் அறிவோமே’. ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் புதிய தொகுப்பு இது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபிப்பவர் ஜி.எஸ்.எஸ். அதற்கு இந்த நூலும் ஒரு சான்று.

உலக மொழி உங்களிடம் (பாகம் - 2)
ஆங்கிலம் அறிவோமே
ஜி.எஸ்.எஸ்   
விலை: ரூ.200
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562

சொற்சுனையின் கவிதைகள்: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிபவர் ஈஸ்டர் ராஜ். சேக்கிழாரைப் போல் ஒரு சொல்லுக்காகத் தவம் கிடக்கிற கவிமரபில் இவரும் ஒருவர். ழான் போத்ரியா கூறுவதுபோல ‘அதிகமான தகவல்களும், குறைவான அர்த்தமும் உள்ள உலகில் நாம் வாழ்கிறோம்’. ஈஸ்டர் ராஜ் போன்றவர்கள் குறைந்த சொற்களுக்காகவும் நிரம்பிய அர்த்தங்களுக்காகவும் காத்திருக்கிறார்கள். ஈஸ்டர் ராஜிடம் வாழ்வு குறித்த புதிய பார்வைகளும் புழங்கித் தேயாத சொற்களும் இருக்கின்றன. ‘மகள் வயதில் நின்ற நான்கு பூவரசு மரங்கள்' என்று எழுதுகிறார்.

அன்பு என்பது பேரன்பு, பெருநேசமில்லை. அவை வெறும் சொற்கள். அன்பு என்பது ஒரு பூவரசைப் பெண்ணாக, மகளாகப் பார்ப்பது. சேக்கிழாருக்குக் கருவறை இருளில் சிவன் முதற் சொல் அளித்தான். ஈஸ்டர் ராஜுக்கு ஒரு பூவரசு மரம் சொற்களைத் தருகிறது.

‘வாழ்ந்து கெட்டவர்களின்/வீட்டில் இருக்கிறது/முகங்கள் அற்ற கண்ணாடி/இன்னும் இருக்கிறது என்ற சொல்/மறக்கப்படாத சில நினைவுகள்/ஏக்கப்பெருமூச்சு/துரோகத்தின் வலி/நன்றியுள்ள ஒரு நாய்/தூரப்போய் வாழ வேண்டும்/என்ற குமுறல்/இறைவனின் புகைப்படம்/முந்தானையில் துடைத்த கண்ணீர்’.

இந்தக் கவிதையை வாசித்தபோது, அன்பு மறுக்கப்பட்ட வீதிகளிலிருந்து நகர்ந்து சென்று, சிறுவயதில் மகிழ்ந்திருந்த தன் பாட்டியின் வீட்டுச் சன்னலைத் திறந்து பார்த்த கமலா சுரையாவின் கவிதை ஞாபகத்துக்கு வருகிறது. - கரிகாலன், கவிஞர்

ஆன்மாவின் பெருந்துயர்
ஈஸ்டர் ராஜ்
வம்சி வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9445870995

விஜயா விருதுகள்: கோவை விஜயா பதிப்பகத்தின் 2024க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘ஜெயகாந்தன் விருது’ எஸ்.சங்கரநாராயணனுக்கும், ‘புதுமைப்பித்தன் விருது’ மயிலன் ஜி.சின்னப்பனுக்கும், ‘மீரா விருது’ ஸ்டாலின் சரவணனுக்கும் சிறந்த நூலகருக்கான ‘சக்தி வை.கோ. விருது’ சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அரசு நூலகர் பா.பேனிக் பாண்டியனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான ‘வானதி விருது’ கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்ரீ மார்க்கண்டேயா புக் கேலரி ஜே.கல்யாணசுந்தரத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜெயகாந்தன் விருதுக்கு ரூபாய் ஒரு லட்சமும், மீரா, புதுமைப்பித்தன், வானதி, சக்தி வை.கோ. ஆகிய விருதுகளுக்குத் தலா ரூபாய் 25 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளன. விருது விழா, ஏப்ரல் 23ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மாலை ராஜ வீதியில் அமைந்துள்ள விஜயா பதிப்பகத்தின் மேல் தளத்திலுள்ள ரோஜா முத்தையா அரங்கில் நடைபெறவுள்ளது.

முனைவர் ஒளிவண்ணன்: தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் கல்விப் புலம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது குறைவாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில் ‘புத்தகம் வாங்குபவர்களின் மனப்போக்கிற்குச் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்’ என்கிற தலைப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் பதிப்பாளர் கோ.ஒளிவண்ணன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in