Published : 03 Feb 2018 09:06 AM
Last Updated : 03 Feb 2018 09:06 AM

பெரியார் சொன்னால் ஏன் கோபம் வர வேண்டும்?

பெ

ரியாரின் கருத்துகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து, ஒற்றை வரி மேற்கோள்களாகக் காட்டி, அவர் மீது கடுமையான விமர்சனமும் அவதூறும் செய்பவர்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பெரியார் ஒரு விஷயம் குறித்து எந்தச் சூழலில் எழுதினார், பேசினார் என்பதைத் தெளிவுற பொருள்கொள்ளும் வகையில் முழுமையாகவும் காலவரிசையிலும் தொகுத்திருக்கிறார் பசு.கவுதமன். பெரியாரின் எதிர்ப்பாளர்களுக்கு பெரியாரே பதில் கூறும் வகையிலான முயற்சி இது!

மொழியின் பயன்பாடும் நோக்கமும், எழுத்துச் சீர்திருத்தம், இந்தி மொழித் திணிப்பு, திருக்குறள், சங்க இலக்கியங்கள், தமிழிசை, இதழியல் என்று இத்தொகுப்பு பல்வேறு தலைப்புகளில் பரந்துவிரிந்தது. பெரியார், சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பின் ஒரு பகுதியாக உள்ளது. சித்திரபுத்திரன் என்ற பெயரில் வெளிவந்த காட்சி விவரணைகள் நாடகங்களாக நடிக்கத் தக்கவை என்று தொகுப்பாசிரியர் சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறார். அவற்றில் வெளிப்படும் இலக்கியத் திறனும் கவனத் தில் கொள்ளப்பட வேண்டியதே.

ஏன் இந்தக் கோபம்?

தமிழ்ப் பண்டிதர்களை நோக்கிய பெரியாரின் கோபம் இன்றைக்கும் பொருத்தமாகத்தான் இருக் கிறது. இலக்கியம் மட்டும்தான் மொழியை வளர்க்குமா? கதை, கவிதைகளோடு ஒப்பிடுகையில் கலை இலக்கியத்தின் மற்ற வகைகளிலிருந்தும் இன்ன பிற துறைகளிலிருந்தும் வெளிவரும் நூல்களின் எண்ணிக்கை இன்னமும்கூட குறைவாகத்தானே இருக் கிறது. ஒரு மொழியை எழுதவும் பேசவும் செய்பவரின் அறிவு வளர்ச்சியே அம்மொழியின் வளர்ச்சிக்கு முழுமுதற் காரணம் என்பது பெரியாரின் கருத்து.

தமிழகத்தில் தற்போது பாடத்திட்டங்கள் குறித்தும் பாடநூல் வரைவு குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. பெரியாரும் தனது காலத்தில் அதுகுறித்து விளக்கியிருக்கிறார் என்பது வியப்பு. பள்ளிக்கூடப் பாடநூல்கள் எவ்வளவு பிழைகள் மண்டியதாக இருக்கின்றன என்பதை அவர் அக்கறையோடு சுட்டிக் காட்டியிருக்கிறார்.

‘தமிழ்க் கொலை‘ என்ற தலைப்பில், படிப்பவர்களைக் குலுங்கிச் சிரிக்க வைக்கும் வகையில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது: ‘இத்தகைய புத்தகங்களை எழுதுகிற ஆசிரியர்களுக்கும் வித்வான்களுக்கும், அவற்றை வெளியிடுகிற புத்தக வியாபாரி களுக்கும் அவர்களின் உடம்புகளில் தகுதியான இடங்களில் நல்ல புளியம் விளாறால் முறையே ஒரு டசன், அரை டசன் அடிகள் தக்கவர்களைக் கொண்டு கொடுக்க வேண்டும் என்பது நமது தாழ்வான அபிப்பிராயம்.’

பெரியாரின் கிண்டலும் கேலியுமான இந்த நடை, சம்பந்தப்பட்டவர்களைச் சங்கடப்படுத்தத்தான் செய்யும். பெரியாரின் வார்த்தைகளையல்ல, அவ்வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ளாதவரை, அவரை ஏற்றுக்கொள்வதும் சிரமமாகவே இருக்கும்.

நானும் ஒரு வாலி

இதிகாச புராணங்களை நெருப்பில் போட்டுப் பொசுக்க வேண்டும் என்று பேசியதாலேயே பெரியாரை, கலையுணர்ச்சியும் ரசனையும் அற்ற வறட்டுச் சித்தாந்தவாதி என்று அடையாளப்படுத்துவது எளிதாகிவிட்டது. அவரது மேடைப் பேச்சுகளைக் கவனத்தோடு அணுகினால், அவர் இதிகாசங்களையும் எவ்வளவு நுணுகிப் படித்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ராமாயணத்தின் வாலி பாத்திரத்தோடு தன்னை இப்படி ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார் ஓரிடத்தில்: “எதிர்த்தால் எதிர்த்தவன் பலமும் எதிர்க்கப்படுகிறவனுக்கே வந்துசேரும் என்கின்ற ஒரு கட்டுக்கதை, தோழர் ராமசாமி விஷயத்தில் மெய்க்கதையே ஆகிவிடும் என்கின்ற உறுதியின் பேரிலேயே அவரது ரதத்தை ஒண்டியாக இருந்து ஓட்டிக்கொண்டிருக் கிறார்” (குடிஅரசு 24.04.1938).

கற்பனைதான் அதை வலியுறுத்தும் வேளையிலும் அதிலுள்ள நயத்தை ரசிக்கத் தெரியாதவராக அவர் இருந்ததில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகன் பேரகராதியைத் தொகுத்த மு.ராகவய்யங்காருக்கு ராவ் சாகிப் பட்டம் அளிக்கப்பட்டபோது, அவரது தொல்காப்பிய ஆராய்ச்சியில் தமிழர் கற்பு நெறி குறித்து எழுதியதை நினைவூட்டிச் சந்தேகங்களையும் பெரியார் எழுப்பியிருக்கிறார். தமிழ்ப் புலவர்களின் ஆய்வுத் துறை செயல்பாடுகளைப் பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளை பெரியாரிடம் காண முடிகிறது. வித்வான்களையும் பண்டிதர்களையும் திட்டிக்கொண்டே தமிழின் வளர்ச்சிக்காக, தமிழரின் வளர்ச்சியோடு இணைந்த தமிழின் வளர்ச்சிக்காகப் போராடியவர் பெரியார்.

‘கன்னடருக்குத் தமிழின் மீது என்ன அக்கறை?’ என்ற கேள்வியும்கூட அவர் முன்னால் வைக்கப்பட்டது. கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள் தமிழின் திரிபுகள், பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டால் எல்லாம் ஒன்றுதான் என்று பதிலளித்த பெரியார் அதை விளக்குகிறார். 27.11.1948 தேதியிட்ட ‘விடுதலை’யில் நான்கு மொழிகளிலும் உள்ள பொதுவான, தினசரிப் பயன்பாட்டில் உள்ள சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். ஆய்வு மொழியில் சொல்லப்போனால், அது ஒரு ஒப்பீட்டு இலக்கண ஆய்வு.

தமிழர்களின் கலை, பண்பாட்டு இயக்கத்தை எடுத்துரைக்கும், மறுபரிசீலனை செய்யும், அரை நூற்றாண்டு கால சரித்திரக் களஞ்சியம் இத்தொகுப்பு. ஆய்வாளர்கள் பத்திருபது பேர் சேர்ந்து செய்ய வேண்டிய பணியைத் தனியொரு நபராகச் செய்திருக்கிறார் பசு.கவுதமன். இன்று தனித்தனி அணிகளாக இயங்கும் திராவிடர் கழகத்தின் தலைவர்களோடும் இணைந்து செயல்படுபவராக அவர் இருக்கிறார் என்பது சிறப்பு. பெரியாரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டிவந்த பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த பதிப்பகம் இத்தொகுப்பைப் பதிப்பித்திருப்பது இன்னும் சிறப்பு.

பெரியாரின் வசைகள் காலங்களைக் கடந்தும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அவர் எதற்காக அப்படித் திட்டினார் என்பதை மறந்துவிட்டோம். அதை நினைவில் கொள்ள இப்பெருந் தொகுப்பு துணையாக நிற்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x