Published : 25 Feb 2018 10:15 AM
Last Updated : 25 Feb 2018 10:15 AM

விடுபூக்கள்: நினைவை நிறைக்கும் நெல்லை கீதம்

VIDUPOOKKAL 001 

நினைவை நிறைக்கும் நெல்லை கீதம்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களையும் கொண்ட நெல்லைச் சீமையின் பெருமையை இசை நூலாக வெளியிட்டு அசத்தியிருக்கிறது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். நெல்லையின் இயற்கை வளங்கள், தேவாரப் பாடல் பெற்ற கோயில்கள், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமலிருக்கும் கூத்தன்குளம் மக்களின் மேன்மை, இரட்டை அடுக்கு மேம்பாலம், மசூதிகள் அதிகமிருக்கும் மேலப்பாளையம் என்று பல சிறப்புகளைக் கொண்ட இருக்கும் நெல்லையின் பெருமையைச் செறிவான பாடல்களாக எழுதி, இசையமைத்துள்ளார் ம.இசக்கியப்பன்.

மூன்று ஸ்தாயிகளிலும் பாடல்கள் கேட்பதற்கு ரம்யமாக இருக்கின்றன. வார்த்தைகளின் அர்த்தம் சிதையாமலும் பாட்டின் மெட்டுக்கு நெருக்கமாகவும் திரிகால சஞ்சாரியாக ஒலிக்கின்றது அனுராதா ஸ்ரீராமின் குரல். நிலங்களுக்கு ஏற்ற ராகங்களைக் கொண்டே கூடுமானவரை இசையமைத்திருப்பது சிறப்பு. திருநெல்வேலி முழுவதும் இந்தப் பாடல்கள் வாட்ஸ்அப் வடிவிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பாடல்களை யூடியூபிலும் காணலாம். ஏழு இசை மாநாடுகளை நடத்தி நமக்கு `கருணாம்ருத சாகரம்’ என்னும் ஆதாரமான இசை நூலை அளித்த ஆபிரகாம் பண்டிதரின் பெயரை அடுத்த பதிப்பில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

ஒரு கைதியின் மெளனம்!

திருவண்ணாமலையில் கடந்த பிப்.18-ல் வம்சி நாடக நிலம் குழுவினரால் நாடகமாக நிகழ்த்தப்பட்டது ஜெயமோகனின் ‘கைதி’ சிறுகதை. முட்களும், செடிகளும், பாறைகளும் அடர்ந்த சுத்தப்படுத்தப்படாத நிலப்பரப்பே ஆடுகளம். இரவு, நிசப்தம், தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட விளக்கொளி என்று முற்றிலும் கதைக்கு நெருக்கமன பின்னணியில் நடந்த நாடகம் கனவுக்குள் அரங்கேற்றப்பட்டதுபோல் இருந்தது. ஏற்கெனவே இலக்கிய கூட்டங்களால் திருவண்ணாமலையை நிறைத்துவரும் பவா செல்லத்துரை, இனி நாடகங்களாலும் நிறைப்பார் என்று நம்பலாம்!

தொகுப்பு: வா.ரவிக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x