

நூலகங்கள், புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற கல்லறைகள் அல்ல. நுண்மாண் நுழைபுலம் அளிக்கும் அறிவுச் சோலைகள். தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குவது பொது நூலகங்கள்தாம். ஆண்டுக்கு 1,000 பிரதிகள் நூலகங்களுக்கு விற்பதன் காரணமாக எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பயனடைகின்றனர்.
ஆனால், ‘பல ஆண்டுகளாக நூல்கள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை’ என்கிற குற்றச்சாட்டு பொதுவெளியில் உள்ளது. அதிலும், குறிப்பிட்ட சில பதிப்பாளர்கள் மட்டுமே தொடர்ந்து பயனடைவதும், மற்றவர்களுக்கு- குறிப்பாகச் சிறிய பதிப்பாளர்களுக்கும் சிறந்த நூல்களுக்கும் நூலகக் கதவுகள் மூடியே இருந்தன.
இதற்கெல்லாம் தீர்வாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னெடுப்பில், ‘வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை’ என்கிற திட்டத்தைபள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை நேர்த்தியாக வடிவமைத்த நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத் தலைமையிலான குழுவின் பணி பாராட்டுக்கு உரியது.
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மூன்று ஆண்டுகளாக நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கப்படவில்லை என்கிற ஆதங்கம் பதிப்பாளர்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் பதிலாகவும் இந்தப் புதிய திட்டம் பார்க்கப்படுகிறது. இதுவரை நூலகங்களுக்கான புத்தகங்களை ஒரு சிலர் மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்தப் புதிய முறையில் சமூகத்தில் பல தரப்பினரைப் பிரதிநிதிகளாகக் கொண்ட பெரும் குழு, புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளது. மாவட்ட நூலகர்களும் இந்தக் குழுவில் இருப்பார்கள்.
இதைவிடச் சிறப்பு முதன்முறையாக வாசகர்களும் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாசகர் வட்டங்கள் மூலமாகப் பரிந்துரைக்கும் வகையிலான திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘நாங்கள் கொடுப்பதை நீங்கள் வாசியுங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘நாங்கள் கொடுப்பதோடு உங்களுக்குத் தேவையானதையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்கிற மகத்தான திட்டமிது. ஒரு பகுதிக்குத் தேவைப்படும் புத்தகம், இன்னொரு பகுதிக்கு அவசியம் தேவைப்படும் என்று சொல்ல முடியாது.
அந்தந்தப் பகுதிகளுக்கு அவரவர் தேவைக்குத் தக்க வகையிலே நூலகங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் இந்தப் புதிய திட்டத்தில் உள்ளது. முன்னேறிய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் வழிமுறை இது. இத்திட்டம் முழுமையாக இணைய வழியாக நடைபெற உள்ளதால் என்னென்ன புத்தகங்கள் வாங்கப்படுகின்றன, யாரிடமிருந்து பெறப்படுகின்றன என்பது போன்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.
திட்டத்தின் சிக்கல்கள்: இத்திட்டத்தில் ஒரு சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்கிற கவலையும் உள்ளது. அவற்றைக் களைய வேண்டியது பொது நூலகத் துறை சார்ந்த வல்லுநர்களின் கடமை. எல்லாமே இணையவழி என்கிறபோது, தமிழ்நாட்டில் 85 சதவீதத்துக்கு மேலான பதிப்பாளர்கள் இன்னும் நவீனத்துக்குள் செல்லாமல் குடிசைத் தொழிலாகத்தான் இதைச் செய்துவருகிறார்கள்.
ஆகவே, அவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறப் போதிய கற்பித்தலும் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனிக் குறியீடான ‘ஐஎஸ்பிஎன்’ (ISBN) என்பது மத்திய அரசாங்கத்தின் உயர் கல்வித் துறையின் கீழ் வரும் ராஜாராம் மோகன் ராய் தேசிய முகமை மூலம் அளிக்கப்படுகிறது. சமீப காலத்தில் அத்தகைய எண்களைப் பெறுவது கட்டமைப்பில் சிறந்த பதிப்பாளர்களுக்கே சவாலாக உள்ளது. இதைக் குறித்து இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்புகூடத் தன் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதனால் ‘ஐ.எஸ்.பி.என்.’ கட்டாயம் என்பதைத் தவிர்த்துவிடலாம்.
சிறப்புத் தேர்வுகள் எனப் பரிசு பெற்ற நூல்கள் கொள்முதல் செய்வது குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று. விருதுகள் பட்டியலில், நோபல் பரிசிலிருந்து சாகித்திய அகாடமி வரை உள்ளது. அதில் கூடுதலாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதுபெறும் நூல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கூடுதல் பிரச்சினைகள்: பதிப்பாளர்கள், தேர்ந்தெடுக்கப்படும் தங்கள் புத்தகங்களை மாவட்டங்கள் வாரியாக நூலகங்களுக்கு அனுப்புவதில் சிரமங்கள் உள்ளன. பல நேரம் ‘சுண்டக்காயைவிடச் சுமைக் கூலி’ அதிகமாகிவிடுகிறது. இவற்றையெல்லாம் களைவதற்கு இடப்பெயர்வில் பங்களிக்கும் நிறுவனங்களோடு (logistics partners) ஒப்பந்தம் செய்து அனுப்புவது என்கிற அரசின் திட்டத்தை முன்னெடுக்கலாம். இதனால் பதிப்பாளர்களின் சிரமம் குறையும்.
மேலும், மாவட்ட நூலகங்களுக்குப் புத்தகம் அனுப்பிய பிறகு, விற்பனைப் பணம் பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பணம் வங்கிகள் வழியாக அனுப்பப்படுகிறது.
வங்கிகள் நமக்கு அளிக்கும் விவரத்தில் ஊர், பெயர் எதுவும் இல்லாமல் ‘நூலகர், மாவட்ட நூலகம்’ என்று மட்டுமே இருப்பதால், பணம் எந்தெந்த மாவட்டங்களிலிருந்து வந்தது என்கிற விவரத்தைப் பதிப்பாளர்கள் அறிவதில் பெரும் சிரமம் உண்டாகிறது. வங்கிகளிடமிருந்து அத்தகைய விவரங்களைக் கேட்டுப் பெறுவது சாமானியர்களுக்குச் சாத்தியம் அல்ல.
மேலும், எல்லா நூலகங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் பணம் வருவதில்லை. ஒரு சிலர், பல மாதங்கள் கழித்துத்தான் அனுப்புகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாரிடமிருந்து பணம் வந்தது, வரவில்லை என்கிற குழப்பம் ஏற்படுகிறது. இதனால், பதிப்பாளர்கள் மாவட்ட நூலகர்களை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல பெரிய பதிப்பகங்களாலேயே இதனைச் சமாளிக்க முடியவில்லை.
மேலும், இது ஊழலுக்கும் வழிவகுக்கும். பொது நூலகம் பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்று, அவற்றைப் பல நூலகங்களுக்கு விநியோகம் செய்து, விற்பனைத் தொகையை ஒரே காசோலையாக வழங்க வேண்டும். அது இந்தச் சிரமத்துக்கான தீர்வாக இருக்கும்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 2009இல் கொண்டுவந்த முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம்’. நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யும்போது, விற்பனைத் தொகையில் இரண்டரை சதவீதம், நலவாரியத்துக்காகப் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதுவரை பதிப்பாளர்கள் பல கோடி ரூபாய் பணம் செலுத்தியும், நல வாரியம் தொடங்கப்பட்ட நாள் முதலே நலமிழந்து இருக்கிறது என்பது வருத்தத்துக்குரியது. அதற்கும் இப்புதிய திட்டத்தில் வழி பிறக்கும் என்று பதிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
- தொடர்புக்கு: olivannang@gmail.com