நூல் நயம் - துயர்மிகு காதலின் வரிகள்

நூல் நயம் - துயர்மிகு காதலின் வரிகள்
Updated on
2 min read

இயக்குநர் ஷண்முகப்ரியன் ‘வீண்காவியங்கள்’ நாவலில் பயன்படுத்தியதைப் போன்ற பச்சைத்தன்மையிலான மொழியைத்தான் இந்தக் குறுநாவலிலும் கையாண்டுள்ளார். அதற்குள்ளும் ஓர் அழகான கவித்துவத்தைத் தன் மொழிக்கு அவர் சூட்டியிருக்கிறார்.

‘ஊருக்கு வெளியே உக்கிரம் கொண்ட தேவதையைப் போல் ஒரு கடல்’ என ஸ்தூலமாகக் கடலை விவரித்துத் தொடங்கும் நாவல், அகத்தில் ராகவனின் வேட்கையை, காதலை மூர்க்கத்துடன் உருவகப்படுத்துகிறது. பகலும் இருளுமாக முயங்கி, திக்கில் துலங்கும் பொழுதைப் போல் நாவலின் விவரிப்பில் காட்சிகள் தெளிவுபெறுகின்றன. இந்தப் பகுதியில் தெய்வச் சிலையைப் போல் ஒரு வாலைக் குமரியை ஷண்முகப்ரியன் வனைகிறார்; அவள் புஷ்பா.

ராகவன்-புஷ்பா இருவருக்கும் இடையில் ஒரு காதல் மலர்கிறது. அது மலராகும் விதத்தை ஷண்முகப்ரியனின் படிமமாகச் சித்தரிக்கும் இடம் நாவலின் விசேஷமான அம்சம். ஒரு பெரு மழையில் அவளது மாடு காணாதாகிறது; இருவரும் தேடுகிறார்கள்; அது கடலுக்கு அருகில் நிற்கிறது.

இருவரும் அதைப் போராடிக் கூட்டிவருகிறார்கள். மாட்டைக் கண்ட பிறகு இருவருக்கும் இருந்த பதற்றம் இல்லாமல் ஆகி, வினோதமான ஒரு மெளனம் தலைதூக்குகிறது. ‘இருவருக்கும் இடையில் குருத்துவிட்டிருக்கும்’ காதலைப் போல் அந்த மாடு நடந்துவந்ததாக எழுதுகிறார் ஷண்முகப்ரியன்.

இந்தக் காதல், காலக் கடலின் கரையில் என்னவெல்லாமோ ஆகிறது. விழிப்புள்ள மனது ‘இதெல்லாம் சாத்தியமா என்ன?’ எனக் கேள்வி எழுப்பக்கூடிய பலவும் பின்னால் நடக்கின்றன. ஆனால், அவை எல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்ட காதலுக்கே உரித்தான பைத்தியக்காரத்தனம், காதலுக்கே உரித்தான அறிவற்ற செயல்கள்.

இந்தக் காதல் கதையைக் கிராம, நகரச் சூழல்களின் பின்னணியில் இரு பகுதியாகப் பிரித்துள்ளார் ஷண்முகப்ரியன். இரண்டுக்கும் இடையில் கால நதிபோல் ஒரு ரயிலை ஓடவிட்டிருக்கிறார். மூன்றாம் பகுதி அது ஒரு மருத்துவமனை அறைக்குள் சமுத்திரத்தைப் போல் வியாபகம் கொள்கிறது.

இந்தக் காதல் இறங்கிவிடக்கூடிய ரயில் நிறுத்தத்தில் இறங்காமல் சென்றுவிடுகிறது. கைக்குள் இருந்தும் அந்தக் காதல் தவறவிடப்படுகிறது. இது ஏன், என்கிற கேள்வி எழுகிறது. காதல் பற்றிய இந்த நூற்றாண்டின் குழப்பங்களுக்கான பதிலை அடைய இந்தக் கேள்வி வாசகரை அழைத்துச் செல்கிறது. அதே சமயம், ஷண்முகப்ரியன் காதலைப் புனிதப்படுத்த விரும்பவில்லை; அதன் இயல்பான பலவீனங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் பிரம்மாண்டக் கட்டிடங்கள், நவ நாகரிக மனிதர்கள், புதுமையான மரங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவுக் கருத்துகள் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி, ஓர் அந்திச் சூரியன் எழுவதைப் போல் ஓர் அழகான மடத்தனமான காதலை இந்த நாவலில் ஷண்முகப்ரியன் உதிக்கவைத்திருக்கிறார். - மண்குதிரை

கடல்
ஷண்முகப்ரியன்

பனித்துளிப் பதிப்பகம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9943352757

செவ்விலக்கியக் காதல்கள்: மொழியை நுட்பமாகக் கையாளத் தெரிந்தவர்களால் மட்டுமே காதலையும் காமத்தையும் எழுத்தாக்க முடிகிறது. அவ்வகையில் கவிஞர் ந. பெரியசாமியின் அகப்பிளவு என்னும் கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது.

முதல் பகுதிக் கவிதைகள், வள்ளுவரின் காமத்துப்பால் அதிகாரங்களிலுள்ள கவிதையைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. காதலை, காமத்தை ரசித்து வாசிப்பதற்கும் உணர்ந்து வாழ்வதற்குமான கவிதைகள் இவை.

காமத்தை மொழியில் எழுதுகிறபோது ஒரு பிசகு ஏற்பட்டாலும் வாசகன் கவிதையை எப்படிப் புரிந்துகொள்வான் என்ற அதி கவனத்துடனும் நுட்பத்துடனும் கவிதைகளைப் படைத்திருக்கிறார் ந.பெரியசாமி.

‘இவ்வூர் பெற்றிருக்கும்/பெரும் வனம் ஒன்றை/என்னுள் திரண்ட காமம்/பறவையாகி மிதந்தலைகிறது/சொல்லித் தொலையடி தோழி/கல்லிலிருந்து கயிற்றைத்/திரித்து வரச் சென்றானோ?’ - பொழுது கண்டு இரங்கித் தவிக்கின்ற தலைவியின் காமம் பறவையாகி மிதந்தலைவதைக் கவிதையாக்கியிருக்கிறார் பெரியசாமி.

இயற்கைப் புணர்ச்சி, மடலேறல், அலர், பசலை, நெஞ்சோடு பேசுதல், உள்ளக் களிப்பு எனக் களவு, கற்பு சார்ந்த கூறுகள் கவிதைத் தொகுப்பில் பாடுபொருளாகியிருக்கின்றன. நுட்பமான மொழியில் கவிதையை நெய்திருக்கிறார் கவிஞர். இரண்டாம் பகுதிக் கவிதைகளைப் பெண் பிரதியாகவும் ஆண் பிரதியாகவும் வாசிக்கலாம்.

காமம், காதல் சமத்துவமானது என்பது கவிதைகளில் வெளிப்படுகிறது. பொல்லா வறுமுலை என்ற சொல் புறநானூற்றுப் பாடலையும் புதுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், சிதைவு பிறர்க்கின்மை தொல்காப்பியத்தையும் நினைவூட்டுகின்றன.

‘இருள் பிரிவால்/வாசலின்/மிகுதியான வெக்கை தணிக்க/நதியைத் தெளித்தாள்/கொண்ட காமத்தின் நிரம்பலைக்/கோலமாக்கினாள் புள்ளிகள் இடாமலேயே/எதிர் நின்று/வேடிக்கை கண்ட புங்கைக்கு/மீந்த நதியைக் கொடுத்து/இலைகளைச் சிலுப்பிச் சென்றாள்/சுவைமுத்தம் கொண்டதாகத்/தளும்பியது புங்கை/மாடியிலிருந்து ரசித்திருந்தவன்/இன்னும் மரக்கன்றுகளை/நட்டுவைக்கத் தீர்மானித்தான்/வனங்கள் உருவாவது /இப்படித்தான்’ என்ற கவிதைக் காதலால் வனம் எப்படி உருவாகிறது என்பதை விவரிப்பதாகப் புரிந்துகொள்கிறேன்.

பெரும்பாலான கவிதைகள் படிமங்களால் நிரம்பித் தளும்புகின்றன. குந்தி, திரௌபதி, சீதை, சூர்ப்பனகை ஆகிய நால்வரின் தாபப்பித்து, பெண்மொழியில் எழுதப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். கவிதைகளை ஒருசேர வாசிக்கிறபோது, அக இலக்கியப் பாடல்களின் முக்கியத்துவம் பிடிபடுகிறது. செவ்விலக்கியங்களின் அகமரபு நீட்சியாக இந்தக் கவிதைகளை வாசிக்கலாம். - பி. பாலசுப்பிரமணியன்

அகப்பிளவு (கவிதைகள்)
ந.பெரியசாமி

சொற்கள் வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9487646819

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in