

ஆர்.வத்ஸலாவின் கவிதை உலகு மென்மையானது. காத்திரமிக்க பெண் கவிதைகள் வெளிவந்த காலகட்டத்தில் அதிலிருந்து விலகிக் கவிதைகள் எழுதியவர் வத்ஸலா. வத்ஸலாவின் கவிதைகள் அனைத்தும் ஈரமான அனுபவங்களில் பூத்ததாகவே இருக்கின்றன.
இந்தக் கவிதைகளில் திடமாகத் தன் ஆளுமையை வெளிப்படுத்துகிறார். அதுபோல் கவிதைக்காகத் தனிமொழிக்கு அவர் பிரயத்தனப்படவில்லை; சட்டனெப் பெய்யும் மழையைப் போல் அனுபவங்களை உதிர்க்கிறார்.
அலுவலகத்தில், வீட்டில், சாலையில் என எல்லா இடங்களிலும் அவருக்குள் ஒலிக்கும் ஒரு குரலே இந்தக் கவிதைகள் எனலாம். அதிகமும் பேசாத அவரது இயல்பு கவிதைக்குள் சரளமான உரையாடலாக வெளிப்பட்டுள்ளது.
குடும்ப வாழ்க்கை, அதன் பிரச்சினைகள், மனித உறவுகள், அதனாலான மனச் சஞ்சலங்கள் எல்லாவற்றையும் இந்தக் கவிதைகள் பகிர்கின்றன. மணமுறிவுக்குப் பிறகு அவனின் நினைவுகளில் மீளாத மனது பல கவிதைகளில் வெளிப்பட்டுள்ளது. வேதனையும் கோபமும் ஒருசேர இந்தக் கவிதைகளில் கவிந்திருக்கின்றன.
இயற்கையை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பகிர்ந்துள்ளார். வெயிலை ஒரு பெண்ணாகப் பாவிக்கும் ஒரு கவிதை இதில் உள்ளது. அவளது வருகைக்காகக் கவிஞர் காத்திருக்கிறார்.
இது வினோதமான அழகுடன் மலர்ந்துள்ளது. வேறு கவிதையில், கவிதையையே ஒரு குழந்தையாகப் பாவிக்கிறார் வத்ஸலா. ‘எழுந்தவுடன் எழுதச் சொல்லி/ கவிதை பிடித்த அடத்தில்/எண்ணெய் வைக்க மறந்துவிட்டேன்’ என அந்தக் கவிதையில் எழுதுகிறார் அவர். பிடித்த பழைய வீட்டில் உள்ள ஒரு பல்லிக்காக ஒரு கவிதை கவலை கொள்கிறது.
அவருக்கு அருவருப்பைத் தரும் பல்லி அது என்பது கவனம்கொள்ளத்தக்கது. இதன் அம்சத்தை அவரது மற்ற கவிதைகளிலும் பொருத்திப் பார்க்க முடிகிறது. வத்ஸலாவின் கவிதைகளுக்குச் சிறுகதைத் தன்மை உண்டு. அப்பா, அம்மா, அண்ணனுடன் அந்த வாழ்க்கையைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்க்கிறார். ஆனாலும் சொல்ல இன்னும் என்னமோ அவருக்கு மிச்சம் இருக்கிறது. அவை எல்லாம் ஒரு சிறுகதையாகத் தொழிற்பட்டுள்ளன. அப்பா ஓய்வுபெறுகிறார். அம்மாவின் கை ஓங்குகிறது.
அப்பாவின் கையாலாகத்தனத்தை அம்மா சொல்லிக் காட்டுகிறாள். ஒன்றும் சம்பாதிக்கவில்லை, சேர்த்துவைக்கவில்லை இப்படிப் பல புகார்களை அடுக்குகிறாள்.
அப்பாவின் கை ஓங்கிய காலத்தில் தான் பட்ட துயரத்தைத் தன் மக்களிடம் சொல்லிப் புலம்புகிறாள். அப்பாவும் ஒரு நாள் போய்ச் சேர்ந்துவிடுகிறார். ஆனால், அப்பா போன பின்பு அவர் சாயலாக மாறுகிறார் என வத்ஸலா கவிதையில் சொல்கிறார். தொலைத்தொடர்பு அறிவியலில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தையும் வத்ஸலா தன் கவிதைகளுக்குள் பதிவுசெய்துள்ளார்.
திறன்பேசிப் பயன்பாடு ஒரே வீட்டுக்குள் மனிதர்களைத் தனிமைப்படுத்தி வைத்திருப்பதைப் பற்றி ஒரு கவிதையில் சொல்கிறார். அந்தக் கவிதைக்குள் தொலைபேசியே இல்லாத காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி அலைந்துகொண்டிருக்கிறார். வத்ஸலாவின் இந்தக் கவிதைகளில் கவித்துவமான உவமையோ உருவகங்களோ இல்லை.
சொற்களைக் கோப்பதிலும் ஓசை நயமில்லை. தனக்குத் தெரிந்த சொற்களைக் கூட்டிவைத்துத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவற்றையெல்லாம் கவிதையாக்கியிருக்கிறார். இது கவிதைக்கு உண்மைத்தன்மையை அளிக்கிறது. கவித்துவத்துவத்துக்கும் அப்பாற்பட்டு, அந்த உண்மைதான் இந்தக் கவிதைகளின் விசேஷமான அம்சம் எனலாம்.
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in