

குமரி ஆதவன், தான் கடந்து வந்த வாழ்க்கை வழி கவிதையைப் படையலிடுகிறார். பொதுவாகவே, தாத்தா, பாட்டி ஆதரவற்ற முதியவர்கள் எல்லாம் காலத்தின் பார்வையில் அல்லது உளவியல் பார்வையில் மரணத்தை எண்ணிக்கொண்டு, பொதுசன உளவியல்படி வாழ்வை முடிக்க இருப்பவர்கள்.
அவர்கள் காலத்தில், அவர்கள் காட்டிய சாகசங்கள், தனித்துவ அடையாளங்கள், அவர்கள் போனாலும் இந்த மண்ணுக்கு அவர்கள் தந்த மறக்க இயலாத மரணத்தைத் தாண்டிய வாழ்வு இவை எல்லாவற்றையும் ஒரு படைப்பாளியால் மட்டுமே நுட்பமாக உள்வாங்க முடியும். அந்த நுட்பமான உள்வாங்கல் குமரி ஆதவனுக்கு நேர்த்தியாகவே கைகூடியிருக்கிறது.
இதன் விளைவு, ஒரு குக்கிராமத்தில், அவரின் பால்ய காலத்தில் தொடங்கி சமகாலம் வரை, அவர் பார்த்த உதிரியான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, இந்தப் புத்தகத்தில் உலவ விட்டிருக்கிறார்.
ரத்தினம் தாத்தா, கவிதை படிப்பவர்களின் கனவில் வந்து போகிறார்; ரப்பர் பால்வெட்டும் பாகவதர் நம்மையும் அழைத்துக்கொண்டு, பாட்டுப் பாடியபடி பால்வெட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்; காஜா பீடி பிடித்தபடியே வேலை செய்யும் காளியம்மா, பொடிந்து போன சரித்திரத் துகள்களோடு அந்த ஊரின் நடுகல் ஞாபகமாய் இருப்பதைக் குமரி ஆதவன் அடையாளப்படுத்துகிறார்.
அது போலத்தான் மரியம்மாவின் வாழ்வையும் உறவுத்தாவின் வாழ்வையும் கல்வெட்டாய்க் கண்முன்னே நிறுத்துகிறார். சாதி, மதம், தொழில் தாண்டிய மனிதனுக்குள் மனிதன் வாழும் ஒரு கருவூலப் பெட்டகம் நம்மிடையே இருந்திருக்கிறது. உறவுகளற்று, பொருளாதாரப் பின்புலத்தைச் சார்ந்து வாழ்கிற மக்களுக்கு இந்த வாழ்வு மிகவும் அந்நியப்பட்டதாகத் தோன்றும்.
உறவுத்தா கவிதை ஒரு சங்க கால வாழ்வியல் ஓவியத்தைக் கண் முன்னே காட்டுவதாக இருக்கிறது. அதுபோல அப்பாவுக்கும், இறைச்சி கொண்டு வீடு வீடாக விற்கும் திருவிதாங்கோட்டு வெள்ளைச் சாயிப்புக்கும் இருந்த உறவைப் பேசும் கவிதை, உறவின் உன்னதத்தைப் பேசுகிறது.
இதற்கு நேர் எதிரான தொனியில் உறவுத்தா கவிதையின் கடைசிப் பகுதி, அம்மாவோடு உயிராக இருந்த உறவுத்தா, அம்மா இறந்த பிறகு எங்கள் ஊருக்கு வரவே இல்லை என்று முடிகிறது. இரு கவிதைகளும் உறவின் நெருக்கத்தை வெவ்வேறு வடிவங்களில் எழுதிச் சென்றாலும், இரு கவிதைகளும் உருவாக்கும் வாழ்வின் வலி, நீண்ட நேரம் இக்கவிதைகளுக்குள் நாம் முக்குளித்து முக்குளித்துக் கரையேற விடாமல் தடுக்கிறது.
திணை சார் வாழ்வு என்று நமக்கு ஒன்று உண்டு. அதனை நன்கு உள்வாங்கி, ஆதாரச் சுருதியால் இந்தக் கவிதை நூல் பதிவு செய்கிறது. அந்த வகையில், குமரி ஆதவன் வேர்களைத் தேடியும், விளிம்புகளின் பக்கத்தில் இருந்தும், ஒடுக்கப்பட்டோரின் கண்ணீரோடு கண்ணீராகியும் வாழ்வை எழுதிச் செல்வதால் இந்த நூல் உயிர்ப்பு மிக்க படைப்பிலக்கியப் பிரதியாகிறது.
ஆட்டுக்குட்டியின் அலறல்
குமரி ஆதவன்
வேரல் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9578764322
- தொடர்புக்கு: nadasivakumarwritter@gmail.com