நூல் நயம்: சித்திரம் வரையும் வரிகள்

நூல் நயம்: சித்திரம் வரையும் வரிகள்
Updated on
4 min read

நான்கு கவிதை நூல்களை எழுதியுள்ள கவிஞரின் ஐந்தாவது கவிதை நூல் இது. கண்களில் படும் காட்சிகளில் ஏதோவொன்று மனதின் அடியாழத்தில் அப்படியே தங்கிப் பல நாள்கள் உள்ளூறிக் கிடந்து, யாரும் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் ‘கீச்… கீச்’செனும் ஓசையுடன் கண் விழிப்பதையே கவிதைகளாக எழுதியுள்ளார் ப.சொக்கலிங்கம். 71 குறுங்கவிதைகள் அடங்கிய இந்நூலில் பல கவிதைகள் நம் பார்வையில் அன்றாடம் படும் நிகழ்வென்றாலும் அதைக் கவிதையாக வாசிக்கையில் ‘அட’ சொல்ல வைக்கிறது.

‘பாம்படத்தைக் கைப்பற்றியதும்/மாயமானான் இறுதிச் சடங்கு செய்யாது/இன்னொருமுறை/மரணித்துப் போனாள் பாட்டி’ எனும் வரிகள், நம்மைக் கவிதைக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து சேர்க்கின்றன. ‘ஓசையின்றி மலர்கின்றன மலர்கள்/பாம்புச்செவி/பட்டாம்பூச்சிகளுக்கு’ எனும் வரிகளும், ‘வறண்ட கோடைகளில்/மேகமாகி விடுகிறாள்/சிறுமி’ எனும் வரிகளும் மனதிற்குள் சித்திரமாக விரிகின்றன. சில கவிதைகளுக்கான தலைப்புகளைப் பார்க்கையில் சுமையில்லாமல் காலாற நடந்துபோகும் பயணத்தில் எதற்குத் தலையில் சும்மாடு என்று கேட்கத் தோன்றுகிறது. - மு.முருகேஷ்

சிட்டுக் குருவி
ப.சொக்கலிங்கம்

படி வெளியீடு
விலை: ரூ.125
தொடர்புக்கு: 99404 46650

உணவும் வரலாறும்: ஒரு நாட்டை ஆள்வது என்பது சிறிய மீனைச் சமைப்பதற்கு ஒப்பானது. அதிக அக்கறையும் கவனமும் இரண்டுக்குமே தேவை என்பதைச் சீன மெய்யியல் நூலான ‘தாவோ தே ஜிங்’ கூறுகிறது. சமையல் கலையை அறிந்திருப்பது, அரசுப் பணிகளுக்கான முக்கியத் தகுதியாக அக்காலத்தில் கருதப்பட்ட சூழலை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

13ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், அரேபிய, சீன, ஐரோப்பியப் பகுதிகளில் சமையல் கலை நிபுணர்களால் பல நூல்கள் எழுதப்பட்டன. அந்நிலப்பரப்புகளில் நிகழ்ந்த உணவுப் புரட்சி குறித்த பல செய்திகள், அக்குறிப்புகளில் காணக் கிடைக்கின்றன.

அவைதாம் ‘ருசிபேதம்’ நூலின் பேசுபொருள். எளிமையையும் விருந்தோம்பலையும் பிணைத்துவைத்திருந்த இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் உணவுக் கொள்கை, காலனி ஆதிக்க உணவுகள், கொலம்பஸின் வருகை, கொள்ளைநோய் ஏற்படுத்திய மாற்றங்கள் போன்றவை குறித்துப் பேசும் 32 கட்டுரைகள் இதில் உள்ளன. - ஆனந்தன் செல்லையா

ருசிபேதம்
ஷா நவாஸ்

தி சிராங்கூன் டைம்ஸ் வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: www.serangoontimes.com

கூட நடக்கும் கதைகள்: அந்த நாள் ஞாபகம் என்ற பெயருக்கு ஏற்றார்போல் மனக் கிணற்றின் ஆழத்தில் கிடக்கும் நினைவுகளைப் பாதாளக் கரண்டியில் அள்ளி எடுத்துள்ளார் கி.ரமணி. இதில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் பிடிப்புள்ள அனுபவத்திலிருந்து உருவானவை. இந்தத் தன்மையே இந்தக் கதைகளை வலுவுள்ளதாக்குகின்றன. கதையைச் சொல்வதில் ஓட்ட மொழி வாசகர்களையும் கூட கூட்டிச் செல்கிறது. மொழியின் போக்கில் ஆசிரியர் வெளிப்படுத்தும் நகைச்சுவையும் ரசிக்கும்படியாக உள்ளது.

விக்ரமாதித்யன் - வேதாளம் என்கிற பிரபலமான ‘அம்புலிமாமா’ கதையில் ரமணி இந்தக் காலத்துக்கான குறுக்கீட்டை நிகழ்த்தியிருக்கிறார். விக்ரமாதித்யன் - நவீன வேதாளம் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலை ரமணியின் நகைச்சுவைக்குச் சிறந்த உதாரணமாகக் காட்டலாம். ‘ஆடி’ என்றால் தமிழ் மாதம் கிடையாது என்பது பின்னால்தான் எனக்குப் புரிந்தது என வேதாளம் சொல்கிறது. ஆடி என்கிற பெயர்கொண்ட வாகனம் பற்றி அது சொல்கிறது.

அதுபோல் ஜனநாயகம் என்கிற ஒரு ஆட்சிமுறை நவீனக் காலத்தில் வந்துவிட்டது. அதில், மக்கள் அவர்களுடைய ராஜாவை அவர்களே தேர்ந்தெடுப்பார்களாம் எனச் சொல்வதெல்லாம் வேடிக்கையாக வெளிப்பட்டுள்ளது. ‘விதி’ கதை, முதலில் மூடநம்பிக்கைகளை ஆதரிக்கும் விதமாகத் தொடங்குகிறது.

திருச்சியில் ஓர் அழகான பால்ய கால நினைவாக விரியும் இந்தக் கதையில் ஒரு சாமியார் வருகிறார். அவர் பெயர், ஆசை, திறமை ஆகியவற்றுக்கு ஏற்றபடி உங்களுக்கு வாழ்க்கை அமையும் என அருள்கிறார். இனிப்பு ஆசை உள்ளவன், நீரிழிவுப் பாதிப்பால் இனிப்பே தின்ன முடியாமல் போகிறது.

ஆனால், பெரிய இனிப்புக் கடையின் உரிமையாளர் ஆகிறான். அதுபோல் விளையாட்டில் ஆர்வமுள்ளவன் விபத்தால் விளையாட முடியாமல் போகிறது. ஆனால், விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பில் சம்பாதித்துப் பெரியாளாகிறான். குபரேன் என்கிற பெயர் உள்ளவன். இதை நம்பி தன் பெயருக்கு ஏற்றார்போல் பணத்தையே உருவாக்கிக் கம்பி எண்ணுகிறான்.

முதியோர் விடுதி தேடிச் செல்லும் கதையும் இதே போல் சுவாரசியத்துடன் வெளிப்பட்டுள்ளது. எல்லாக் கதைகளிலும் இந்தத் த்ரில்லர் அனுபவம் வெளிப்பட்டுள்ளது. ஆசுவாசமாகப் படிக்கக்கூடிய சுவாரசியமான கதைகள் பல இந்தத் தொகுப்பில் உள்ளன. - விபின்

அந்த நாள் ஞாபகம்
கி.ரமணி

ரமணி பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 98409 64749

நாவலாக ஒரு வாழ்க்கை: அணில் கூடு அப்படியேதான் இருக்கிறது சித்ராதான் இல்லை என்ற பூடகமாகப் பெரும் துயரக் குரலை முதல் பத்தியில் மறைத்து, அறச் செல்வி சித்ராவின் வரலாறு முற்றுப்பெற்றது என்று முடியும் ‘அறச்செல்வி சித்ரா'வின் வாழ்க்கைக் குறிப்பு நூல் இது.

யாதொரு புனைவும் இலக்கிய ஜோடிப்பும் அற்று ஒரு அறமனச்செம்மலாய் இந்த நூலில் தன் வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ளார் அரச.முருகுபாண்டியன். நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் நூலாசிரியரின் மூச்சுக்காற்று விரவி உள்ளது என்பதைத் தாண்டி, இந்தியாவின் நவீன சிற்பி அம்பேத்கரின் மூச்சுக்காற்றும் பதிவாகியுள்ளது.

இதன் வழி நூலின் காத்திரத்தை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. ஒரு குடும்பம் தன்னளவில் முன்னேறிய செழிப்பை நாடு, மொழி, இனம் என்ற நோக்கில் அரசியல் சமூகப் பொருளாதார விடுதலை குறித்த கவலைப் பாங்குடன் நடைபோட்ட வரலாற்றுக் குறிப்புகள் இதில் உண்டு. இடஒதுக்கீட்டால் முன்னேறிய தலித் குடும்பத்தின் ஆகச்சிறந்த வாழ்வியல் முறைக் கையேடாகவும் இது விரிகிறது.

அத்தியாயங்களாகப் பிரிக்காமல் நிகழ்சிகளையே தலைப்பாகக் கொண்டு வாழ்வின் நிகழ்ச்சிக் குறிப்புகளையே கொண்டு கதை சொல்லும் நாவலாசிரியரின் உத்தி சிறப்பானது. ஒரு வரலாற்றை நாவல் போலவும் ஒரு நாவலை வரலாற்றைச் சொல்வதுபோலவும் அமைந்த உத்தி தமிழுக்குப் புதியது என்றே தோன்றுகிறது.

பாண்டியன் மனைவியை இழந்த கவலையின் அடர் வெப்பமாய் நூலின் இறுதிப் பகுதி இருந்து வாசிப்பவரை உலுக்குகிறது. சித்ராவின் மரணம் நம்மை நெகிழ வைத்தாலும் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு நிழலாக விரிய வேண்டும் என்ற அறத்தின் பாங்கை அறச்செல்வி சித்ரா எனும் நூல் விதந்தோதி நிற்கிறது. - அகவி

அறச்செல்வி சித்ரா
அரச.முருகுபாண்டியன்

புலம் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9840603499

திண்ணை: ஆஸ்திரேலிய இலக்கிய விழாவில் பெருமாள் முருகன்: ஆஸ்திரேலியா, அடிலெய்டு நகரில் நடைபெறும் ‘அடிலெய்டு ரைட்டர்ஸ் வீக்’ (Adelaide writer's week) இலக்கிய விழாவில் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பங்கேற்றுள்ளார். இந்த இலக்கியத் திருவிழாவுக்கு அழைக்கப்படும் முதல் தமிழ் எழுத்தாளர் இவர்தான்.

தான் திரும்ப எழுத வந்ததைப் பற்றி பேராசிரியர் ரோனா கோன்சால்வஸுடனான ஓர் அமர்விலும் மீனா கந்தசாமி, நிலஞ்சனா எஸ் ராய், ரோனா கோன்சால்வஸ் ஆகியோருடன் பாலின, சாதி, வகுப்பு ஆகிய அம்சங்களை எழுதுவதன் சவால்கள் குறித்த மற்றோர் அமர்விலும் அவர் பங்கேற்றுள்ளார்.

அகரமுதல்வனின் துங்கதை வடிவம்: ஈழ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அகரமுதல்வன். துங்கதை வடிவத்தில் ‘போதமும் காணாத போதம்’ என்கிற தலைப்பில் ஒரு தொகுப்பை வெளியிடவுள்ளார். ‘துங்கதை தன்னொடு தண்ணென் றெய்திற்றே’ எனக் கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் இந்தச் சொல் ஒன்றைப் புகழ்ந்து போற்றுவதைக் குறிக்கிறது.

குறுங்கதைகளாகவும் ஒரு பெரிய கதையின் பாகமாகவும் இந்தப் படைப்பை வாசகர் வாசித்துப் பார்க்கலாம். நாளை (10.03.24) காலை 10 மணி அளவில் திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் இதன் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், கரு.ஆறுமுகத்தமிழன், மரபின் மைந்தன் முத்தையா, செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in