Published : 04 Feb 2018 09:58 AM
Last Updated : 04 Feb 2018 09:58 AM

எந்தப் பயனுமில்லை என்பதால்தான் கவிதை ஓர் அற்புதம்! - நிகனோர் பர்ரா கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் டேவிட் உங்கரின் பேட்டி

டே

விட் உங்கர். புகழ்பெற்ற எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். மொழியாக்கங்களுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர். சமீபத்தில் காலமான லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞரான நிகனோர் பர்ராவின் கவிதைகளை மொழியாக்கம் செய்து தொகுத்தவர். மின்னஞ்சல் வழியாக அவருடன் உரையாடியதிலிருந்து...

எதிர்க் கவிதையின் பிதாமகனான நிகனோர் பர்ரா கவிதைகளின் தொகுப்பாசிரியராக இருந்திருக்கிறீர்கள். எதிர்க் கவிதையுடனான உங்கள் உறவு குறித்துச் சொல்லுங்களேன்...

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கவிதையும் மொழியாக்கமும் பயின்றுகொண்டிருந்தேன் அப்போது நிகனோர் பர்ராவின் எழுத்து அறிமுகமானது. சாதாரண மொழி, நகைச்சுவை, அறிவியல் ஆகியவற்றை அவர் பயன்படுத்திய விதம் என்னைக் கவர்ந்தது. அவரது கவிதையொன்றை மொழியாக்கம் செய்து, ‘மாசசூஸிட்ஸ் ரிவ்யூ’ இதழுக்கு அனுப்பினேன். அவர்கள் அந்தக் கவிதையை அடுத்த இதழின் பின்னட்டையில் பிரசுரித்தார்கள். என் பயணம் தொடங்கிவிட்டது.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுக்க ‘மரபிலிருந்து விடுபட்ட கவிதை’ (Free verse) என்னும் கவிதை வடிவம் பெருமளவில் வளர்ச்சியடைந்தது. பல்வேறு மொழியைச் சார்ந்த கவிதை ஆளுமைகள் அதைப் பின்பற்றி எழுதினார்கள். ஆனால், எதிர்க் கவிதையைப் பெருமளவில் புகழ்பெற்ற கவிகள் பின்தொடரவில்லை. இந்த நிலை என்பது எதிர்க் கவிதை எனும் கவிதை வடிவத்தின் வீழ்ச்சி என்று கருதலாமா? இன்றைக்கு எதிர்க் கவிதையின் போக்கு உலகளவில் எந்த நிலையில் இருக்கிறது?

இங்கு ஒரே பிரச்சினை, மிக அதிகமாகக் கவிதைகள் எழுதுகிறார்கள் என்பதுதான். உண்மையாகவே சக்தி வாய்ந்த கவிதை - அட்ரீயன் ரிச், நஜீம் ஹிக்மத் இருவரையும் மனதில் கொண்டு சொல்கிறேன் - அர்த்தமில்லாத குப்பையில் காணாமல் போகிறது. தங்கள் யாப்பில் எதிர்க் கவிதையின் கூறுகளை உள்வாங்கிக்கொண்ட ரோகி தால்தோன், ஹ்வான் கில்மான் போன்றோரின் கவிதைகளை நேசிக்கிறேன்.

மரபிலிருந்து விடுபட்ட கவிதைக்கும் எதிர்க் கவிதைக்கும் என்ன மாதிரியான வேறுபாடு அல்லது உறவு இருக்கிறது?

பர்ராவின் எதிர்க் கவிதைகளின் முன்னோடி என்று வசன கவிதையைச் சொல்ல விரும்புவேன். கவிஞர்களிடமும் கவிதைகளிலும் காணப்பட்ட தீவிரத்தன்மையையும், தன்னைக் கொண்டு மட்டுமே உலகையே மாற்றிவிட முடியும் என்ற எண்ணத்தைக் கவிதை கொண்டிருப்பதையும் பர்ரா எள்ளி நகையாடினார். பசி, மரணம், புவிவெப்பமாதல், படுகொலைகள் பற்றி கவிதை எழுதுவது, தன்பாலின உறவாளர்கள் இழிவுபடுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் எதிராகக் கவிதைகள் எழுதுவது இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் இது போன்ற சீர்கேடுகளுக்கு முடிவு கட்டும் என்ற நம்பிக்கை கொண்ட ‘தீவிர’ கவிஞர்கள் ஏராளமாய் இருக்கின்றனர். இந்த விஷயங்கள் குறித்து எழுத வேண்டும் என்று கவிஞர்களை நானும் ஊக்குவிக்கிறேன். இவை நம் கருத்துக்கும் சிந்தனைக்கும் உரியவை. ஆனால், விவாதத்தின் தரத்தைத் தம்மால் உயர்த்த முடியும் என்று கவிஞர்கள் தங்களை ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. அல்லது, ஒரு உயிரையேனும் காப்பாற்ற முடியும் என்றுகூட நம்புவதற்கில்லை. கவிதையால் எந்தப் பயனுமில்லை என்பதால்தான் அது அற்புதமாக இருக்கிறது.

‘கடவுள் உலகத்தை ஒரு வாரத்தில் உருவாக்கினார், நான் அதை ஒரு கணத்தில் அழித்துவிட்டேன்’ எனும் தனது கவிதை வரிக்கான பொருள் தனக்குத் தெரியாது என்று ஒரு நேர்காணலில் பர்ரா சொல்கிறார். அந்தக் கவிதைகளின் தொகுப்பாசிரியரான நீங்களாவது அதன் பொருளை உள்வாங்கிக்கொண்டீர்களா?

சமயங்கள், அரசியல் கோட்பாடுகள், தீவிரத்தன்மை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பு, மார்க்ஸியம் ஆகியவற்றின் கடவுளரைத் தாக்கும் ஒரு வகை தீவிரவாதிதான் பர்ரா. அவரது கவிதை எல்லா ‘இஸம்’ களையும் தாக்குகிறது- ‘சிங்கத்துக்கும் எருதுக்கும் ஒரே சட்டம் என்பது கொடுங்கோன்மை’ என்று சொன்ன வில்லியம் பிளேக்குடன் அவர் ஒரு வகையில் உடன்படுகிறார். கட்டற்ற தனித்தன்மையை அவர் போதிக்கிறார்.

எதிர்க் கவிதை என்பது ஒரு விதத்தில் தாவோயிஸம்தான் என்று பர்ரா சொல்கிறாரே?

அவரது கவிதை கருத்து, முரண் கருத்து ஆகிய இரண்டையும் தன்னுள் கொண்டிருப்பதால் அது தாவோயிஸத்தன்மை கொண்டது என்று சொல்லலாம். தாவோ ஞானி லாவோ ட்சு, ‘எவனொருவன் அறிந்தவனோ/ அவன் பேசுவதில்லை;/ எவனொருவன் பேசுகிறானோ/ அவன் அறியாதவன்’ என்கிறார். நேர்மறைத்தன்மையும் எதிர்மறைத் தன்மையும் ஒருங்கிணைந்து இருப்பது பற்றியதும், அறுதி என்று கொள்பவை அழிவது குறித்ததும்தான் தாவோயிஸ தத்துவம்.

ரொபர்த்தோ போலான்யோ தனது கதையொன்றில் நெருதாவின் இலக்கியத் தரத்தைக் கேள்விக்குட்படுத்தி, நிகனோர் பர்ராவை உயர்த்திப் பிடிக்கிறார். இது பெரும்பான்மையான லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடம் இழைந்திருக்கும் ஒரு போக்குபோல் தெரிகிறதே...

லத்தீன் அமெரிக்கக் கவிஞரான ஹுய்தோப்ரோ, ‘கவிஞன் என்பவன் ஒரு சிறுதெய்வம்’ என்று எழுதினார். ஒலிம்பஸ் மலையில் ஒரு பெருந்தெய்வமாய் நெருதா நிலைபெற்றபின், அவருக்கு அடுத்து வந்தவர்கள் அவரைச் சிம்மாசனத்திலிருந்து அகற்ற வேண்டியதாயிற்று. கார்ஸியா மார்க்கேஸின் நிலையும் அவ்வாறுதான். இது வரலாற்றில் மீண்டும் மீண்டும் முடிவின்றி நிகழ்கிறது. ‘வெற்றுத் தாளை மேம்படுத்துவதே கவிஞனின் பணி’ என்று பர்ரா சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.

எங்கள் மொழியின் சங்க காலக் கவியான அள்ளூர் நன்முல்லை, ‘கவிதை என்பது வடிவத்தில் இல்லை. அது காதலில் இருக்கிறது’ என்று காதலை முன்வைத்துக் காலத்தைச் சமைந்துபோக வைக்கிறாள். உங்கள் லத்தீன் அமெரிக்கப் பண்டைய மொழிமரபில் தோன்றிய அமர கவிகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

முன்னமே சொன்னதுபோல், பல முக்கியமான லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களை ரசித்து வாசிக்க முடியும். செஸார் வயேஹோ பெரு நாட்டுக் கவிஞர், நெருதாவின் சமகாலத்தவர். அவரது கவிதைகள் ஒரு தங்கச் சுரங்கம், தொனி வேறுபாடுகள் நிறைந்தவை, காலம், வெளி, உணர்வில் மாறுபாடுகள் கொண்டவை, மிக ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துபவை. வேறொருவரின் வாழ்வில் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியம் கொண்ட கவிதை ஒன்றை எழுத வேண்டும் என்று உங்களைத் தூண்டக்கூடியது எதுவானாலும் அதை அணைத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் என் அடிப்படை நம்பிக்கை. அல்லூர் நன்முல்லை அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், நேசம் எளியதல்ல, மிகவும் சிக்கலானது.

- கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர், ‘உன்னதம்’ இதழின் ஆசிரியர், தொடர்புக்கு: unnatham@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x