Last Updated : 28 Feb, 2018 08:07 AM

 

Published : 28 Feb 2018 08:07 AM
Last Updated : 28 Feb 2018 08:07 AM

எமதுள்ளம் சுடர் விடுக 31: வரலாற்றுத் துறையிலும் வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது

ழுத்தாளர் சு.வெங்கடேசனின் சமீபத்திய படைப்பு: ‘வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள்’. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. கீழடி ஆய்வின் தொடக்கம், அது வெளிப்படுத்திய வரலாற்றுப் புரிதல்கள், உண்மைகள் வெளிவராமல் தடுக்க - முயற்சிக்கும் அதிகாரத்தின் கோரமுகங்கள் போன்ற பல விஷயங்களை உண்மை சார்ந்து எழுதிய, சிறந்த கட்டுரைத் தொகுதி இது.

நூல், 2 பகுதிகளால் ஆனது. முதல் பகுதி, மதுரை மற்றும் வைகை நாகரிகம் பற்றியது. 2-வது பகுதி, கீழடி அகழாய்வு பற்றியது.

ஆண்டின் நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகை, மனித நாகரிகம் தழைக்கும் நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கி யிருக்கிறது. இதை சங்கத் தமிழ்க் கவிஞர்கள் அறிவர். ‘எதனினும் உயர்ந்த தம் மொழியைச் சேர்ந்து தமிழ் வையை’ என்று வைகையைப் புகழ்ந்தார்கள் தமிழ்ப் புலவர்கள். மதுரை அழிவதில்லை. முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் மதுரையின் மடியில்தான் பிறந்தன. பிறகு கடல்கொண்டது. ஊர் அழியவில்லை. மாறாக, 3-வது சங்கம் தோன்றியது. மதுரையை கண்ணகி அழித்ததாக இளங்கோ சொன்னார்தான். அரண்மனையும் அரண்மனையைச் சார்ந்த அதிகார ஆணவமும்தான் எரிந்தது. கண்ணகியின் நோக்கமும் அதுதான். மதுரை, தன் வாழ்க்கையை உயிர்ப்புடன் தொடர்ந்தது.

தொல்லியல் துறையின் கள ஆய்வு

மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தைப் பற்றி முழுமை யான கள ஆய்வை நடத்த முடிவு செய்தது. அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையிலான குழு, 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வைகையில் தொடக்க இட மான வெள்ளிமலையில் இருந்து, அது வங்கக் கடலில் கலக்கும் அழகன்குளம் - ஆத்தங்கரை வரை, ஆற்றின் இருபுறமும் 5 கி.மீ தூரத்துக்குள் இருக்கும் எல்லா கிராமங்களிலும் தொல்லியல் துறை கள ஆய்வை நடத்தியது.

சுமார் 350 கிராமங்களில் கள ஆய்வை நடத்திய இக்குழு 293 கிராமங்களில் ஏதே னும் ஒருவகையில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதாவது 80 சதவீத கிராமங்கள் வளமான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அர்த்தம் வைகை நதிக்கரைக் கிராமங்கள், தமக்குக் கீழே மண்ணுக்கு அடியில், பல ஆயிரம் ஆண்டு கள் முன்னர் வாழ்ந்த தமிழ் மூதாதையர் வாழ்க்கை முறையை, நாகரிகத்தை, பண்பாட்டுச் செறிவை பாதுகாத்து வைத்திருக்கிறன்றன என்பதே ஆகும். ஒரு பண்பாட்டுப் புதையல், மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. தோண்டி எடுக்கும் மனிதர்களை அப்புதை யல் வரவேற்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையி லான குழு அதை அறிந்திருந்தது. வைகை நதிக்கரையில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை 293 கிராமங்கள். இதிலேயே மிக அதிகமான தடயங்கள், தொல்லியல் எச்சங் கள் காணப்பட்ட கிராமம் கீழடி ஆகும். மதுரையில் இருந்து 15 கி.மீ தூரத்தில் சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் கிராமம் - கீழடி.

முக்கியத்துவம்தான் என்ன?

பொதுவாகத் தொல்லியல் துறை அகழாய் வுப் பணிகளிலும் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்ந்துகொண்டே இருக்கிறது. அன்றைய, இன்றைய மத்திய அரசுகள் விந்திய மலைக்குத் தெற்கே நாடுகள் இல்லை என்று நினைக்கின்றவை. மத்திய அரசுகள் தனது 5 அகழாய்வுப் பிரிவுகளை வட நாட்டிலும், ஒன்றை மட்டும் பெங்களூருவிலும் வைத்திருக்கும் துறை அது. கடந்த 50 ஆண்டுகளில் கர்நாடகத்தில் நடத்திய தொல்லியல் ஆய்வுகளில் நான்கில் ஒரு பங்கை கூட தமிழகத்தில் நடத்தவில்லை. இந்தியா முழுவதும் 45 இடங்களில் கள அருங்காட்சியங்கள். தமிழகத்தில் ஒன்றே ஒன்று. அதுவும் மனிதர் சுலபமாகப் புகமுடியா கோட்டைக் குள்.

சங்க கால தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்தமைக் கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஒரு நகர நாகரிகம் இருந்தமைக்கான முழுமையான அடையாளம் கீழடியில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 2000 - 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வளர்ச்சி பெற்ற முழுமையான நகரம். இந்தக் கண்டுபிடிப்பு தமிழக வரலாற்றுக் காலத்தை புதிய மறுபரிசீலனையை நோக்கி நகர்த்துகிறது.

தமிழகச் சங்க இலக்கியம் புனைவு அல்ல; அன்றைய யதார்த்தம் என்பதைக் கீழடி கண்முன்னே நிரூபிக்கிறது. இந்தியாவின் நகர நாகரிகம் அரப்பா, மொகஞ்சோ தாரோ என்றெல்லாம் இனி நீட்டி முழக்க முடியாது. கீழடி, மேலடிக்கு வந்து நிற்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள், சிந்துவெளி நாகரிகம்போல ஒரு நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இலக்கியத்தை ஏற்க முடியாது என்றார்கள். அவர்கள் கருத் தைத் தகர்த்து, தமிழகச் சங்க காலம் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்த நிலம் என்பதை ஏற்றே ஆக வேண்டும்.

பிராமி எழுத்தும் பானை ஓடும்

கீழடியில் நிகழ்ந்த ஆய்வை மிகவும் துல்லியமாக அறிந்து வெளிப்படு்திய எழுத்தாளர் வெங்கடேசன், மேலும் பல முக்கியத் தகவல்களையும் அதிகார மட்டத்தில் நடப்பது என்ன என்பதையும் எழுதியிருக்கிறார்.

இதுவரை 5,300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களே, தமிழகத்தின் வரலாற்றுக் கால நிர்ணயத்தை அளவிடும் அடிப்படைத் தரவுகள். அந்தத் தரவுகள் தமிழக நாகரிகத்தின் காலத்தை இன்னும் பின்னோக் கித் தள்ளுவதாக இருக்கும். இது ‘இன்றைய’ அரசியல் சூழ்நிலையில் பலருக்கு ஏற்புடையதல்ல.

இதுவரை 71 தமிழ் பிராமி எழுத்துகள், பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. பிராகிருதமும் உள்ளது. ஆப்கனிஸ்தான் பவள மணிகள், ரோமாபுரி மண்பாண்டங்கள் என உலக வணிகமும், பண்பாடும் ஊடறுத்த உலகச் சந்தை நிலைபெற்ற நகரம் ஒன்று கீழடி மண்ணுக்குள் படுத்துக் கிடக்கிறது.

கீழடியில் இருக்கும் தொல்லியல் மேடு, 110 ஏக்கர் பரப்புடையது. வெறும் 50 சென்ட் நிலப்பரப்பில்தான் அகழாய்வு நடந்துள்ளது. இந்தச் சிறு நிலப்பரப்புக்குள்ளேயே இத்தனை என்றால், முழுவதும் வெளிப்பட் டால் என்ன அற்புதம் வெளிப்படும்? (தமிழுக்கு உயர்வு வந்துவிடுமோ?)

மத ஆதிக்கம் துளியும் இல்லை

அறிஞர் மா.இராசமாணிக்கனார் ‘இன்று உள்ள மதுரை, சங்க கால மதுரை அல்ல’ என்று நிரூபணம் செய்த அறிஞர். அவர் கருத்துப்படி அவர் சொல்லும் பூகோளப்படி பழைய மதுரை நகரம் இன்றைய கீழடியை நோக்கித் திரும்புகிறது. கீழடியில் இதுவரை கிடைத்துள்ள 5,300 பொருட்களில் ஒன்றுகூட மத அடையாளம் சார்ந்த பொருள் இல்லை. பெரு மதங்களின் ஆதிக்கம் உருவாகாத காலகட்டத்தின் ஓர் அபூர்வ கண்டுபிடிப்பே கீழடி.

‘தமிழர்கள் இந்த மேன்மையைக் காக்கப் போகிறார்களா, இல்லையா?’ என்று தமிழர்களிடம் கேட்கிறார், வெங்கடேசன். கீழடி வரலாற்றுப் பொருட்களை அருங்காட்சியகம் வைத்துக் காப்பாற்றி, மக்கள் முன் வைக்கப் போகிறதா, அரசுகள்? கீழடி அருங்காட்சியகம் ‘அரசியல்’ காரணமாக தடுமாறுகிறது. அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, நமக்கு - தமிழர்க்கு? குஜராத் வாட் நகரில் (மோடியின் சொந்த ஊர்) மத்திய தொல்துறை 2017 -ம் ஆண்டுக்கான அகழாய்வுப் பணியைத் தொடங்கிவிட்டது. ராஜஸ்தானிலும் 2017-ம் பணி தொடங்கி நடக்கிறது.

‘கீழடியில் பணி தொடர்வதற்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துவிட்டது’ என்று எழுதுகிறார் வெங்கடேசன் மிகுந்த துயரமுடன்.

கீழடியோடு அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட வட இந்திய பகுதியைச் சேர்ந்த பிற இடங்களுக்கு அனுமதித்துவிட்டு, தென் இந்தியாவின் ஒரு இடமும் கூட அனுமதி மறுக்கப்பட்டது. எதனால்? புதியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் தொல்லியல் பொருட்கள் கிடைத்திருப்பது, கீழடியில்தான். அதன் தொடர்ச்சியாக அகழாய்வை விரிவுபடுத்தும் முன்னுரிமை கீழடிக்கே வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததன் காரணம் என்ன?

வெங்கடேசன் கேள்விக்கு யார் பதில் சொல்லப் போகி றார்கள்?

தமிழர்க்கு அநீதி

தொழுவீராவில் 13 ஆண்டுகள், நாகார்ஜுன கொண்டா வில் 10 ஆண்டுகள், அஜிசித்ராவில் 6 ஆண்டுகள், லோத்த லில் 5 ஆண்டுகள் ஆய்வு செய்தவர்கள் கீழடியில் இரண்டே ஆண்டுகளில் ‘அவசரம் அவசரமாக’ ஆய்வை முடிவுக்கு கொண்டுவர... அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தம்?

மகாபாரதம், ராமாயணம் தொடர்பான இடங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வை கோரிய காரணம் என்ன? கேட்கிறார் வெங்கடேசன்.

110 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்லியல்மேட்டில் வெறும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான இடத்தில் மட்டும் ஆய்வை நிகழ்த்திவிட்டு, அந்த ஆய்வும் மிகச் சிறந்த நிரூபணங்களைத் தந்தபோதும், எந்த நியாயமும் இல்லாமல் ஆய்வை நிறுத்த என்ன காரணம்?

ஓர் ஆய்வாளர் என்ற முறையில், வெங்கடேசனுக்கு யார் பதில் சொல்ல இருக்கிறார்கள்?

தட்டி கேட்பவர் எவரோ?

2005-ம் ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகள், இப்போதுவரை வெளிவரவில்லை ஏன்? எது அதிகாரவர்க்கத்தை தடுக்கிறது? எதனால் தடுக்கிறது?

சு.வெங்கடேசன், அடிப்படையில் ஓர் எழுத்தாளர். 4 கவிதை நூல்கள், இரண்டு ஆய்வு நூல்கள், முக்கியமாக ‘காவல் கோட்டம்’ நாவலாசிரியர் என்கிற சிறப்புகள் அவருக்கு உண்டு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை இயக்குபவர்களில் ஒருவர். அவருடைய வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள், மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியிருக்கும் புத்தகம். வாராது வந்த கீழடி ஆய்வு, தமிழ் வெளியில் மிகப்பெரிய நகர்வை ஏற்படுத்த இருந்த நிலையில், நிறுத்தப்பட்டது.

இவை - 100 கேள்விகளைத் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றன. இதனால் தொடர்புடைய அரசுகளுக்கு ஏற்பட இருக்கும் களங்கம், இன்னும் சில ஆண்டுகளில் மாறிவரும் அரசுகள் கீழடியில் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எல்லாம் இதன் விளைவுகளாகும்.

முக்கியமான ஒரு கேள்வி - ‘கீழடி ஆய்வுகள் தமிழ், தமிழர் வரலாற்றை மிக உச்ச நிலைக்குக் கொண்டுபோக இருக்கிறது, என்பதால்தான் கீழடி ஆய்வுகள் நிறுத்தப்பட்டு உள்ளதா?’ என்று ஒரு தமிழர் என்னிடம் கேட்டார்.

அப்படியும் இருக்குமோ?

‘தமிழ்நாடும் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது. தமிழ்நாட்டுப் பெருமை, இந்தியாவுக்கும்தானே?’ என்று நான் சொன்னேன்.

- இன்னும் சுடர்விடும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x