

தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியல் களத்திலும் தவிர்க்கவே முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் மு.கருணாநிதி. தனது பல்லாண்டு காலப் பொதுவாழ்க்கையில் விளைந்த அனுபவத்தினாலும் தீர்க்கமான சமுதாயப் பார்வையினாலும் பல நேரம் இந்திய அரசியல் போக்கைத் தீர்மானிப்பவராகவும் அவர் விளங்கினார்.
திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதுச் சிறுவனாக இருந்த கருணாநிதி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக அரசியல் தடத்தில் பயணிக்கத் தொடங்கி, 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தனது காத்திரமான பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.
அரசியலில் மட்டுமின்றி, கலை இலக்கியத் துறையிலும் கருணாநிதியின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. கருணாநிதியைப் பற்றி அவ்வப்போது சொல்லப்பட்ட அவதூறுகள், வதந்திகள், வாய் வழியாகப் பரப்பப்பட்ட பொய்யான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் 100 கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களாக இந்நூலை எழுதியுள்ளார் பத்திரிகையாளர் கோவி.லெனின். - மு.முருகேஷ்
கலைஞர் 100
கோவி.லெனின்
மன்றம் வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 80722 16330
நம் வெளியீடு | பொது சிவில் சட்டம்: எளிய விளக்கம் - நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே பெரும் விவாதப் பொருளாக நீடித்துவரும் ஒன்று ‘பொது சிவில் சட்டம்’. மக்களவைத் தேர்தல் 2024ஐ சந்திக்கும் வேளையில், இந்த விவாதம் இன்னும் தீவிரம் கண்டுள்ளது. இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டுவருவதே இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம்.
‘சிறுபான்மைச் சமூக மக்களின் மீது பொது சிவில் சட்டத்தைத் திணிப்பது, அவர்களின் தனிநபர் உரிமைகளையும் பாதுகாப்புகளையும் நீர்த்துப்போகச் செய்வதுடன், அவர்களின் பண்பாட்டுச் சுயாட்சியை அழித்து, மதச் சுதந்திரத்தையும் சீர்குலைக்கும்’ என்பது இச்சட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதம். இந்தப் பின்புலத்தில் குடிமக்களாகிய நமக்கு எழுகின்ற ஓர் அடிப்படைச் சந்தேகம்: ‘பொது சிவில் சட்டம் நல்லதா, கெட்டதா?’. இந்தக் கேள்விக்கு எளிதாகவும் தெளிவாகவும் பதில் தரும் புத்தகம் இது.
பொது சிவில் சட்டம்
இந்தியாவுக்கு வேண்டுமா, வேண்டாமா?
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
நம்பிக்கையும் கோபமும்: திருநங்கை கல்கி சுப்ரமணியம் தனது நாள்குறிப்பில் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கருத்துகளை ஒரு நூலாகத் தொகுத்திருக்கிறார்; ‘பூஜ்யம்’, ‘போர்’, ‘ஆன்மா’, ‘இரை’, ‘எனக்கென்று ஒரு இதயம்’ போன்று சில தலைப்புகளில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
‘உண்மையில் உண்மையான நான் என்பதற்குப் பாலினமே இல்லை’, ‘உள்நாட்டு அகதிகளாய் வாழும் ஒவ்வொரு திருநங்கைக்கும் தெரியும் பாலஸ்தீனிய, ரோஹிங்கிய, ஈழ, சிரிய, உக்ரேனிய அகதிகளின் வலி’, ‘வாழ்வைப் புதிதாய் வாழக் கற்ற பின் துயரேது? துள்ளல் மட்டுமே’ என்பது போன்ற வரிகளின் மூலம் தனது விருப்பம், நம்பிக்கை, சமூகத்தின் மீதான கோபம் ஆகியவற்றைப் பதிவுசெய்திருக்கிறார். ‘நான் கல்கியானது எப்படி?’, ‘திருநங்கைகள் ஏன் பாலியல் தொழில் செய்கிறார்கள்’ என்பது போன்ற கட்டுரைகளில் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் உண்மையானவை. - ராகா
ஒரு திருநங்கையின் டைரிக் குறிப்பு
கல்கி சுப்ரமணியம்
திருநங்கை பிரஸ்
விலை: ரூ.130
தொடர்புக்கு: thirunangaipress@gmail.com
‘என்றும் தமிழர் தலைவர்’ அறிமுக விழா
தந்தை பெரியார் பிறந்த மண்ணாகிய ஈரோட்டில், ‘என்றும் தமிழர் தலைவர்’ நூலின் அறிமுக விழா இன்று (மார்ச் 2, சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. சமூக நீதிக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுக்கு, இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் புதுமலர் பதிப்பக நிறுவனருமாகிய கண.
குறிஞ்சி தலைமைவகிக்கிறார். ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான இந்நூலுக்குத் தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே நடைபெறும் இந்த முதல் நிகழ்வில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சார்ந்தவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆய்வறிஞர் பேராசிரியர் வீ.அரசு, திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் துணை ஆசிரியரும் ‘என்றும் தமிழர் தலைவர்’ நூலின் தொகுப்பாசிரியருமாகிய ஆதி வள்ளியப்பன் ஏற்புரை வழங்குகிறார். நிகழ்ச்சி நடைபெறும்
இடம்: பெரியார் மன்றம், பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு. நேரம்: மாலை 5.30 மணியளவில்.