நூல் வெளி: புனைவின் வழி துலங்கும் வரலாறு

நூல் வெளி: புனைவின் வழி துலங்கும் வரலாறு
Updated on
2 min read

மீட்க முடியாத வரலாற்றின் எச்சங்கள் நிலமெங்கும் புதைந்து கிடக்கின்றன. அதன் நீள அகலம் ஏதும் அறியாமல், யாதொரு திட்டமும் இல்லாமல் அவசரத்தின் பாதங்கள் அதில் ஏறிச் செல்கின்றன. மிதிக்கும் கல்லில், மிதிபடும் மணலில் ஏதாவது ஒரு வரலாறு மறைந்திருக்கலாம்; மறந்திருக்கலாம். அப்படியொரு மறக்கப்பட்ட வாழ்க்கைப் பின்னணியில் வெளியாகியிருக்கிறது, தமிழ்மகன் எழுதியிருக்கும் ‘ஞாலம்’ நாவல்.

நிலத்தின் அதிகாரத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகளையும் சொந்த நில மக்கள் கூலிகளாகவும் ஒரு வேளைக் கூழுக்கு வழியில்லாதவர்களாகவும் மாறிய நிலையைச் சகிக்க முடியாமல், தன் வாழ்நாள் முழுவதும் நில உரிமையை மீட்கப் போராடியவரின் கதையை, வரலாற்றுப் பின்னணியோடு விவரிக்கிறது இந்நாவல். அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் என்கிற மனிதரின் வாழ்க்கைப் பின்னணியில், தன் மக்களின் நிலம் எப்படி, யாரால் அபகரிக்கப்பட்டது என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் விரிவாகப் பேசுகிறது, ‘ஞாலம்’.

அவருடைய தொடர் போராட்டத்தையும், மூடநம்பிக்கைகளில் விழுந்துகிடந்த மக்களை உசுப்பும் வேலையைத் தொடங்கிய துணிச்சலையும் தெளிவாகவும் அழகாகவும் பதிவுசெய்கிறது இந்த நாவல். சுமார் 160 வருடங்களுக்கு முன்பு, 19ஆம் நூற்றாண்டில் ஒருவர் இதைச் செய்திருக்கிறார் என்கிற ஆச்சரியம் இந்த நாவலை வாசிப்பதன் வழி உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை. 1860களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ‘இந்து மத ஆசார ஆபாச தரிசினி’, நில உடைமைப் போராட்டம் பற்றிய ‘பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்’ ஆகிய நூல்களை எழுதியிருக்கும் வேங்கடாசல நாயகர், ஆசிரியராக இருந்து பின், சுண்ணாம்புத் தொழிலில் இறங்கியவர்.

இவரின் சமகாலத்தவர் ராமலிங்க அடிகளார். இருவரும் அடுத்தடுத்த தெருக்களில் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். ஜாதி, மத, மூடத்தன எதிர்ப்பு போன்றவை இருவரின் எழுத்துகளிலும் பிரதிபலிப்பது ஆச்சரியமூட்டும் ஒற்றுமை. கொளுத்தும் வெயிலில் பொட்டி வண்டியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் சுற்றித் திரிந்து, உழைக்கும் மக்களின் நிலை கேட்டு வருந்தி, தனது துண்டால் முகத்தைத் துடைத்துக்கொள்ளும்போது, வேங்கடாசல நாயகர் உணர்கிற வேனலை நம்மாலும் உணர முடிகிறது.

சொந்த நில மக்கள் பிழைப்புக்கு இடம்பெயரும் அவலம் கண்டு, அடிக்கடி மாறிவிடும் ஆங்கில மாவட்ட ஆட்சியர்களிடம் ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து ஆரம்பித்து நிலம் பறிக்கப்பட்ட உண்மையை விளக்கி, மனு அளித்துப் போராடினார். அவரது விடாமுயற்சிக்குக் கடைசிக் கட்டத்தில், குறைந்த அளவே பலன் கிடைத்தது. என்றாலும் அதை இந்த நாவல் வழி வாசிக்கும்போது நமக்கும் ஆசுவாசம் கிடைக்கிறது.

ஏழுகிணறு பகுதியில் வசித்த அவர் வீட்டைச் சுற்றித்தான் அன்றைய சென்னைப் பட்டினத்தின் மொத்த மாற்றங்களும் நிகழ்ந்ததாகச் சொல்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு பகுதி முடியும்போதும், ஆசிரியர் காட்டுகிற வரலாற்று ஆதாரங்கள், நாவல் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. இடையிடையே வரும், தஞ்சை மராத்திய மன்னர்களின் அரசு ஆவணங்களான ‘மோடி எழுத்து’, ‘அருட்பா மருட்பா’ மோதலுக்குப் பின் இருக்கும் மூன்றாவது புள்ளி, அது தொடர்பான உரையாடல்கள், சரபோஜி சிவாஜி மன்னரின் 12 மனைவிமாரின் வழக்கு, அணையா அடுப்பு கொண்டு பசியாற்றும் ராமலிங்க அடிகளார், செங்கல்வராயரின் உதவும் மனப்பான்மை, வால்டாக்ஸ் வரி, வெள்ளைக்காரர்கள் ரயில் விடுவதற்கான காரணங்கள் எனப் போகிற போக்கில் விவரிக்கும் வரலாற்றுச் சம்பவங்கள் நாவலின் சுவாரசியத்தைச் சுகமாக்குகின்றன.

அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த, தமிழின் முதல் நாத்திக நூலான ‘தத்துவ விவேசினி’ இதழில் விளம்பரம் செய்தும், ‘இந்து மத ஆசார ஆபாச தரிசினி’ விற்காமல் தேங்கிவிட்டதைச் சொல்லும்போது, இன்றைய புத்தக விற்பனைக் காலமும் கண்முன் வந்துபோகிறது. இதுபோன்ற வரலாற்றுச் சம்பவங்களைக் கதையாக்கும்போது, அது கட்டுரையாகிவிடும் அபாயமும் இருக்கிறது. ஆனால், தமிழ்மகன் அதை லாகவமாகப் புனைவாக்கி இருப்பதுதான் இந்த நாவலின் பலம். அதைத் தமிழ்மகனின் பலம் என்றும் சொல்லலாம்.

ஞாலம்
தமிழ்மகன்

மின்னங்காடி பதிப்பகம்
விலை: ரூ.335
தொடர்புக்கு: 7299241264

- தொடர்புக்கு: egnathraj.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in