

என் கல்லூரி நாள்களில்தான் இராசேந்திர சோழன் என்கிற பெயரை ‘செம்மலர்’ பத்திரிகையில் தொடர்ச்சியாகப் பார்த்தேன். டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, மேலாண்மை பொன்னுசாமி போன்ற எழுத்தாளர்களின் உரத்த குரலில் பெரும் கலக்கமடைந்திருந்த என்னை இராசேந்திர சோழன், கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன் போன்ற படைப்பாளிகள் கலைக்கு மிக அருகில் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
மற்ற இருவரையும்விட இராசேந்திர சோழன் மனதிற்கும் வாசிப்பதற்கும் என் வாழ்விற்கும்கூட மிக நெருக்கமாக வந்ததற்குக் காரணம், அவர் எங்கள் மண்ணின் படைப்பாளி. எங்கள் மல்லாட்டைக் கொல்லையிலிருந்து கூப்பிட்டால் மயிலம் அரசுத் தொடக்கப்பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருக்கிற இராசேந்திர சோழனுக்குக் கேட்டுவிடும் என நம்பினேன். என் நிலப்பரப்பின் மொழியை அவர் கதைகளில்தான் முழுதாகப் பருகினேன்.
என் அப்பாவும் அம்மாவும் வீட்டில் எப்போதும் பேசிக்கொள்ளும் “வா தே” “போ தே” என்கிற சொல்லாடலை அவரது ‘தனபாக்கியத்தோட ரவ நேரம்’, ‘புற்றிலுறையும் பாம்புகள்’ போன்ற கதைகளில் வாசித்து, என் குடும்பமும் இலக்கிய உரையாடலுக்கு அருகில்தான் உள்ளது என திருப்திப்பட்டுக்கொண்ட நாள்கள் அவை.
முற்போக்கு இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டே, அசலான தமிழ் நிலத்தின் கதைகளை எழுதிய படைப்பாளிகளானஜெயகாந்தன், இராசேந்திர சோழன், கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன் எனச் சிலரையே இப்போதும் சொல்ல முடிகிறது.
ஆனால், இந்த மதிப்பீடு இராசேந்திர சோழனின் படைப்பாற்றல் மிக்க ஆரம்ப காலப் படைப்புகளுக்கும் பொருந்தும். அவரது பிந்தைய படைப்புகள் அதீத முற்போக்குத் தமிழ்த் தேசியம் அல்லது மார்க்சிய இலக்கியங்களைக் கிண்டலடித்தல் எனப் படைப்பு மனநிறைவிலிருந்து விலகி வெகுதூரம் போய்விட்டன.
எப்போதாவது ‘செம்மல’ரில் படித்த கதைகளை ஒரு சேர க்ரியாவின் வெளியீடான ‘எட்டு கதைகள்’ தொகுப்பாக வாசித்தபோது, அப்போது என் வாசிப்பிலிருந்து மற்ற எல்லாத் தொகுப்புகளையும் பின்னுக்குத் தள்ளவேண்டியிருந்தது. அவை என் மண்ணின் அசலான படைப்புகளை உணர்வதற்குப் பிரயத்தனப்படவில்லை.
புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பூமணி, வண்ணநிலவன் என எல்லாருமே எனக்கு வெகு தூரத்திலிருந்தார்கள். இராசேந்திர சோழன் மட்டும் நான் தொட்டு விடும் தூரத்திலிருந்தார்.
அவரது தொடக்கக் காலப் படைப்புகளில் இளம் தீவிர இலக்கியப் படைப்பாளிகள், மனம் தோய்ந்து, வருடத்திற்கு இரு முறையாவது மயிலத்திலேயே முகாமிட்டு இருப்பார்கள். அப்போது திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். படித்துக்கொண்டிருந்தேன். நினைத்த நேரத்தில் நண்பர்களோடு சைக்கிளிலோ டூவீலரிலோ மயிலம் போய் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
ஒவ்வொரு பயணத்திலும் மிகுந்த ஏமாற்றதோடு அறைக்குத் திரும்புவேன். காரணம், அன்றைய எங்கள் உரையாடலில் இலக்கியத்திற்குப் பதிலாக அவரின் அன்றைய அரசியலும் அவர் பார்வையில் இடதுசாரிக் கட்சிகளின் போதாமையும் அவரால் விமர்சிக்கப்படும்.
நான் பெருங்கனவோடு எதிர்பார்த்துப்போன என் நிலத்தின் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல் கிட்டத்தட்ட அவரின் நேர்ப் பேச்சில் எனக்குக் கிட்டவேயில்லை. அந்தக் காலம்தான் இராசேந்திர சோழன் என்கிற படைப்பாளி பின் அகன்று, அஸ்வகோஷ் என்கிற நாடகச் செயற்பாட்டாளர், அரசியல் முன்னெடுப்பால் முதல் வரிசையில் நின்ற காலம். என்னை மாதிரிப் பல இலக்கிய வாசிப்பாளர்களிடமிருந்து அவர் தூர விலகியதும் இக்காலத்தில்தான்.
தனது ‘எட்டு கதைகளி’ல் எட்டுக் கதைகளும் வட தென்னார்க்காடு மனிதர்களின் உயிருள்ள விவசாயம் சார்ந்த வாழ்க்கையையும் வீட்டிற்குள் ஏற்படும் பாலியல் பிரச்சினைகளோடும் மல்லுக்கட்ட நேர்ந்த வாழ்க்கையையும் அச்சு அசலாக அப்படியே சொன்னவை.
இப்படிப்பட்ட ஓர் உன்னதமான படைப்பாளி தன் வாழ்க்கையின் பின் பகுதியில் இயக்கம், தமிழ்த் தேசியம், அதன் செயல்பாடுகள் எனத் தன் மனதையும் உடலையும் பறிகொடுத்துத் தன் உயிரோட்டமுள்ள படைப்பு மொழியை இழந்தார் என்பதுதான் பெரும் துயரம்.
என் வாழ்க்கையின் பல தருணங்களில் ‘எட்டு கதைகளை’ப் பல முறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது எனக்கு ஒரு புதிய தரிசனத்தையும் அனுபவத்தையும் தரத் தவறியதே இல்லை. கொஞ்சமும் மிகையில்லாமல், கொஞ்சமும் சொல்லத் தவறாமல், வாசகனுக்கு விடவேண்டிய இடைவெளியை விடத் தயங்காமல் இம்மனிதால் எத்தனை கச்சிதமாகக் கதை எழுத முடிகிறது என ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
அந்த உந்துதலில்தான் அவரின் பல கதைகளை ‘கதை கேட்க வாங்க’ நிகழ்வில் உயிரோட்டமாகச் சொன்னபோது, தொலைபேசியில் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். பத்திருபது வருடங்களாக அறுந்துகிடந்த எங்கள் நட்பின் சங்கிலியை எந்தப் பட்டறைக்கும் போகாமலேயே மீண்டும் இணைத்துக் கொண்டோம்.
ஒரு சௌகர்யத்திற்காக தமிழ்நாட்டை இலக்கியரீதியாக வடக்கு, தெற்கு, மேற்கு எனப் பிரித்தால், எங்கள் வட திசை மக்களின் வாழ்க்கைப் பாட்டை எழுவதற்கு எங்கள் பலருக்கும் அவரே முன்னத்தி ஏர். இமயம், கண்மணி குணசேகரன், கரிகாலன், தங்கர்பச்சான், பவா செல்லதுரை, காலபைரவன், அசதா, செஞ்சி தமிழினியன் என இப்பட்டியல் தென்பெண்ணைக் கரையில் தொடங்கி பாண்டிசேரிக் கடற்கரை வரை நீளக்கூடியது.
ஒரு பெரும் படைப்பாளி என்பவன் தன் வாழ்நாளில் இப்படிப் பலருக்கு உந்துசக்தியாகவும் நேரடியான அல்லது மறைமுக ஆதர்சமாகவும் இருக்க வேண்டும். தெற்கில் எப்படி கி.ரா. கரிசல் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறாரோ அப்படியே எங்களுக்கு எப்போதும் இராசேந்திர சோழன்தான்.
‘விஷ்ணுபுரம் அறக்கட்டளை’யின் முதல் விருது அவருக்குத்தான் அறிவிக்கப்படவிருந்தது. மார்க்சியக் கொள்கைகளில் ஊறித் திளைத்திருந்த அவர் அதை நிராகரித்தார். விருதையும் பணத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கொரு ஒரு வலுவான காரணத்தைத் தேடும் படைப்பாளிகளுக்கு மத்தியில் தொடக்கத்திலேயே அதை நிராகரித்த உறுதியான மனம் அவருக்குண்டு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட அவர் ‘தமிழினி’இல் எழுதிய ‘இச்சை’ என்ற சிறுகதை பெரும் விவாதத்திற்கு உள்ளானதை தமிழ் இலக்கிய உலகம் அறியும். கலாச்சாரக் காவலர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இக்கதையின் நிஜ வடிவங்களைப் பல கிராமங்களில் நாம் தினம் தினம் இன்றும் எதிர்கொள்ள முடியும்.
இவ்வளவு நோய்மைக்குப் பின்பும் நிகழ் கலை இலக்கிய உலகோடு அவருக்குத் தொடர்பும் சர்ச்சையுமிருந்தது. பெரும் படைப்பாளிகள் பலரும் லௌகீகத்தோடும் நோய்மையாலும் வீட்டிற்குள் அடைந்து விடாமல் இப்படித்தான் எப்போதும் திமிருவார்கள். அதுதான் இராசேந்திர சோழன் என்கிற படைப்பாளியின் அடையாளம்.