

பூவிதழ் உமேஷின் ‘எழுத்தெனப்படுவது’ நூல் புதிய நோக்கில் இலக்கணத்தை நயம்படச் சொல்கிறது. எதுவொன்றையும் பிழையற்று உள்வாங்கும்போதுதான் அதன் உள்ளார்ந்த முழுமையை உணர முடியும். உச்சரிப்பிலும் உரைநடைகளிலும் மொழிப் பிழைகள் பெருத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், பிழையறப் பேசவும் எழுதவும் வேண்டியிருப்பதன் அவசியத்தைக் கூற ‘மயங்கொலிகள்’, ‘வல்லினம் மிகும் இடங்கள்’ ஆகிய இரு பகுதிகளைக் கொண்டு மொழியைக் கையாளும்போது உண்டாகிற பிழைப் பிணியைக் களைந்தெறிகிற மருந்தாக வந்துள்ளது இந்நூல்.
மயங்கொலி எழுத்துகளான ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகியன சொற்களில் எப்படி இயைந்து வருகின்றன என்பதை எடுத்துரைக்கும் விதம் எளிமையாகவும் வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை உருவாக்குகிற நேர்த்தியோடும் வந்துள்ளது.
தமிழின் பெருமிதங்களில் ஒன்றான ‘ழ’கரத்தின் சிறப்பை விளக்கும் ‘வாழை’ குறித்த விவரிப்பும் உவர் வனம் எனும் அழகிய சொல்லோடு அறுபத்தேழு பெயரைக் கொண்ட கடலின் பெயர்க் காரணத்தினை எடுத்தியம்புவதும் சிறப்பாக உள்ளது. சொற்கள் மீதான புதிய கண்டுபிடிப்புகள்தான் மொழியின் மீதான உறவாடலை, காதலை அதிகப்படுத்திக்கொண்டேயிருக்கும். அப்படியானதொரு விளைவை நிகழ்த்திக்காட்டுகிறது இந்நூல். - ந.பெரியசாமி
எழுத்தெனப்படுவது
இலக்கணம் நூல்
பூவிதழ் உமேஷ்
எதிர் வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9942511302
நேருவின் பொக்கிஷம்! - உலகில் புகழ் பெற்ற நூல்கள் பல உள்ளன. இந்தியாவில் அப்படி ஒரு நூல் என்று ‘மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள்’ அடங்கிய நூலைச் சொல்லிவிடலாம். நேரு சிறையில் இருந்த காலத்தில், தன் மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு இந்திய வரலாறு, உலக வரலாறு, சுய வரலாறு போன்றவற்றைக் கடிதமாக எழுதினார். அப்படிப்பட்ட கடிதங்களைத் தொகுத்துப் பல நூல்கள் வந்துள்ளன.
அதில் இந்திராவுக்கு உலக வரலாற்றை எழுதிய கடிதங்களின் சுருக்கமான தமிழ் வடிவம்தான் ‘உலக வரலாறு - மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள்’ நூலின் மூன்றாம் பாகம். 55 தலைப்புகளில் அன்றைய உலக நிலவரங்களைக் கடிதமாக நேரு எழுதியது நூலில் இடம்பெற்றுள்ளது. அன்றைய உலக அரசியல் பற்றி நேருவின் பார்வையை அறிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. - கார்த்தி
நேருவின் பொக்கிஷம்! - உலகில் புகழ் பெற்ற நூல்கள் பல உள்ளன. இந்தியாவில் அப்படி ஒரு நூல் என்று ‘மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள்’ அடங்கிய நூலைச் சொல்லிவிடலாம். நேரு சிறையில் இருந்த காலத்தில், தன் மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு இந்திய வரலாறு, உலக வரலாறு, சுய வரலாறு போன்றவற்றைக் கடிதமாக எழுதினார். அப்படிப்பட்ட கடிதங்களைத் தொகுத்துப் பல நூல்கள் வந்துள்ளன.
அதில் இந்திராவுக்கு உலக வரலாற்றை எழுதிய கடிதங்களின் சுருக்கமான தமிழ் வடிவம்தான் ‘உலக வரலாறு - மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள்’ நூலின் மூன்றாம் பாகம். 55 தலைப்புகளில் அன்றைய உலக நிலவரங்களைக் கடிதமாக நேரு எழுதியது நூலில் இடம்பெற்றுள்ளது. அன்றைய உலக அரசியல் பற்றி நேருவின் பார்வையை அறிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது.- கார்த்தி
உலக வரலாறு - மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள்
ஜவஹர்லால் நேரு (தமிழில்: ஆதனூர் சோழன்)
நக்கீரன் பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 044 4399 3026
மாற்றி யோசிக்கவைக்கும் கட்டுரைகள்: ஓய்வுபெற்ற ஆசிரியரும் மாற்றுக் கல்வி முறை குறித்துத் தொடர்ந்து பேசியும் எழுதியும் செயல்பட்டும் வருபவருமான ச.மாடசாமி எழுதிய 15 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. தான் படித்த ஆங்கில நூல்களை முன்வைத்து, நம் கல்வி அமைப்பில் நிகழ வேண்டிய மாற்றங்களை அவர் பேசியிருக்கிறார்.
சில கட்டுரைகளில் நாட்டுப்புறக் கதைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அனைத்துக் கட்டுரைகளும் அதிகபட்சம் ஐந்தாறு பக்கங்களில் எளிமையான, விரைவாக வாசிக்கக்கூடிய மொழியில் எழுதப்பட்டுள்ளன.
ஆனால், பேசப்பட்ட விஷயங்கள் நுட்பமும் அடர்த்தியும் வாய்ந்தவை. ‘கவனிப்பது மட்டுமல்ல, பேசுவதும் முக்கியம்’, ‘வெற்றியைவிட மகிழ்ச்சியே முக்கியம்’, ‘பேச்சுத் தமிழில் எழுதுவது பாவமல்ல’ என்பது போன்று நம் சமூகத்தில் நிலைபெற்றுள்ள சிந்தனைகளுக்கு மாற்றான பார்வையை இந்த நூலில் உள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன. ‘அப்படியா சார்’ கட்டுரை அழகான கதை படித்த உணர்வைத் தருகிறது. - கோபால்
பார்த்ததும் படித்ததும்: கல்விச் சிந்தனைகள்
ச.மாடசாமி
எதிர் வெளியீடு
விலை: ரூ.140
தொடர்புக்கு: 98948 75084
விவசாயியின் நாள் குறிப்புகள்: சென்னையில் வசிக்கும் ஒருவர், திருப்தி இல்லாமல் சொந்த ஊரான கீழத்தஞ்சைப் பகுதி ஊருக்குச் சென்று இயற்கை வேளாண்மை செய்ய முயல்கிறார். அதில் தன் நண்பர்களை யெல்லாம் பங்கேற்க வைக்கிறார். இந்த அனுபவங்களின் பதிவுதான் நாவல்.
கீழத்தஞ்சைப் பகுதி வட்டார வழக்கு இந்த நாவலின் முக்கிய அம்சம். சென்னை நகர வாழ்க்கையின் சில கூறுகளும் இந்த நாவலில் உள்ளன. வேதி உரமும் பூச்சிக்கொல்லிகளும் நம் உணவை விஷமாக்கிவிட்டதை இந்த நாவல் சித்தரிக்கிறது; அதிலிருந்து விடுபடும் ஒரு உலகத்தையும் காட்டுகிறது.
அந்த உலகத்தில் கிராமப்புறப் பழக்கவழக்கங்கள், தாவர, பயிரிடல் வகை எனப் பல விஷயங்கள் வந்துசேர்கின்றன. ஒரு விவசாயியின் வாழ்க்கைக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு விவரித்தால் எப்படியிருக்குமோ, அப்படி அமைந்திருக்கிறது நாவல். ஒரக்குழி என்பது எல்லாப் பகுதியிலும் வழக்கமாக இருக்கும் சொல்லாடல்தான்.
மாட்டுச் சாணம் உள்பட இயற்கையான உரப் பொருள்களை ஓரிடத்தில் போட்டு வைப்பதற்குப் பெயர்தான் ஒரக்குழி. அப்படித்தான் இந்நாவல் இலக்கிய வகையில் வேளாண்மை தகவல்களைக் கொண்டுள்ளது; நஞ்சு தவிர்த்த உணவின் மீதான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மெஷின் மெக்கானிக்காகப் பணியாற்றிக்கொண்டே, நம் மரபுக் காய்கறி விதைகளை மக்களிடம் இலவசமாகக் கொண்டுசேர்க்கும் பணியை 12 ஆண்டுகளாக ஒருவர் மேற்கொண்டுவருகிறார்.
வட சென்னையில் அத்திக்குழு என்கிற அமைப்பை உருவாக்கி, மூலிகைத் தோட்டம் அமைத்தல், குறுங்காடுகள் அமைத்தல், இயற்கை விவசாயிகளுக்குத் தேவையான பதிவுகளைச் செய்து ஊக்கப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார். இதற்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களை ஒரு நாவலில் அள்ளித் தந்திருக்கிறார்.
நம்மாழ்வாரின் வேளாண்மை சார்ந்த லட்சியக் குரல்கள் இந்த நாவல் முழுக்க இருக்கின்றன. நம்மாழ்வார் முதல் நெல் ஜெயராமன், உத்தமசோழன் வரைக்கும் சமகாலத்தவர் பலர் நாவலுக்குள் வந்துபோகிறார்கள். விவசாயியின் தினசரி வாழ்க்கை நடப்புகளை ஒரு நாவலாக்கி, அதன் மூலம் இன்றைய சமூகத்துக்குத் தேவையான பல விஷயங்களைக் கொடுத்திருப்பது முக்கிய முயற்சி. - சுப்ரபாரதி மணியன்
ஒரக்குழி (நாவல்)
வானவன்
எழுத்து பிரசுரம்
விலை: ரூ.290
தொடர்புக்கு: 8925061999
எளிய தமிழில் சீறா வசன காவியம்: சீறா என்பது சீறத் என்ற அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். சீறத் துன்னபி என்ற சொல்லுக்கு ‘நபிகள் நாயகத்தின் வரலாறு’ என்பது பொருள். இச்சொல்லின் சுருக்கமே சீறத். சீறாப்புராணம், இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ் இலக்கிய மரபுநெறியில் பதிவுசெய்துள்ள நூல்.
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இந்நூலை இயற்றினார். ஆசிரிய விருத்தம் உள்ளிட்ட செய்யுள்களால் ஆன இந்நூலுக்குச் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் முதலான பலர் விளக்கவுரை எழுதியுள்ளனர். 1887இல் ‘சீறா வசன காவியம்’ என்னும் பெயரில் சீறாப்புராணம் முழுவதும் உரைநடை வடிவில் எழுதப்பட்டது.
5,000 விருத்தங்கள் உள்ள சீறாப்புராணத்தை எல்லாருக்கும் புரியும்வகையில் உரைநடையில் எழுதும் அரிய பணியைச் செய்தவர், காயல்பட்டினம் கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். கம்பன் ராமாயணத்தைத் தமிழ்ப் பின்னணியில் எழுதியதுபோலவே, உமறுப்புலவர் சீறாப் புராணத்தை எழுதியுள்ளதாகக் கற்றோர் கூறுவர்.
சீறா வசன காவியத்தின் செழுமையான நடை அதை உறுதிப்படுத்துகிறது. வாசிப்பின் எளிய நிலையில் உள்ளவர்களுக்கும் புரியும்வகையில் பேச்சுவழக்குச் சொற்களும் கலந்துள்ளது இதன் சிறப்பு.
‘தீராப் பகை போராய் முடியும்’, ‘குத்துப்பட்டவனுக்கும் குறை வயிறு உள்ளவனுக்கும் இரவு தூக்கம் இல்லை’ என்பது போன்ற பழமொழிகளைப் புலவர் மகுதூமுகம்மது பயன்படுத்தியிருப்பது, வாசகருக்குப் புத்தகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
நபிகளின் வரலாறு மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகம், தமிழ் இலக்கண இலக்கியம், அரபு சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த புரிதலும் புலவருக்கு இருப்பதை நூல் புலப்படுத்துகிறது. தமிழ் நிலத்தில் தோன்றிய இசைக் கருவிகளின் நீண்ட பட்டியலையே புலவர் தனது உரைநடையில் அளிக்கிறார்.
செய்யுள் வடிவத்தின்பொருட்டு வாசிக்கத் தயங்குவோரின் சுமையைக் குறைக்கும்வகையில், பதிப்பாசிரியர் முரளிஅரூபன், பாடலைச் சந்தி பிரித்துப் பதிப்பித்துள்ளார்.
அந்த வேலைக்கு மட்டுமே ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டதாம். பழமையான சொற்களையும் அரபுச் சொற்களையும் அரபுச் சொற்றொடர்களையும் புரிந்துகொள்ள உதவியாகச் சிறு அகராதி இணைக்கப்பட்டிருப்பது நூலின் மற்றொரு சிறப்பு. - ஆனந்தன் செல்லையா
சீறா வசன காவியம்
கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர்
பதிப்பாசிரியர்: முரளிஅரூபன்
கல்தச்சன் பதிப்பகம்
விலை: ரூ.1,250
தொடர்புக்கு: 94448 87270