நூல் வெளி: மாபெரும் போராட்டத்தின் வரலாறு

நூல் வெளி: மாபெரும் போராட்டத்தின் வரலாறு
Updated on
3 min read

உலக வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் போராட்டங்களில் ஒன்று, 2020இல் நடைபெற்ற டெல்லி உழவர் போராட்டம். இந்தப் போராட்டத்தைப் பற்றிய நுட்பமான அறிவை ‘உழவர் எழுச்சிப் பயணம்’ நூல் வழங்குகிறது. தண்டவாளத்தின் தற்கொலைச் சடலங்களைப் போல் மாபெரும் புரட்சிகளையும் இந்த நூற்றாண்டின் தாராளமயம் துண்டு துண்டாக்கிவருகிறது.

இந்தப் பின்னணியில் ஜனநாயகரீதியில் உழவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம், இன்றைய காலகட்டத்துக்கான ஒரு முன்னுதாரணம் என்பதை இந்த நூல் விவரிக்கிறது. அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் நின்று முழக்கங்கள் எழுப்பிவிட்டுத் தங்கள் கூட்டுக்குள் முடங்கும் நவ போராட்டக்காரர்களுக்கு மத்தியில், இந்திய உழவர் போராட்டம் உணர்வுபூர்வமாக மொத்த இந்தியாவையும் இணைத்த உண்மையை இந்நூல் உரைக்கிறது.

கிரவுண்ட் ஸீரோ, நோட்ஸ் ஆன் அகாடமி, ஒர்க்கர்ஸ் யூனிட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து, இந்த நூலைத் தொகுத்துள்ளன. மத்திய அரசு துரிதகதியில் நிறைவேற்ற இருந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சம்யுக்த கிஸான் மோர்ச்சா என்கிற ஒரு குடையின் கீழ் விவசாய அமைப்புகள் திரண்டு, டெல்லியை நோக்கி முன்னேறின.

இந்திய வரலாற்றில் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்ட அற்புதமான இந்தப் புரட்சியின் பல்வேறு பரிமாணங்களை, கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் வழி இந்த நூல் பதிவுசெய்கிறது. உழவர் போராட்டத்தையும் தாண்டி வேளாண்மையில் நிகழ்ந்த மாற்றங்களின் அரசியலையும் அதன் பாதிப்புகளையும் உழவர்களின் பார்வையிலேயே இந்த நூல் பகிர்கிறது.

பேராசிரியர் சுக்பால் சிங்கின் கட்டுரை, இந்திய அரசமைப்பின்படி மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதைச் சுட்டிக்காட்டுகிறது. விவசாயம் தொடர்பான மாதிரியை மட்டும்தான் மத்திய அரசால் வழங்க முடியும்.

விவசாய விளைபொருள்கள் விற்பதற்கான உழவர்களின் சுதந்திரத்தை வரையறுக்கும் வகையிலான முதல் சட்டத்தைப் பற்றி சுக்பால் விரிவாக எழுதியிருக்கிறார். என்ன விதைக்க வேண்டும் என்பது மக்களின் தேவையை நோக்கமாகக் கொள்ளாமல், நிறுவனங்களைச் சார்ந்ததாக மாற்றும் வகையிலான சட்டத்தின் பாதகங்களையும் தெளிவுறச் சொல்கிறார்.

இந்த நூலின் விசேஷத்துக்குரிய அம்சம், இதில் தொகுக்கப்பட்டுள்ள முழுமையான நேர்காணல்கள். கிராந்தி காரி கிசான் யூனியனைச் சேர்ந்த தர்ஷன் பாலுடன் ஒர்க்கர்ஸ் யூனிட்டி நிகழ்த்திய நேர்காணல் இந்த நூலின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது பொருத்தமானது. இந்திய உழவர்களின் நிலையை இந்தப் போராட்டத்துக்கும் அப்பாற்பட்டு வரலாற்றுப் பின்னணியில் வைத்து தர்ஷன் பால் சித்தரிக்கிறார்.

உணவுப் பற்றாக்குறைக்காக மேற்கத்திய நாடுகளிடமிருந்து நகலெடுக்கப்பட்ட ஒரு மாதிரியை நாம் பின்பற்றத் தொடங்கியதைச் சொல்கிறார். அதிக விளைச்சலுக்கான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் எல்லாம் அறிமுகமாயின. காளைகளின் இடத்தை இயந்திரங்களுக்குக் கொடுத்தோம். நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நிகழ்ந்த இந்த மாற்றங்கள், வேளாண்மையை அதிக முதலீடு தேவைப்படும் தொழிலாக மாற்றின.

இதனால் உழவர்கள் வட்டிக்குக் கடன் வாங்கினர். இந்த வர்த்தக நிபந்தனைகள் உழவர் சமூகத்துக்கு எதிராக மாறியதையும் அவர் சுட்டுகிறார். பாரம்பரிய வேளாண்மையைவிட இந்தப் புதிய மாற்றம் லாபத்தைத் தந்தாலும் அதன் முதலீட்டுச் செலவு ஒப்பீட்டளவில் அதிகம். லாபமும் வெகு காலம் நீடிக்கவில்லை.

இதனால் லட்சக்கணக்கான உழவர்கள் நிலத்தை இழந்து விவசாயக் கூலிகளான வரலாற்றை நமக்கு நினைவூட்டுகிறார் தர்ஷன் பால். பசுமையாக இருந்த புரட்சி வெளிறிப்போய்விட்டதாகக் கூறுகிறார் அவர். மேலும், இவர் இதற்கு முன்னரான உழவர் போராட்டங்களின் பலவீனங்களையும் விமர்சிக்கிறார்.

உழவர்கள் தற்கொலை செய்துகொண்டதும், அதற்கு இழப்பீடு கேட்டுப் போராடினர்; மானியத்துக்காகப் போராடினர். இம்மாதிரி ‘அறிகுறிகளுக்கு எதிராக மட்டுமே அமைப்புகள் போராடிக் கொண்டிருந்தன’ என்கிறார்.

பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த ஹரிந்தர் கவுர் பிந்துவுடன் கிரவுண்ட் ஸீரோ நிகழ்த்திய உரையாடலில், இந்தப்போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றிப் பேசப்பட்டுள்ளது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெண்களின் பங்குக்காக வீடுவீடாகப் பிரச்சாரம் செய்ததையும் பிந்து இதில் பகிர்ந்துள்ளார்.

உழவர் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற செயல்பாட்டாளர் கவிதா குருகந்தியின் நேர்காணலும் இந்தப் போராட்டத்தின் இன்னொரு பகுதியைத் திறந்து காண்பிக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டங்களின் நடைமுறையை நிறுத்திவைத்த பிறகும் ஏன் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கான கவிதாவின் பதில் தீர்க்கமாக வெளிப்படுகிறது: ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் கொள்கை, குடிமக்களைப் பாதிக்கிறது.

அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். இதைத் தீர்ப்பது நீதிமன்ற வரம்பெல்லைக்குள் வராது. உழவர்களின் சிக்கலுக்குத் தேவை அரசியல் தீர்வுதான்’. இன்னோர் இடத்தில் தேர்தல் ஓர் ஆயுதம் எனச் சொல்கிறார் கவிதா.

தலைநகர் டெல்லியில் ஓர் ஆண்டுக்கும் அதிகமாக மையம் கொண்டிருந்த உழவர் புரட்சியின் கால அட்டவணை பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. காவல் துறையின் கண்ணீர்ப் புகை குண்டுகள், தடுப்புகள் எல்லாவற்றையும் தாண்டி, உழவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் முன்னேறிய காட்சி, இதன் வழி விரிகிறது.

தங்களுக்கெனத் தனி ஆழ்துளைக் கிணறு வெட்டி, மின்சாரம் உண்டாக்கி, இணையச் சேவை பெற்று, தனிப் பத்திரிகை நடத்தி, தாங்கள் தலைசாய்த்துக் கிடந்த சாலைப் பகுதியிலேயே காய்கறிகளை விளைவித்து ஒரே சமூகமாகச் சமைத்துச் சாப்பிட்ட இவர்கள், தர்ஷன் பால் சொல்வதுபோல் இந்திய ஜனநாயக மாற்றத்தின் மையம்தாங்கள்தாம் என்கிற செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் பங்குகொண்ட உழவர்ஒருவர் ஒரு கான்கிரீட் தூணில் ‘நாங்கள் வீடு திரும்புகிறோம். டெல்லிவாசிகளே உங்கள் நெஞ்சில் புரட்சி என்று எழுதிவைத்துக்கொள்ளுங்கள்’ என எழுதிவைத்துச் சென்றுள்ளார். அதைத்தான்காலமும் டெல்லியும் இன்று புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

உழவர் எழுச்சிப் பயணம்
கிரவுண்ட் சீரோ, நோட்ஸ் ஆன் தி அகாடமி, ஒர்க்கர்ஸ் யூனிட்டி

(தமிழில்: விவேக்)
சிந்தன் புக்ஸ்,
விலை: ரூ.650
தொடர்புக்கு: 9445123164

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in