Published : 09 Aug 2014 10:38 AM
Last Updated : 09 Aug 2014 10:38 AM

காணாமல்போகும் கடித இலக்கியம்

நம் நலத்தை அறிய யாருக்கும் ஆவல் இல்லாமலும், நமக்கு யார் நலத்தையும் அறிய நேரமில்லாமலும் நம் நாட்கள் நகர்கின்றன. மின்னஞ்சல் வந்த பின் பொங்கல் வாழ்த்து அட்டைகளோ, அஞ்சலடைகளோ நம்மை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கின்றன.

டாக்டர் மு.வரதராசனாரின் இலக்கியக் கடிதங்கள்

திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள், டாக்டர் மு.வரதராசனாரின் இலக்கியக் கடிதங்கள், நேருவின் கடிதங்கள் ஆகியவற்றை வாசித்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன். ஒன்றரையணா விலையில் சென்னை, பாரி நிலையம் 1954-ம் ஆண்டு வெளியிட்ட, “தம்பிக்கு, மு. வரதராசனார்” என்ற கடித நூலின் ஒவ்வொரு வரியும் கற்கண்டுச் சொல்லமுது.

அன்புள்ள எழில்… எனத் தொடங்கி, “தமிழ் மொழி நல்ல மொழிதான், ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா? இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பேசப்படவில்லையா? தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்குத் தந்தோமா? நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமா?ஆய்வுக் கூடங்களில் வாழ்வு வழங்கினோமா? இல்லையானால் வெறும் பேச்சு ஏன்? வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி! அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றதுதான்.” மூச்சு விடாமல் இதை நெல்லையப்பர் கோவில் உள்தெப்பக்குளப் படியில் அமர்ந்து நண்பனிடம் ஏற்ற இறக்கத்தோடு பேசி மகிழ்ந்திருக்கிறேன்.

புதுமைப்பித்தன் கடிதங்கள்

இளையபாரதியின் அரிய முயற்சியில் தொகுக்கப்பட்ட, “கண்மணி கமலாவுக்கு” என்ற புதுமைப்பித்தன் கடிதங்கள்,1938 முதல் 1948 வரையிலான காலகட்டத்தில் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. உன்னதக் கலைஞர் புதுமைப்பித்தன், தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் யதார்த்தமாய் இலக்கியச் செழுமை மிக்கதாய் அமைகின்றன. கடிதத்தின் முதல் விளிப்பு அன்பைப் பொழிவதாய் அமைகிறது. எனது உயிருக்கு உயிரான கட்டிக் கரும்புக்கு.., எனது அருமைக் கண்ணாளுக்கு.., கண்மணி கமலாவுக்கு.., என்று தொடங்கிப் புதுமைப்பித்தன் கடிதம் எழுதியுள்ளார்.

“கமலா கண்ணே! கட்டிக் கரும்பே! மறந்துவிடாதே. உனக்கு ஏற்படும் துன்பம் எனக்கும்தான். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிக்கிறோம். அதனால் உனக்கென்று ஒரு வழி என்னும் அசட்டு யோசனைகளை விட்டுவிடு. மனசை மாத்திரம் தளரவிடாதே! அது எனக்கு எவ்வளவு கவலை கொடுக்கிறது தெரியுமா? உன்னுடன் தவிக்கும் உனது சொ..வி.” என்ற வரிகள் படைப்பைத் தொழிலாகக் கொண்ட ஒரு படைப்பாளி வாழ்க்கைச் சுழலில் சிக்கித் தவிக்கும்போது அவன் குடும்பமும் சேர்ந்து தவிப்பதையும் அவர்களை ஆற்றுப்படுத்தும் பணியையும் அவன் வேதனையை வெளிக்காட்டாமல் செய்ய வேண்டிவருகிறது என்பதையும் நம்மால் உணர முடிகிறது.கணவன் மனைவிக்கிடையில் அகச் செய்திகள் மட்டுமே இடம்பெறும் என்ற கருதுகோளை உடைத்துப் புதுமைப்பித்தன், 05.2.1948 நாளிட்ட கடிதத்தில் மகாத்மா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியை வருத்ததோடு பதிவு செய்துள்ளார்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள்

உருண்டை உருண்டையாய் அச்சுப் பதித்ததைப் போல் நேர்த்தியாய் எழுதித் தெளிவாகக் கையெழுத்திடும் பழக்கம் வல்லிக்கண்ணனுக்கு. ‘நடை நமது’ வலைப் பூவின் ஆசிரியருக்கு வல்லிக்கண்ணன் 28.5.2001 அன்று எழுதிய கடிதத்தில் பதினைத்து பைசாவிலிருந்து ஐம்பது பைசாவுக்கு அஞ்சலட்டை விலையுயர்ந்ததை வருத்ததோடு பதிவுசெய்துள்ளார்.

“அன்பு நண்ப, வணக்கம். கார்டுகள் இரண்டு சும்மா கிடக்கின்றனவே என்பதால் எழுதுகிறேன். இன்று ஒன்றும், நாளை ஒன்றுமாக. ஜூன் 1 முதல் கார்டு விலை 50 பைசா ஆகிறது. 3 ரூபாய் கவர் இனி 4 ரூபாய். இப்படிக் கட்டணங்கள் உயர்கின்றன. இப்படிப் பல வகைகளிலும் விலைவாசிகள் உயர்கிறபோது, சிற்றிதழ் நடத்துகிறவர்களின் சிரமங்கள் மேலும் அதிகரிக்கும். சிற்றிதழ்கள் நடத்துகிறவர்களில் சில பேர் வெற்றிகரமான தொழிலாக அதை நடத்துகிறார்கள்.”

வண்ணதாசனின் கடிதங்கள்

தி.க.சி.யின் கடிதங்கள் கங்கு என்றால் அவர் மகன் வண்ணதாசனின் கடிதங்களில் தாமிரபரணிப் பிராவகம். யாரும் பார்க்கத் தவறுகிற சாதாரணக் காட்சிகளைக் கவனமாய் உள்வாங்கிக் கவிதையும் உரைச் சித்திரமும் கலந்த அழகியல் நடையால் கடிதங்கள் வரைவார். புதிதாய் எழுதவரும் இளம் படைப்பாளர்கள் கொண்டாடும் நேர்த்தியான நடை இவருடையது. ‘அதெல்லாம் ஒரு காலம்!’ எனும் கட்டுரையில் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் கடிதங்கள் குறித்து வண்ணதாசன் இவ்வாறு எழுதியுள்ளார்

“நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கின உடைகளுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல, உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும்.

மு. பழனி, பமேலா ராதா, எஸ்.வி. அன்பழகன், காசர்கோடு மலையப்பன், ஆனந்தன், அசோகன், லிங்கம், காயத்ரி, ஆர். சோமு, பரமன், கார்த்திகா ராஜ்குமார், சிவகங்கை ரவி என்று எத்தனை பேரிடம் இருந்து எவ்வளவு கடிதங்கள்! இவை தவிர… வல்லிக்கண்ணனும், ராமச்சந்திரனும், சின்னக் கோபாலும், அம்பையும், ரவிசுப்ரமணியனும் எழுதிய கடிதங்கள் இன்னொரு பக்கம். மல்லிகைப் பூ என்றால் தினசரி பார்க்கலாம். மனோரஞ்சிதம் அப்படியில்லை. அப்படி எப்போதாவது மிகச் சுருக்கமாக எழுதி, மிக நெருக்கமாக உணரவைத்து வருகிற ந. ஜயபாஸ்கரனின் கடிதம். மாணிக்கவாசகத்தின் ஒரே ஒரு கடிதம்.”

இத்தனை பேருக்கும் வேலை இருந்தது; படிப்பு இருந்தது; சொல்ல முடிந்ததும், முடியாததுமாக எவ்வளவோ இருந்தன. கூடவே, பக்கம் பக்கமாக எழுதுவதற்கான நேரமும், மனமும் இருந்தன. தபால்காரர்கள், கடிதங்களை இன்னும் சைக்கிள்களில் வந்துதான் விநியோகிக்கிறார்கள். ஆனால், கடிதங்கள் காணாமல் போய் விட்டன. கடிதங்கள் மட்டுமா? கடிதங்கள் எழுதுபவர்கள்கூட!

கி. ராஜநாராயணன் கடிதங்கள்

அப்போது நான் வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள் குறித்த முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன்.வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள் பற்றி கி.ரா.என்ன நினைக்கிறார் என்று ஆய்வேட்டில் பதிவுசெய்ய வேண்டி பாண்டிச்சேரியில் உள்ள அவரிடம் தொலைபேசியில் பேசினேன். “உங்களைப் போன்ற பேராசிரியர்களும்கூடவா கடுதாசி எழுதுவதை மறந்துவிட்டீர்கள் கடுதாசி எழுதுமய்யா பதில்போடுகிறேன்” என்றார். சொன்ன மாதிரியே உடனே பதிலும் போட்டார். கி என்ற எழுத்தில் தொடங்கி அவர் பெயரை வளைந்த கோட்டோவியம் போல் அழகாக வரைந்து, அவரது முழு முகவரியையும் எழுதித் தேதியுடன் நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.

கி.ரா. கடிதம் எழுதுவதை நேசித்தார். தன் கையெழுத்தை ஓவியமாகப் பாவித்து வரைந்தார். நான்கு வரிகளில் கிண்டல் செய்து நறுக்கென்று அழகாக எழுத முடிகிறது அவரால். பாரததேவியைத் தன் மகளாகப் பாவித்து அவர் எழுதிய கடிதங்கள் அழகியல் பொக்கிஷம்.

மைக்கூடுகள், மையூற்றுப் பேனாக்கள், கோடு போடும் ரூல் தடிகள் எல்லாம் அப்பால் போய் யாவற்றையும் கணினியும் இணையமும் ஆக்கிரமித்துவிட்டன. தனித்து வமான வளைவு நெளிவுகள் நிரம்பிய அழுத்த மான நம் கையெழுத்துகளும் நம் மனப் பாரத்தை இறக்கிவைக்கும் கடிதங்களும் நம்மை விட்டுத் தொலைவது நல்லதல்ல.

கட்டுரையாளர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்

தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x