

‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்’ நூல், தமிழக முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பைத் தகுந்த தரவுகளுடன் முன்வைக்கிறது. 1800களின் தொடக்கத்திலேயே, தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்களில் படை வீரர்களாகவும் தளபதிகளாகவும் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.
பிற்காலத்தில் சைமன் குழு புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என அகிம்சை வழிப் போராட்டம் தொடர்ந்தபோதும், அதே நாட்டுப்பற்றுடன் முஸ்லிம்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.
1923இல் நாக்பூரில் காங்கிரஸ் ஊர்வலத்தில் தேசியக்கொடி ஏந்திச் செல்வது ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பிட்ட நாளில் கொடியுடன் நாக்பூரில் கூடுவதற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
மதுரையிலிருந்து சென்ற முதல் தொண்டர் குழுவினருக்குத் தலைமை வகித்தவர் சந்தன வியாபாரியான ஆதம் சாகிப். வார்தாவில் கைதான அவர், நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க மறுத்ததால், கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார். திருச்சி சையது ஹுசைன், தன் மனைவி மரியம் பீவியுடன் இதே போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்தியக் கைவினைஞர்களின் பொருளாதாரத்தைத் தக்கவைக்கவும் தற்சார்பைப் பெறவும் கதர் இயக்கம் தொடங்கியபோது, திருச்சி கஜாமியான் ராவுத்தர் கதர்த்துணி நெய்வதற்கென ஒரு தொழிலகத்தை நிறுவினார். இப்படி மறக்கப்பட்ட தியாகிகள் பலரது பங்களிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநரான முனைவர் ஜெ.ராஜா முகமது இந்நூலின் ஆசிரியர். - ஆனந்தன் செல்லையா
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்
ஜெ.ராஜா முகமது
திருச்சி ஜமால் முகமது கல்லூரி வெளியீடு
விலை: ரூ.120
தொடர்புக்கு: 0431-2331135; 2331235
உரத்துச் சொல்லும் அரசியல்: சாதி, மதம், மொழி, சமூகம், அரசியல், பொருளாதாரம் எனப் பல வகைகளிலும் ஒடுக்கப்படும் பட்டியல் சாதி மக்களின் துயரங்கள் சொல்லி மாளாதவை. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தீண்டாமைச் சுவர் ஒன்று எழுப்பப்பட்டு, ஒருபுறம் ஆதிக்கச் சாதியினரும் மறுபுறம் பட்டியல் சாதி மக்களும் வாழ்ந்துவந்தனர்.
2001ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, ஊராட்சித் தேர்தலுக்குத் தங்கள் வேட்பாளரை நிறுத்தினர் பட்டியல் சாதி மக்கள். ஆதிக்கச் சாதியினரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முதலில் மதத்தை வைத்துப் பிரிக்க முயன்றனர், முடியவில்லை. சாதியை வைத்துப் பிரிக்க முயன்றனர், அதுவும் முடியவில்லை. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் வன்முறையைக் கையிலெடுத்தனர். வன்முறையாளர்களை அடக்காமல், பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்கியது காவல் துறை. விளைவு, இரவோடு இரவாகப் பட்டியல் சாதி மக்களின் குடியிருப்புகள் சூறையாடப்பட்டன.
இந்தப் பின்னணியை வைத்துத் தான் கண்டவற்றை ‘மறியல்’ என்கிற நாவலாக எழுதியிருக்கிறார் சமூகச் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான மாற்கு. வாழும் காலத்தில் சமூகத்தில் நிகழ்பவற்றை இலக்கியமாக மாற்றுவது முக்கியமானது. பட்டியல் சாதி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களைக் காலம் கடந்தும் உரக்கச் சொல்கிறது இந்தப் படைப்பு. - எஸ்.சுஜாதா
மறியல்
மாற்கு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ.630
தொடர்புக்கு: 044 26251968
கூர்மையான விமர்சனக் கட்டுரைகள்: சிவகுமார் முத்தையாவின் ‘குரவை’, தேன்மொழியின் ‘அணுக்கி’ உள்ளிட்ட நாவல்கள், அ.மார்க்ஸின் ‘பேசாப்பொருளைப் பேசத் துணிந்தேன்’ என்னும் கட்டுரை நூலுக்கான முன்னுரை, பேராசிரியர் கா.அ.மணிக்குமார் எழுதி ச.சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்த ‘முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்’, ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியனின் ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’, எழுத்தாளர் நக்கீரனின் ‘நீர் எழுத்து’, ‘சூழலும் சாதியும்’ உள்ளிட்ட நூல்கள் எனப் பல வகையான நூல்களுக்கு ‘இந்து தமிழ்’ உள்படப் பல்வேறு இதழ்களில் சிவகுருநாதன் எழுதிய விமர்சன/அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கட்டுரைகளில் நூலாசிரியரின் ஆழமான சமூக அரசியல் புரிதலும் கூர்மையான விமர்சனப் பார்வையும் அல்லதைச் சாடி நல்லதைப் பாராட்டும் சமநிலை நோக்கும் வெளிப்படுகின்றன. - கோபால்
விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்
மு.சிவகுருநாதன்
நன்னூல் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 99436 24956