

போலந்து எழுத்துலகிலும் அரசியல் களத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்திய சுலவோமிர் மிரோசெக் எழுதியது போலந்து மொழிச் சிறுகதைத் தொகுப்பான, ‘வன அதிகாரியின் காதல்’. அதை ஆங்கிலம் வழி மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் பூமணி என்பதால், இந்தத் தொகுப்பு கவனம் பெறுகிறது.
போலந்து ஐக்கியத் தொழிலாளர்கள் கட்சியில் இருந்த மிரோசெக், பின்னாள்களில் கம்யூனிச எதிர்ப்பாளராக மாறியவர். அவல நகைச்சுவையும், கட்டற்ற அரசியல் நையாண்டியும் மிளிரும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.
அவரது பல நாடகங்கள், சிறுகதைகள் ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பைப் பெற கம்யூனிச எதிர்ப்பு மட்டும் காரணமாக இருக்க முடியாது; வேறு விசேஷத் தன்மை இருந்தாக வேண்டும் என்பதற்கு இந்தத் தொகுப்பே உதாரணம்.
அதிகார வர்க்கம் விதிக்கும் அதீதக் கட்டுப்பாடுகளுக்கு வேறு வழியின்றி இணங்கிச் செல்லும் மக்கள், ஒரு கட்டத்தில் ரகசியமாக அல்லது தற்செயலாக மீறல்களில் ஈடுபடத் தொடங்கி தங்கள் எதிர்ப்பை வேறு விதமாக வெளிப்படுத்துவதை, இயல்பான நகைச்சுவையுடன் பதிவுசெய்யும் தன்மை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் வெளிப்படுகிறது.
குழந்தைகள்கூட அரசியல் பாதிப்புக்குள்ளாவதைக் கண்டிக்கும் மிரோசெக், பரிவும் பகடியுமாகத் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார். ‘இருளிலிருந்து’, ‘டிராயருக்குள்ளே’, ‘போலந்தில் வசந்தம்’ எனப் பல கதைகளில் மாய யதார்த்தமும் அரசியல் பகடியும் இரண்டறக் கலந்திருக்கின்றன.
மிரோசெக் ஓர் அரசியல் விமர்சகர் என்று மட்டும் பார்க்காமல், அவரது எழுத்தில் விரவிக் கிடக்கும் கலையழகையும் கவிதை நயத்தையும் கவனிக்க வேண்டும் என்று முன்னுரையில் கேட்டுக்கொள்கிறார் பூமணி. உண்மைதான். ‘இருளிலிருந்து’ சிறுகதையில், ‘நாங்கள் பாலம் கட்டவிருந்த இடத்தில் ஓவியர் ஒருவர் முங்கிச் செத்துப்போனார்.
அவருக்கு ரெண்டே வயது. அவர் ஏற்கெனவே மேதை’ என்கிற வரி, ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் அவரது கற்பனை வீச்சின் மீதான ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுமாக இருக்கிறது.
அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கும்படி பேசும் ஒருவர், அப்படிப் பேசிய சுவடே இல்லாமல் இயல்பாக நம் முன்னே அமர்ந்திருப்பதைப் போலத்தான், மிரோசெக்கின் எழுத்தும் இந்தப் புத்தகத்தில் சாவகாசமாக அமர்ந்திருக்கிறது. ‘பாபி சமாச்சாரம்’ கதையில், சிறுவன் பாபி தனது இயல்பான வெள்ளந்தித்தன்மையுடன் எல்லையில் அடங்காத கற்பனைத்திறனுடன் பேசும் பேச்சுகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
எழுத்தாளர்களே சீருடை, விதிமுறைகள், படிநிலைகள் எனச் சங்கம் வைத்துக்கொண்டு செயல்படுவதாக மிரோசெக் முன்வைக்கும் கற்பனையும் நையாண்டியும் (‘விசாரணை’) அலாதியானவை. ‘பேசப்படாத நாயகன்’ கதையில் அரசியல் வழிபாட்டில் தீவிரம் காட்டியவரின் அவல மரணம்கூட வெடிச் சிரிப்பை வரவழைக்கிறது.
ஆட்சியாளர்களின் அராஜகங்கள் உலகின் எந்த மூலைக்கும் பொருந்தக்கூடியவை என்பதால், அவருடைய உருவகங்களை உள்வாங்கிக்கொள்வதில் தமிழ் வாசகர்களுக்குச் சிரமம் இருக்காது.
‘மிரோசெக்கின் படைப்புகளை ஒருசேர வாசித்தால் கூறியது கூறல், ஒரே மாதிரியான கற்பனை போன்றவை சலிப்பூட்டலாம்; இடைவெளிவிட்டுத் தனித்தனியாக வாசிக்கலாம்’ என்பதாக ஒரு விமர்சனம் உண்டு.
ஆனால், தமிழில் வந்திருக்கும் இந்நூல் வாசிப்புச் சுவை குன்றாமல் நீடிப்பதற்குக்காரணம், மொழிபெயர்ப்பில் பூமணியின் வழக்கத்துக்கு மாறான அணுகுமுறை. மூலப் படைப்பே இதுதானோ என்று நினைக்கவைக்கும் மொழிபெயர்ப்புகளால் இளம் வயதில் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லும் பூமணி, இந்தத் தொகுப்புக்கு அதே சிறப்பைச் சேர்த்திருக்கிறார்.
மொழி சாகசத்தைத் தனது சரளமான வார்த்தைப் பிரயோகத்தால் நிகழ்த்தியிருக்கிறார். அதில் சில மீறல்களும் இருக்கின்றன. தானே ஓர் எழுத்தாளர் என்பதால் இந்தச் சுதந்திரத்தை அவர் கைக்கொண்டிருக்கலாம்.
இளம் வயதில் மிரோசெக்கின் எழுத்தால் கவரப்பட்டு, அவரது கதைகள் சிலவற்றை மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டிருக்கும் பூமணி, பெரும் தேடலுக்குப் பின்னர் மிரோசெக்கின் ‘யானை’ சிறுகதைத் தொகுப்பை நண்பர் மூலம் பெற்று இதைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். அவரது ஆர்வம் வென்றிருக்கிறது!
வன அதிகாரியின் காதல்
(போலந்துக் கதைகள்)
சுலவோர் மிரோசெக்
தமிழில்: பூமணி
விலை: ரூ.180
டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புக்கு: 8754507070
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in