Published : 10 Feb 2018 08:57 AM
Last Updated : 10 Feb 2018 08:57 AM

பாலசரஸ்வதி: தமிழின் பெருமிதம்!

ருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்து, உலக அளவில் சிறந்த நிகழ்த்துக் கலைஞர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற பரதக் கலைஞர் பாலசரஸ்வதியின் இந்த வாழ்க்கை சரிதம், அவருடையதும் அவருடைய சாதனைகளுமுடைய தொகுப்பு மட்டுமல்ல; தமிழகமும், இந்தியாவும் நவீனமடைந்த கதையும் இதில் உள்ளது. ஒரு காலகட்டத்தில் கிராமங்களின் தொகுதியாக இருந்து, தென்னகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக உருவான சென்னையின் வளர்ச்சி ஒரு கோட்டுச் சித்திரமாகத் துலங்குகிறது. உயிர்ப்புமிக்க பாரம்பரிய அறிவுச் சேகரத்தைத் தக்கவைக்க ஒரு மரபு புதுமையோடும் மாற்றத்தோடும் நடத்திய போராட்டத்தைத் துல்லியமாகப் படம்பிடிக்கும் வரலாறு இந்த நூலில் உள்ளது. இப்படியான பல பரிணாமங்களைக் கொண்ட முன்னுதாரணமான வாழ்க்கைச் சரிதை நூல் இது.

பல்வேறு புறக்கணிப்புகள் மற்றும் தனிப்பட்ட இடர்ப்பாடுகளுக்கு இடையில் தனித்துவம் வாய்ந்த ஒரு கலை மரபை சர்வதேச அளவில் உயிர் கொடுத்து நிறுவியவர் பாலசரஸ்வதி. பழமைக்கும் புதுமைக்கும் நடுவேயுள்ள பெரும் பிளவில் பழங் கதையாக மறைந்திருக்க வேண்டிய ஒரு மரபுக்கு உயிர் கொடுப்பதற்குப் பெரும் மேதமை அவசியம். பரத நாட்டியத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதிவந்த அக்காலத்தில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த எழுத்தாளர் கல்கி, பாலாவின் நடனத்தைப் பார்த்த பின்னர் பரதத்தைக் கலையென்று அங்கீ கரித்து, அதற்கு ஆதரவாளராக மாறுகிறார்.

ஒரு நாட்டியக் கலைஞரின் பொற்காலமான 20 வயதுகளின் இறுதியில் வருடக்கணக்காக ஆடுவதற்கு வாய்ப்புகளே இல்லாமல் இருந்திருக்கிறார் பாலசரஸ்வதி. தைராய்டால் பருமனான உடலைக் கொண்டு, தனது நடுவயதில் தொடர்ந்து ஆடத் தொடங்கிய பாலசரஸ்வதியின் நடனத்தைப் பார்த்த விமர்சகர்கள், நிகழ்ச்சி தொடங்கி சில நிமிடங்களிலேயே உடல், அவர் அணியும் எளிய உடை ஆகியவற்றை மறக்கடித்துவிடும் திறன் உண்டு என்பதை நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார். பரதநாட்டியத்தை இசையின் உச்சமான காட்சி வடிவமாகக் கண்டிருக்கிறார் பாலா. அதனாலேயே மேடையில் மிக நேர்த்தியான மாயத்தோற்றங்களை அவர் உருவாக்கி, பார்வையாளர்களுக்கும் அந்த அனுபவத்தைத் தொற்ற வைப்பதில் அவருக்கு ஆழ்ந்த தேர்ச்சி இருந்துள்ளது.

கலை, பிரதானமாக அரூபங்களுடன் உறவு கொள்ளும் சாதனம்தான். பாலசரஸ்வதிக்கு இருந்த கடவுள் நம்பிக்கையும் சில கோயில்களோடு இருந்த ஆத்மார்த்தமான பிணைப்பும் இந்த நூலில் மிக இயல்பாகவும் சரியான தொலைவிலிருந்தும் விந்தையுணர்வு குலையாமலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கோயிலில் ஆடுவதற்குத் தடை இருந்த சூழலில், திருத்தணி கோயிலுக்குப் போய்ச்சேரும் பாலசரஸ்வதி, ஒரு அமானுஷ்ய அனுகூலத்தில் முருகன் முன்னர் அவரது அம்மா திருப்புகழிலிருந்து ஒரு பாடலைப் பாட... ஆடுகிறார். அதைப் பற்றி பின்னர் நினைவுகூரும் அவரது மகள் லக்ஷ்மி, “அவர் ஆடினார். என் பாட்டி பாடினார். கடவுளின் முன்பு ஆடினார். அங்கே யாரோ ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதை யாரும் பார்க்க முடியாது என்பதைப் போல இருந்தது” என்கிறார்.

பாலசரஸ்வதியின் குடும்பம் நீண்டகாலமாகத் தொடர்பு வைத்திருந்த திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த புண்ணியகோடி சுவாமிகள், தகவல் தொடர்பே இல்லாத நிலையில், பாலசரஸ்வதியின் இறுதி நாளில் சரியாக சென்னைக்கு வந்து, அவரைப் பார்த்து அம்மனின் தீர்த்தம் அளித்துச் செல்கிறார். மரணத்துக்கு முன்னர் நினைவிலிருந்து மீண்டபோது அவர் சொல்லும் ஒரே சொல் ‘கருமாரி’.

குறைந்தபட்சம் ஆயிரமாண்டு செல்லக்கூடிய வரலாற்றைக் கொண்ட தாய்வழிச் சமுதாயத்தில் தொழில்முறையாக இசையையும் நடனத்தையும் பயின்ற தேவதாசிக் குடும்பத்தின் ஏழாவது தலை முறையைச் சேர்ந்தவர் பாலசரஸ்வதி. வீணை தனம்மாள் அவரது பாட்டி. உடல்ரீதியான தண்டனை கள் கொடுப்பது ஆசிரியரின் கடமை என்று கருதப்பட்ட காலகட்டத்தில், குழந்தைப் பருவத்தின் சாதாரண சந்தோஷங்கள் எதையும் அனுபவிக்காமல் பாடல், இசைப் பயிற்சியைப் பெற்ற பாலசரஸ்வதி, சிறு வயதிலேயே தனம்மாளின் பேத்தி என்று அறியப்படுவதைவிட, பாலாவின் பாட்டி தனம்மாள் என்று சொல்லப்படுவதற்கான சவாலை ஏற்றவர். கற்பவருக்குச் சுகமோ உறக்கமோ கிடையாது(வித்யாதாரணம் ந சுகம் ந நித்ரா) என்று ஏழு வயதிலேயே தனம்மாளால் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டவர்.

கல்வியும் அறிவும் பிழைப்புக்கானது; கலையும் படைப்பும் உடனடிப் புகழைத் தருவது என்ற நம்பிக்கைகள் நிலவும் அதிநுகர்வுக் காலம் இது. இத்தகைய பின்னணியில் பாரம்பரியமே சுமையாகிப் போன சூழலில், ஒரு கலையைச் சிறு வயதிலிருந்து பயின்று, படிப்பித்து, நிகழ்த்தி, காத்து அடுத்தடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் பங்களிப்பு செய்தவர். அந்த அர்ப்பணிப்பு எத்துறை யில் இருப்பவர்களும் இன்று பயிலவேண்டியது. ஒரு புல்லாங்குழல் கலைஞர் தன் குழலை இரண்டு கைகளால் பிடித்து ஊதும் முறையைச் சற்று திருத்தியதன் மூலம் அவரின் கலையில் ஒரு சரளத்தை அவரால் ஏற்படுத்த முடிந்தது, இந்நூலில் பதிவாகியிருக்கிறது. தேர்ந்த பயிற்சி மட்டுமல்ல; உள்ளுணர்வு கொண்ட கலைஞர் என்பதையும் இந்த நூல் நிரூபிக்கிறது. பெண்ணுக்குக் கல்வி தொடங்கி அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட ஒரு காலச்சூழ்நிலையில், ஆண் கலைஞர்களுடன் சரிசமமாக ஆளுமை செலுத்திய ஒரு சமூகத்தின் சித்திரம் இந்நூலின் வழியாக வெளிப்படுகிறது.

1918-ல் பிறந்து சிறு வயதிலேயே இந்திய அளவில் புகழைப் பெற்று உலகப் புகழ்பெற்ற கலைஞராக 1984-ல் இறந்துபோன பாலசரஸ்வதி குறித்து முழுமை யாக எழுதப்பட்ட முதல் நூல் இது. அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. பாலசரஸ்வதியின் கடைசி ஆண்டுகளில் சத்ய ஜித் ராய் எடுத்த ஒரு சுமாரான ஆவணப்படத்தில் உள்ளதைத் தவிர, ஒரு வீடியோ பதிவுகூட நம்மிடம் இல்லை. சிறந்த பாடகர் என்பதை அவரது ‘மாயாமாளவகௌளை’ ராகத்தில் பாடிய யூடியூப் பாடல் நிரூபிக்கிறது. பாலசரஸ்வதியின் 50 ஆண்டு கலை வாழ்க்கையில் பங்கேற்ற அவரது குடும்ப உறுப்பினர்கள், கலைஞர்கள் என 50 பேருக்கும் மேல் நேர்காணல் செய்யப்பட்டு, அபூர்வமான புகைப்படங்களைக் கொண்டு ஆண்டுக்கணக்கான உழைப்பின் விளைவு இந்நூல். இந்நூலை உருவாக்குவதற்கு அதன் நூலாசிரியர் அமெரிக்கராகவும் ஆங்கிலத்தில் எழுதுபவராகவும் பாலசரஸ்வதியின் மருமகனாகவும் இருந்திருக்க வேண்டியிருக்கிறது.

பாலசரஸ்வதி பற்றி இத்தகைய உழைப்பும் ஆவணமாக்கலும் தமிழில் முதலில் சாத்தியமாகாததற்கு நமது சமூகம் இன்னும் எந்தவொரு கலாச்சார முதலீட்டுக்கும் தயாராகவில்லை என்பதையே தெரிவிக்கிறது. க்ரியா பதிப்பகம் இந்த நூலை ஒரு மதிப்பு மிகுந்த தமிழ் கரன்சியாக மாற்றியுள்ளது. இசை, பாரம்பரிய நடனம் சார்ந்த அரிய சொற்களஞ்சியமாகவும் இந்நூல் உள்ளது. தமிழில் பெருமிதத்தைச் சொல்லும் மிகக் காத்திரமான இந்த நூலை மொழிபெயர்த்திருக்கும் டி.ஐ.அரவிந்தனின் பணி குறிப்பிடப்பட வேண்டியது.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in

பிப். 9 : பாலசரஸ்வதி நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x