

தமிழ் சினிமாவின் வரலாறு, ஆர்.நடராஜ முதலியார் என்கிற தமிழர், இந்தியன் பிலிம் கம்பெனி என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கி, 1916இல் தயாரித்து முடித்த ‘கீசக வதம்’ என்கிற சலனப் படத்திலிருந்து தொடங்குகிறது. தமிழ்ச் சலனப் படங்கள் பற்றிய தரவுகள் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம். ஆனால், தமிழ் பேசும்பட சகாப்தம் 1931இல் வெளியான ‘காளிதாஸ்’ படத்திலிருந்து தொடங்குவதும் அதன் பிறகான படங்களின் தரவுகள் காப்பாற்றப்பட்டிருப்பதும் நமது அதிர்ஷ்டம்.
இந்நூலின் ஆசிரியர் 1931-32 ஆகிய 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் பேசும் படங்களிலிருந்து ‘காளிதாஸ்’, ‘ஹரிச்சந்திரா’, ‘காலவமஹரிஷி’ ஆகிய மூன்று படங்களைத் தேர்வுசெய்து, அப்படங்களைக் குறித்த பின்னணித் தகவல்களை முன்னோடி ஆய்வாளர்களின் ஆய்வுத் தரவுகளிலிருந்து திரட்டித் தந்திருக்கிறார். அசலான உழைப்பின் வழி உருவாகியுள்ள இச்சிறுநூல், தமிழ் சினிமாவின் தொடக்க வரலாற்றை வாசிக்கும் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது. - ஜெயந்தன்
முதல் 3 தமிழ் படங்கள்
ச.முத்துவேல்
மின்னங்காடி பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 7299241264
பௌத்த வரலாறு: ‘இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு அதிகக் கால தாமதமாகிவிட்டது. பரபரப்பான, வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து தப்பித்து, அவ்வப்போது சிறிது சிறிதாக நேரம் ஒதுக்கி மிகவும் சிரமப்பட்டே இதை எழுதி முடித்திருக்கிறேன்’ என ‘பௌத்த இந்தியா’ நூலுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார் டி. டபிள்யூ. ரீஸ் டேவிட்ஸ். அவரது சிரமம் வீண்போகவில்லை. 1902இல் வெளியான இந்நூல், பௌத்த சமய வரலாற்றை, முறையான சான்றுகளுடன் விவரிக்கும் ஆவணமாக உள்ளது. 1900களில் இலங்கையில் பணிபுரிந்த பிரிட்டன் ஆட்சிப் பணி அதிகாரி டேவிட்ஸ், பாலி மொழியில் புலமை பெற்றிருந்தார்.
அம்மொழியில் இருந்த பல பௌத்த நூல்கள், இவரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. அக்காலத்தில் பௌத்தம் குறித்த ஆராய்ச்சிகளில், மதவாதிகளின் கருத்துகளே செல்வாக்குச் செலுத்தின. அவற்றிலிருந்து விலகி கல்வெட்டுகள், நாணயங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பௌத்த சமய வரலாற்றை டேவிட்ஸ் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். பொ.ஆ.மு. (கி.மு.) 4ஆம் நூற்றாண்டுக் கால வட இந்தியச் சமூகத்தின் நிலை, அரச வம்சங்களுக்கு இடையேயான போட்டி, புத்தர் ஏற்படுத்திய தாக்கம் போன்றவை நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. - ஆனந்தன் செல்லையா
பெளத்த இந்தியா
டி.டபுள்யூ.ரீஸ் டேவிட்ஸ்
தமிழில்: அக்களூர் இரவி
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.325
தொடர்புக்கு:
044 42009603
வீரப்பன் வேட்டைக்குப் பின்னால்... தமிழ்நாடு - கர்நாடகம் என இரண்டு மாநிலங்களின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் சிம்மசொப்பனமாக விளங்கிய வீரப்பனைப் பற்றி பல நூல்கள் வந்துள்ளன. அந்நூல்களிலிருந்து மாறுபட்டு பாதிக்கப்பட்டவர்களின் குரலைப் பதிவுசெய்து வெளியாகியிருக்கிறது ‘வீரப்பன் பெயரால் மனித வேட்டை’ என்கிற நூல். வீரப்பனை அழிக்கும் வேட்டையில் அதிகார மையங்களின் வழியே அதிரடிப் படையினர் வீரப்பன் பெயரைச் சொல்லி எளிய மக்கள் மீது நடத்திய அடக்குமுறையை இந்த நூல் பேசுகிறது.
வீரப்பன் மறைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் வலியைப் பற்றிப் படிக்கும்போது கண்கள் குளமாகின்றன. வீரப்பனின் வேட்டைக்குப் பின்னால் நடந்த கதைகளைப் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்த நூல் ஓர் ஆவணம். - டி.கார்த்திக்
பெளத்த இந்தியா
டி.டபுள்யூ.ரீஸ் டேவிட்ஸ்
தமிழில்: அக்களூர் இரவி
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.325
தொடர்புக்கு:
044 42009603
அனுபவங்களின் ஓடை! - திருநங்கை கிரேஸ் பானு, அமெரிக்காவின் ஜான் என்கிற ஆப்ரிக்க அமெரிக்கரைச் சந்திக்கிறார். அவர் குடும்பத்துடன் விடுமுறைக்கு உகாண்டா செல்கிறார் என்பதை அறிந்தவுடன், இனத்தால், நிறத்தால் ஒடுக்கப்பட்ட ஜானும் பாலினத்தால், சாதியால் ஒடுக்கப்பட்ட தானும் அவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடி, இன்று வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது அடையும் மகிழ்ச்சியை இந்நூல் வழி கிரேஸ் பானு பகிர்ந்திருக்கிறார்.
காரில் செல்லும்போது, வழியில் பால் புதுமையினரின் பேரணியைப் பார்க்கிறார். ஓட்டுநர், ‘கே பிரைடு... இவங்களுக்கு ஓவர் ஃபிரீடம் கொடுக்கக் கூடாது’ என்று சொல்வதைக் கேட்டதும் அந்த மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்.
‘கே’வுக்கும் பால் புதுமையினருக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்காகத்தான் இந்தப் பேரணி என்று சொல்லும் கிரேஸ், குயர் மக்களின் வரலாற்றைப் பகிர்கிறார். மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவிடத்தைக் கண்டதும், 2020ஆம் ஆண்டு அமெரிக்கக் காவல் துறையால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் நினைவுக்கு வர, அந்தத் துயரம் பற்றிச் சொன்னதோடு கிங்கின் புகழ்பெற்ற உரையையும் கொடுத்திருக்கிறார்.
திருநங்கைகள் ஏன் நேர்த்தியாக உடை அணிகிறார்கள் என்பதற்கு, ‘ஒடுக்கப்பட்டவர்கள் நேர்த்தியான, சிறந்த உடைகளை அணிய வேண்டும். அண்ணல் எப்போதும் கோட் சூட் தான் போட்டுக்கொண்டிருப்பார். ஒடுக்கப்பட்ட பெண்களையும் நல்ல உடைகளைத்தான் அணியச் சொல்வார்’ என்கிறார்.
அமெரிக்க அடுக்ககங்களில் உள்ள பிரம்மாண்டமான துணி துவைக்கும் இயந்திரத்தைப் பார்த்து, செங்கல்பட்டில் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒவ்வொரு வீடாக உணவு கேட்டு வந்ததையும் நினைவுகூர்ந்து, ‘மானுடத்தின் மீது படிந்திருக்கும் ஆதிக்கக் கருத்தியல்களை முழுவதுமாகச் சலவை செய்யும் நாள் என்னாளோ’ என்று ஆதங்கப்படுகிறார். இப்படி நூற்றிச்சொச்சம் பக்கம் உள்ள சிறிய நூலில், தான் பார்த்த, சந்தித்த ஒவ்வொன்றிலும் தன் அனுபவங்களை இணைத்து, அழகாகவும் அடர்த்தியாகவும் எழுதி, சிந்திக்க வைத்திருக்கிறார், கிரேஸ் பானு. - எஸ்.சுஜாதா
தீட்டுப் பறவை
(ஒரு திருநங்கையின் அமெரிக்க நாட்குறிப்புகள்)
கிரேஸ் பானு
திருநங்கை பிரஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: thirunangaipress@gmail.com