புத்தகக் காட்சிகளைப் புத்தாக்கம் செய்வது எப்படி?

புத்தகக் காட்சிகளைப் புத்தாக்கம் செய்வது எப்படி?
Updated on
2 min read

புத்தகக் காட்சிகள் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் பல குறைகள் களையப்பட்டு, பல்வேறு புதுமைகளும் நிறைவும் கொண்ட ஒரு சிறந்த முன்னுதாரணமாக நெல்லை புத்தகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை பொருட்காட்சித் திடலில் இரண்டு பெரும் வர்த்தக மையக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

குளிரூட்டப்பட்ட ஒரு கூடத்தில் 120 கடைகளுடன் புத்தகக் காட்சியும் மற்றொரு கூடத்தில் உள்ளூர் கைவினைஞர்களின் மண்சிற்பங்கள், பத்தமடைப் பாய் வகைகள், ஆடைகள், இயற்கை உணவுப்பொருள்கள் போன்றவை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓவியக் காட்சி, முக்கியமாக ஓவியர் சந்ருவின் சிற்பக் காட்சி, ஐந்திணை- பள்ளி மாணவர்களின் அற்புதமான ஓவியங்கள் பலரையும் கவரக்கூடியவை.

மாலையில் தினமும் கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. புத்தக வெளியீட்டுக்காகத் தினமும் அரை மணி நேரம் இலவசமாக மேடையைத் தருகிறார்கள். ஒரு நவீன இலக்கியத் திருவிழாபோல எழுத்தாளர்களின் பங்களிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காட்சி வளாகம் முழுக்க சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்களின் பதாகைகள் என ஒரு முழுமையான பண்பாட்டுத் திருவிழாவாக நெல்லை புத்தகக் காட்சி ஒளிர்கிறது.

இதை எப்படிச் சாதித்தார்கள்? நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயனின் ஈடுபாடும், சிந்தனையும், அர்ப்பணிப்புமே இதற்கு முதன்மைக் காரணங்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடல்கள் தொடங்கிவிட்டன. டிசம்பர் முதல் வாரமே இதற்கான வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. 120 பேர் கொண்ட இந்தக் குழுவில் இலக்கிய ஆர்வலர்கள் 60 பேர், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் 60 பேர்.

பிற மாவட்டங்களில் இப்படியான பரந்துபட்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டதில்லை. விருந்தினர்கள் வரவேற்புக் குழு, விளம்பரக் குழு, செய்தி ஊடகக் குழு, அழைப்பிதழ் தயாரிப்புக் குழு, உணவுக் குழு என ஒரு மாநாட்டுக்குரிய திட்டமிடல்களுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எழுத்தாளர் நாறும்பூநாதன், பேராசிரியர் செளந்தரமகாதேவன், வட்டாட்சியர் செல்வன், சபேசன் முதலானோர் மாவட்ட ஆட்சித் தலைவரின் தளபதிகளாக நின்று இந்தப் பணிகளை வழிநடத்தினர்.

புத்தகக் காட்சிக்கு முன்னதாக நெல்லையில் ஜனவரி 30-31 தேதிகளில் இளைஞர் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்கள் சிலருக்கு ரொக்கப் பரிசும் மற்றவர்களுக்கு நெல்லை புத்தகக் காட்சியில் புத்தகங்கள் வாங்குவதற்கான பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. புத்தகக் காட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வென்ற மாணவர்களுக்கு ரூ.1,000, 500 என புத்தகப் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.

பார்வையாளர்களாக அழைத்து வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ரூ.200, 100 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அவற்றைப் பயன்படுத்திப் பெரும் திரளாகப் புத்தகங்களை வாங்கினார்கள். இப்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கூப்பன்களின் மதிப்பு 10 லட்சம் ரூபாய். மாணவர்கள் வாங்கிய புத்தகங்களைப் பரிசீலித்து அவர்களுக்கு இயைந்த புத்தகங்கள் வாங்க ஒரு தொண்டர் குழுவையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அமைத்திருந்தார்.

மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி என்ற கனவுத் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். அதைச் செயல்படுத்துவதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, புத்தகக் காட்சியை ஓர் இயக்கமாக மாற்றுவதில் 2006இல் இருந்தே செயல்பட்டு வரும் இன்றைய நிதித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், இந்த இயக்கத்தை வழிநடத்தும் பொது நூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத் எனப் பலரின் செயல்பாடுகள் ஊக்கமளித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசு மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகள் நடத்தக் கணிசமான நிதிநல்கையை அளித்துவருகிறது. மக்கள்தொகை, பரப்பளவுக்கு ஏற்ப முதல் நிலை மாவட்டங்களுக்கு 30 லட்சம் ரூபாயும் இரண்டாம் நிலை மாவட்டங்களுக்கு 25 லட்சம் ரூபாயும் மூன்றாம் நிலை மாவட்டங்களுக்கு 20 லட்சம் ரூபாயும் என மொத்தமாக ஆண்டுக்கு எட்டுக் கோடியே நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மதுரை, விருதுநகர், நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் போட்டி போட்டுக்கொண்டு புத்தகக் காட்சிகளைச் செம்மையாக நடத்துகின்றன. சில மாவட்டங்களில் உரிய ஏற்பாடுகள் இன்றி புத்தகக் காட்சிகள் தோல்வியடைகின்றன. அரசு தரும் பணத்தைச் செப்பமாகத் திட்டமிட்டுச் செலவிட்டால், புத்தகக் காட்சிகளை எப்படி வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதற்கு நெல்லை புத்தகக் காட்சி வழிகாட்டுகிறது.

- கவிஞர், சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் தொடர்புக்கு: manushyaputhiran@gmail.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in