Published : 10 Feb 2018 09:24 AM
Last Updated : 10 Feb 2018 09:24 AM

பிறமொழி நூலறிமுகம்: பொறியாளர்களும் இலக்கும்…

பொறியாளர்களும் இலக்கும்…

னித வாழ்வின் ஓட்டத்துக்குப் பொறியியல் துறையின் ஒரு பிரிவான இயந்திரவியல் மிகவும் இன்றியமையாத ஒரு பிரிவாகும். இத்துறை மாணவர்கள் மூவரின் வாழ்க்கை ஓட்டத்தை, படிப்படியான வளர்ச்சியை, வீழ்ச்சியை, ஆற்றாமையைச் சித்தரிக்கும் ஒரு நாவல் இது. இந்தப் பொறியியல் பிரிவுக்கெனப் பல பாடநூல்களை எழுதிப் புகழ்பெற்றவரான பேராசிரியர் டி.ஜே.பிரபு இயந்திரவியல் துறையில் தனது அனுபவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய ‘விடியலை நோக்கிய முடிவற்ற பயணம்’ என்ற நாவலைத் தற்போது ஆங்கிலத்திலும் வழங்கி உள்ளார்.

மாணவப் பருவத்தில் நாட்டின் பெருமைக்காக, முன்னேற்றத்துக்காக, தாம் தேர்ந்தெடுத்த தொழில் பிரிவில் தலைசிறந்து விளங்குவதற்காக அவர்கள் காணும் கனவுகள், மேற்கொள்ளும் சபதங்கள் ஆகியவற்றின் பின்னணியில் பொறியியல் பட்டதாரிகளும், ஆராய்ச்சியாளர்களும் எதிர்கொள்ளும் சவால்களை இந்நாவல் மூன்று மாணவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் மூலம் விவரிக்கிறது. இதன் கதைக் கருவும் கதைக் களமும் காலப் பின்னணியும் இலக்கிய உலகுக்குப் புதுமையான ஒன்றுதான். எனினும், இத்துறையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறிய வேண்டும் என்ற உந்துதலையும் இது ஏற்படுத்துகிறது.

-வீ.பா.கணேசன்

பெண்ணெழுத்தின் முன்னத்தி ஏர்

சங்க காலத்தில் ஆண் புலவர்களுக்கு இணையாக 42 பெண்கள் தமிழில் கவிதை எழுதினர் என்பது சீனம், சம்ஸ்கிருதம், கிரேக்கம் உள்ளிட்ட எந்த வொரு தொன்மையான மொழிகளிலும் காணவியலாதது. தமிழ், செவ்வியல் தகுதி பெற்றுவிட்டது என்று வீண் பெருமை பேசுவதைவிட, சங்கப் படைப்புகளை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பது அவசியமானதாகும். ஏ.கே.ராமானுஜன் உள்ளிட்ட மொழிபெயர்ப்பாளர்களால் சங்கப் படைப்புகள், ஏற்கெனவே ஆங்கிலத்தில் பிரசுரமாகி மேலைநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஓரளவு ஈர்த்துள்ளது. இத்தகு சூழலில் கே.எஸ்.சுப்ரமணியன் 42 சங்கப் பெண் கவிஞர்கள் எழுதிய 184 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள ‘தமிழ் சங்கம் விமன் பொயட்ஸ்’ (Tamil Sangam Women Poets) நூல், கவனத்துக்குரியது.

பண்டைத் தமிழரின் இளவேனில் முதலான அறுவகைக் காலப் பாகுபாடும் இலையுதிர் காலம் (autumn) உள்ளிட்ட ஐரோப்பியரின் நான்கு காலப் பகுப்பும் முரண்படுகிற நிலையில், இயற்கை வருணனை குறித்த பெண் கவிஞர்களின் விவரணைகளை ஆங்கிலத்தில் பெயர்ப்பது ஒருவகையில் சவால்தான். சங்க ஐந்திணை, நிலப் பாகுபாடு என்ற நிலையில், கவிதையின் வழியாக விரிந்திடும் நிலக் காட்சிகள் வாசிப்பில் தருகிற கவர்ச்சியை கே.எஸ். ஆங்கிலத்தில் தந்திடப் பெரிதும் முயன்றுள்ளார். குறிஞ்சி யில் கூதிர் காலம் தொடங்கிப் பாலையின் வேனில் காலம்வரை பொழுது நிலத்துடன் ஒன்றிணைவது, ஒருவிதமான வசீகரத்தன்மையைச் சங்கக் கவிதைக்கு அளிக்கிறது. ஆங்கில மொழியாக்கத்திலும் நிலமும் பொழுதும் கலந்த மண் சார்ந்த ஈரமான அனுபவம் வாசிப்பில் ஏற்படுகிறது. இன்று பால் அடையாளத்துடன் தமிழில் பெண் கவிஞர்கள் எழுதுகிற கவிதைகளின் முன்னோடியாக சங்கப் பெண் கவிஞர்கள் விளங்கினர் என்ற வரலாற்றுப் புரிதலை மொழிபெயர்ப்பாளரின் தேர்வும் தொகுப்பும் வெளிப்படுத்துகின்றன.

சங்கத் தமிழும் இன்றைய வழக்குத் தமிழும் பெரிதும் வேறுபடுகிற சூழலில், பல சொற்களுக்குப் பொருள் புரியாத நிலையில் ஆங்கில மொழிபெயர்ப்பில் கே.எஸ். கவனத்துடன் செயல்பட்டுள்ளார். கவிதையை மொழிபெயர்ப்பது என்பது மொழிபெயர்ப்பாளருக்குச் சவால். பழமையான சொற்களும் பண்டைத் தமிழர் பண்பாட்டின் கூறுகளும் பொதிந்திருக்கிற சங்கக் கவிதையை மொழிபெயர்ப்பது எளிதான செயல் அல்ல. கே.எஸ். ஆர்வத்துடன் மொழிபெயர்த்துள்ள சங்கப் பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒப்பிட்டுப் பார்த்து முரணைச் சுட்டுவதோடு, பெண்ணெழுத்தின் முன்னத்தி ஏர் போலப் பிரசுரமாகி யிருக்கிற இந்த நூலைக் கொண்டாடவும் வேண்டும்.

- ந.முருகேசபாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x