Last Updated : 04 Feb, 2018 09:59 AM

Published : 04 Feb 2018 09:59 AM
Last Updated : 04 Feb 2018 09:59 AM

ஒழுக்கங்களுக்கு இடையில்...

 

ன்பாலின உறவாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநங்கையர் ஆகியோர் எல்.ஜி.பி.டி.(LGBT) என்ற ஒரே சொல்லின் கீழ் ஒரு சமூகமாக அழைக்கப்படுகிறார்கள். மனித இனத்தின் வரலாற்றுடன் ஒப்பிடத்தகுந்த அளவு இவர்களும் பொதுச் சமூகத்துக்குள் ஒரு சமூகமாக இருந்துவருகிறார்கள். இன்று பொதுச் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் இவர்களைப் பற்றிய பதிவுகள் பழமையான மேற்கத்திய, ஜப்பானிய, சீன ஓவியங்களிலும் உள்ளன. இந்தியப் புராணக் கதைகளிலும் இந்தப் பதிவுகளைப் பார்க்க முடியும்.

ஆனால், அவர்களைப் பற்றிய உணர்வுரீதியிலான சித்திரிப்புகள் நவீன காலத்தில்தான் வரத் தொடங்கியுள்ளன. கயோ பெர்ணாண்டோ எப்ரு, டெப்ரா ஆண்டர்சன், டோரதி ஆலிசன் போன்ற எழுத்தாளர்கள் எல்.ஜி.பி.டி. எழுத்துகளுக்காகக் கவனிக்கப்பட்டுள்ளனர். தமிழில் கரிச்சான் குஞ்சு, நீலபத்மநாபன், சு.வேணுபோபால் போன்ற எழுத்தாளர்களின் கதைகள் இதைச் சித்தரித்துள்ளன. ஆனால், தமிழில் எல்.ஜி.பி.டி. எழுத்து இன்னும் திட்டமாக உருவாகவில்லை. அதற்கான முதல் படியைத் தொடங்கியிருக்கிறது ‘விடுபட்டவை’ என்ற தொகுப்பு. எழுதியவர் கிரீஷ். குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ், கருப்புப் பிரதிகளுடன் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். கவிதை, கதை, கட்டுரை என எல்லா இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்கள் மூலமாகவும் இதில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்.

தன்பாலின ஈர்ப்பு என்பது எப்படி மனதுக்குள் தோன்றுகிறது என்பதைக் கதை சொல்லும் சுவாரசியத்துடன் வாசர்களுக்குக் கடத்தியுள்ளார். காதல், வன்முறை நிகழ்வுகள், திரை, இணையம், போராட்டங்களும் முகமூடிகளும் என ஐந்து தலைப்புகளின் கீழ் இந்தப் படைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குள் திட்டுத் திட்டாகத் தனது உணர்வுகளை கிரீஷ் சொல்லிச் செல்கிறார். அவரது ஞாபக வெளியில் இரைந்து கிடக்கும் சருகுகளைக் கூட்டி ஒதுக்குவதுபோல் சம்பவங்களை இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார். ஒரு கதையில், அலறக் கூடச் சொல்லிக்கொடுக்கப்படாத ஒரு சிறுவன் தென்னந்தோப்புக்குள் இருட்டில் துவண்டு கிடக்கிறான். இன்னொன்றில் சமூக நிர்ப்பந்ததுக்கு ஆளாகும் இளைஞன் ஒழுக்கங்களுக்கு இடையில் சதா அலைக்கழிக்கப்படுகிறான். எல்.ஜி.பி.டி. பேரணிக்குச் சென்று திரும்பிய அவனை, அவனது அலுவக ஊழியர்கள் எதிர்கொண்டதைப் பற்றிய ஒரு சம்பவத்தை, பொதுச் சமூக மனநிலைக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார் கிரீஷ். அதனால் வேலையும் போய்விடுகிறது. உடல்/மன ரீதியாக நடக்கும் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள மறுக்கும் அவர்கள் குறித்த தன் பதற்றத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

தான் தாக்கப்படலாம் எனப் பாதுகாப்பின்மையில் ஆழ்ந்திருக்கும் அவரது கவிதையில் "ஓடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்" என்ற ஒரு வரி வருகிறது. எல்.ஜி.பி.டி.யினரைப் பொதுச் சமூகம் எப்படிக் குற்றவாளிகள்போல் அணுகிறது என்பதற்கான சான்று இது.

கவிதைகளில் சில, புதிய சொற்களையும் பொருளையும் கைக்கொண்டு 70-களில் வந்த ஜப்பானியப் பெண் கவிதைகளின் ஆற்றலுடன் இருக்கின்றன. காதலையும் அரசியலையும் தயக்கமின்றி முன்வைக்கின்றன இவை. அதே சமயம் 80-களின் இறுதியில் தமிழ்க் கவிதைக்கு அறிமுகமான சுகந்தி சுப்பிரமணியனின் தாழ்ந்த தொனியைப் போன்ற மொழியை இந்தக் கவிதைகள் கொண்டுள்ளன.

அனைத்து சக்திகளையும் திரட்டி

ஒரு ஆணைப் போல் நடக்கிறேன்

ஐம்பது அடிகளையும் ஐம்பது மணிநேரமாக நடக்கிறேன்

...எனக்குத் தெரிகிறது

இந்த முறையும் நான் தோற்றுவிட்டேன்

என்ற கவிதை தன்பாலின உறவாளர்களின் அவஸ்தையைத் தத்ரூபமாகச் சித்திரிக்கிறது. கவிதையாகவும் ஆற்றலுடன் வெளிப்பட்டுள்ளது.

திரை என்ற தலைப்பின் கீழான கட்டுரை ஒன்றில் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த ‘கோவா’ ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற படங்களின் சித்தரிப்புக் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறார். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, தன்பாலின உறவாளர்களை அணுகியதைப் பற்றிய விமர்சனங்கள், எல்.ஜி.பி.டி. செயல்பாட்டில் முக்கியமானது.

இந்த நூலாசிரியர் கிரீஷ், படைப்பில் காட்டும் உண்மையால் அதற்குள்ளிருக்கும் உணர்வின் வேதனையை வாசகரால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்குச் சரளமான மொழியும் வசப்பட்டுள்ளது. தான் சொல்ல வந்த விஷயத்தைத் தயக்கமின்றித் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்த அம்சங்கள், அவர் எழுத எடுத்துக்கொண்டுள்ள மொழியை, எல்.ஜி.பி.டி.யினரின் உரிமைகளைப் பேசத் தகுதி மிக்கதாக ஆக்குகின்றன.

-மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x