

கடந்த கால நினைவுகளே நிகழ்கால வாழ்க்கைக்குக் கூடுதல் சுவாரசியம் சேர்க்கின்றன. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் வசித்த சிறுமியின் அனுபவங்களாக ஆரம்பித்து பள்ளி, கல்லூரிக் கால அனுபவங்களாக விரிகின்றன.
இவரின் முதல் ஆசிரியர் இவருடைய சூட்டிகையான குணத்தைக் கண்டு ‘உன் கல்யாணத்துக்கு நான் வந்து ஆசிர்வதிக்கணும்’ என்கிறார். உடனே இவர், ‘அப்போ நீங்க இருக்க மாட்டீங்க’ என்று சொல்லிவிடுகிறார்.
நடந்ததை அம்மாவிடம் சொல்ல, ஆசிரியரான அம்மா மகளுக்கு அறிவுரை வழங்கி, ஓய்வுபெற்ற அந்த ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்க அழைத்துச் செல்கிறார். திருமணத்துக்கு அதே ஆசிரியர் வந்து ஆசிர்வாதம் செய்த பிறகே, அந்தக் குற்றவுணர்விலிருந்து விடுபட்டிருக்கிறார்.
ஆசிரியர் பணி செய்த இவருடைய அப்பா, சமையல் செய்ததோடு குழந்தைக்கு ஊட்டும் பெரிய பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார், அப்போதே இவர் வீட்டில் சம உரிமை இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. சில அனுபவங்கள் சிரிக்க வைக்கின்றன. சில நெகிழ்ச்சியை அளிக்கின்றன. படிக்கும்போது அவரவர் பால்ய காலத்துக்குச் செல்லாமல் இருக்க முடியாது. - எஸ்.சுஜாதா
முதிராக் கதிர்
து.நிபுணமதி
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 99404 46650
அசோகமித்திரனுக்கு அருகில்... சிறுகதைகள், நாவலைப் போன்று விஸ்தாரமாகப் படரக்கூடியவை அல்ல. அதற்கென எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளுக்குள் நின்று சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பது ஒரு திறன். தருணாதித்தனுக்கு அது நன்கு வயப்பட்டுள்ளது. பெரும்பாலான கதைகளை அதனால்தான் தன்நிலையில் இருந்து எழுதியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.
இந்தக் கதைகள் எல்லாம் உயிர்ப்புள்ள அனுபவத்தால் கட்டப்பட்டுள்ளன. கதையைச் சொல்வதில் உள்ள ஓட்ட நடை இந்தத் தொகுப்பின் விசேஷமான பண்பு. ஜெர்மனில் தனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் குறித்த கதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முதலில் தன் மொழித் திறமையைச் சொல்லிவிட்டுக் கதையைத் தொடங்கும் எழுத்தாளர், பிறகு ஒரு இந்தியக் கதாபாத்திரத்தைச் சந்திக்கிறார்.
அந்தக் கதாபாத்திரத்தின் வழி நமது சமகால வாழ்க்கை விழுமியங்களை அங்கதச் சுவையுடன் விமர்சிக்கிறார். மொழி தொடர்பாடலுக்கானதுதான் என்பதையும் கதை சொல்கிறது. கணித மேதை ராமானுஜர் ஒரு கதையில் வருகிறார். பிரதமரும் வருகிறார். புனைவுக்கும் அல்புனைவுக்கும் இடையில் பார்க்க வேண்டியவை இந்தக் கதைகள். இந்த அம்சத்தில் தருணாதித்தனின் இந்தக் கதைகள் அ.முத்துலிங்கம், அசோகமித்திரன் ஆகியோரை நினைவுபடுத்துகின்றன. - ஜெய்
மாயக்குரல்
தருணாதித்தன்
எழுத்து பிரசுரம்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 8925061999
பண்பாட்டுச் செய்திகள்: குமரி மண்ணின் வரலாற்று நிகழ்வுகள், தான் கண்ட வழக்காறுகள், அங்கு நிலவும் நாட்டார் வழிபாடு சார்ந்த செய்திகள் ஆகியவற்றை ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தின் ஆட்சியில் இருந்தபோது, நாஞ்சில் வட்டார ஊர்களுக்கு மலையாளக் கலைஞர்கள் இயல்பாக வந்து சென்றுகொண்டிருந்தனர்.
இன்றைய தலைமுறையினர் செவிவழிச் செய்திகளாக மட்டுமே அறிந்துள்ள ராப்பாடிகள், சித்தோசிகள் போன்றோரும் சமூகத்தில் புறக்கணிக்க முடியாத இடத்தில் இருந்த காலம் அது. அவர்களைப் பற்றிய பசுமையான சித்திரங்களை, ‘குமரிக்கு வருவதை நிறுத்திய யாசகர்கள்’, ‘படக்காரன் சொன்ன கருட புராணம்’ ஆகிய இயல்களில் காணலாம். படக்காரர்கள் காவடி தூக்கிக்கொண்டு ஊர் ஊராக வந்து, மக்கள் கூடுமிடங்களில் கருட புராணச் செய்திகளோடு தமது வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்துக் கூறுவார்கள்.
அந்த ஊரில் கதை கூறிய பகுதிகளில் மட்டுமே இவர்கள் காணிக்கை கேட்பதும், ஒரு படக்காரர் வந்த இடத்தை இன்னொரு படக்காரர் தவிர்த்து விடுவதும், வேறு ஊருக்குப் படக்காரர் புறப்படும் நாளில் மக்கள் அந்த ஊரில் வசிக்கும் தங்கள் உறவினர் குறித்துச் சொல்லி அனுப்புவதும் அக்காலத்துச் சமூகத்தில் இருந்த ஒழுங்கையும் நிதானத்தையும் விருந்தோம்பலையும் உணர்த்துகின்றன. - ஆனந்தன் செல்லையா
படக்காரன் சொன்ன கருடபுராணம் (தென்குமரிச் செய்திகள்)
அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ் (பி) லிட்.,
விலை: ரூ.280
தொடர்புக்கு: 044 26251968
அயல் மொழி நூலகம்: அகதியின் பயணம்: தமிழின் சிறந்த புனைவெழுத்தாளர்களில் ஒருவர் அ.முத்துலிங்கம். அங்கதமும் ஓட்டமும் கூடிய அவரது மொழி, வாசிப்புச் சுவாரசியத்தைப் பிரதான அம்சமாகக் கொண்டது. அவரது எழுத்துக்கான சமீபத்திய உதாரணங்களில் ஒன்று ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவல். ஈழத்திலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர முயலும் ஒரு இளைஞனின் கதையாக இந்த நாவல் விரிகிறது.
சொந்த நாட்டிலிருந்து இரு படகுகளில் தப்பிச் செல்கிறார்கள் தமிழர்கள். ஒன்றில் மட்டுமே இன்ஜின் செயல்பட, ஒன்றை மற்றொன்று இழுத்துச் செல்கிறது. அதில் ஒரு கைக்குழந்தைக்காரி. கைக்குழந்தையோ கரைச்சலோ கரைச்சல். ஒரு கட்டத்தில் குழந்தையைக் கடலுக்குள் வீச முயல்கிறாள் தாய்.
யாராவது எழுந்தால் கவிழ்ந்துவிடும் நிலை படகுக்கு. மற்றவர்கள் ஆற்றுப்படுத்துகிறார்கள். இப்படிப் போகும் பயணம் நடப்புக் காலம் வரை நீள்கிறது. எளிமையான ஆங்கிலத்தில் அ.முத்துலிங்கத்தின் விசேஷமான ஓட்ட நடையை ஒத்து கவிதா முரளிதரன் இந்த மொழியாக்கத்தைச் செய்துள்ளார். - குமார்
வேர் காட் பிகேன்
(Where God Began)
அப்பாதுரை முத்துலிங்கம்
(ஆங்கிலத்தில்: கவிதா முரளிதரன்)
வெஸ்ட் லேண்டின்
ஏகா (Eka) பதிப்பு
விலை: ரூ.499
திண்ணை: பஞ்சாங்கம் 75 - பேராசிரியர் க.பஞ்சாங்கம், ஆய்வு, புனைவு எனப் பன்முகத் திறம் கொண்டவர். ஒரு சிந்தனைப் பள்ளியாக மாணவர்களையும் உருவாக்கித் தந்துள்ளார். அவரது 75ஆம் வயது நிறைவை ஒட்டி ‘வையம்’ இதழ் சிறப்பிதழை வெளியிட உள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்வில் பஞ்சாங்கத்தைச் சிறப்பிக்கும் வகையிலான அமர்வையும் ‘வையம்’ இதழ் ஒருங்கிணைத்துள்ளது.
நாளை (04.02.24) காலை 10 மணி முதல் 1.20 மணி சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஓவியர் டிராட்ஸ்கி மருது, காவ்யா சண்முகசுந்தரம், வெங்கட சுப்புராய நாயகர், பழ.அதியமான், ரவி சுப்பிரமணியன், சிற்பி பாலசுப்பிரமணியம், பச்சியப்பன், பாரதிபுத்திரன் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.
கல்விப் பெருந்தகையின் கதை: தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவரான சி.துரைக்கண்ணு 35 ஆண்டுக் காலம் அரசுப் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்த நூலில் தன் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
இளம்வயதிலிருந்தே பல மக்கள் இயக்கங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்குக் கல்விதான் முக்கியம் என்பதை உணர்ந்திருந்த அவர், என்.எல்.சி. நிறுவனம் நடத்தும் பள்ளிகளில் நடந்த முறைகேடுகளை எதிர்த்துப் போராடி அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதில் முக்கியப் பங்களித்துள்ளார்.
அந்தப் பள்ளிகளின் பொறுப்பாளராக அவர் பொறுப்பேற்ற பிறகு, அங்கு படித்த மாணவர்களிடம் நிகழ்ந்த வியத்தகு மாற்றங்கள் நூலில் பதிவாகியுள்ளன. தடைகளைத் தாண்டி கற்று முன்னேறியதோடு சமூக முன்னேற்றத்துக்கும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவரது ஆளுமையை அறியத் தரும் நூல் இது.
நிற்க அதற்குத் தக!
சி.துரைக்கண்ணு
நீலம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 98945 25815