தமிழியல் ஆய்வு முன்னோடி

தமிழியல் ஆய்வு முன்னோடி
Updated on
1 min read

நா.வானமாமலை 1917இல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பிறந்தவர். நா.வா. பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். கூடவே, பொதுவுடைமை இயக்கத் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. சிந்தனைத் தளத்தில் மட்டுமின்றி, போராட்டக் களத்திலும் பங்கேற்றார். விவசாயிகள் இயக்கம், தொழிற்சங்க இயக்கம் ஆகியவற்றிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

அறிவியல் அடிப்படையில் தமிழ்ச் சிந்தனை மரபை முன்னெடுக்கும் ஆய்வுப் பரப்பை நா.வா. தேர்ந்தெடுத்தார். நிரந்தர அரசுப் பணியாக இருந்த ஆசிரியர் பணியைத் துறந்தார். வாழ்க்கை நடத்திட பாளையங்கோட்டையில் ‘Students Tutorial Institute’ எனும் தனிப்பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களைப் படைத்தார். தொடர்ந்து எளிய அறிவியல் நூல்களை மொழிபெயர்த்தார். மார்க்சிய அடிப்படைகளை வெகுமக்களுக்கு ஏற்பக் கையேடுகள்போலத் தயாரித்து வழங்கினார். தமிழில் மார்க்சிய முறையியலை இலக்கியத் திறனாய்வுப் புலத்தில் பயன்படுத்திய முன்னோடிகளில் நா.வா. முதன்மையானவர்.

அவர் தொடங்கிய ‘நெல்லை ஆய்வுக் குழு’ மிக முக்கியமான நகர்வு. நா.வா. முதல் முறையாக ‘ஆய்வு’க்கு மட்டுமேயான ஓர் அமைப்பை உருவாக்கினார். கல்விசார் வரையறைகள் கிடையாது. அறிவியல் நோக்கு, சமூக அக்கறை, ஆய்வியல் ஆர்வம், படிப்பில் ஈடுபாடு, விடாமுயற்சி ஆகியவை இருந்தால் போதும். மாதந்தோறும் கூட்டங்கள் நடைபெற்றன. கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக ‘ஆராய்ச்சி’ (07.12.1969) எனும் இதழை அவர் தொடங்கினார். தமிழக, இந்திய, உலக அறிஞர்கள் பலரும் ‘ஆராய்ச்சி’யில் எழுதினர். ஆங்கிலத்திலும் கட்டுரைகள் இடம்பெற்றன. தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல் மொழியியல், சமூகவியல், வரலாறு, தொல்லியல், மானிடவியல், நாட்டுப்புறவியல், பழங்குடியியல், நுண்கலைகள், ஒப்பியல் போன்ற பல துறைகள் சார்ந்தும் ஆய்வுகள் இதில் வெளிவந்தன.

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் பி.சி.ஜோஷி விடுத்த அறைகூவலுக்கு இணங்க நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் நா.வா. ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’, ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ ஆகிய இரு தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தார்.

நாட்டார் வழக்காற்றியலில் கள ஆய்வு, சேகரிப்பு, தொகுப்பு, பதிப்பு, ஆய்வு, கோட்பாடுகள், முறையியல் ஆகிய பல்முனைகளிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியவர் நா.வா. எனவேதான் அவரைத் ‘தமிழ் நாட்டார் வழக்காற்றியலின் தந்தை’ எனக் குறிப்பிடுகின்றனர். அறிஞர்கள் ஆ.சிவசுப்பிரமணியனும் தொ.பரமசிவனும் நா.வாவின் மாணாக்கர்கள்.

நா.வா. தமிழ் ஆய்வில் புதுப்பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டியவர். தான் எழுதுவதைவிடவும் பிறரை எழுத வைப்பதில் மகிழ்ந்தவர். சுடர்கள் ஏற்றும் சுடராக விளங்கியவர். தனக்குப் பின் ஆய்வுலகில் ‘நா.வா. சிந்தனைப் பள்ளி’ எனும் அளவுக்கு ஆய்வாளர் படையை உருவாக்கியவர். ஏராளமான ஆய்வுத் திட்டங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு, 02.02.1980இல் மத்தியப் பிரதேசம் - கோர்பாவில் தன் மகள் வீட்டில் காலமானார்.

பிப்ரவரி 2: நா.வானமாமலையின் நினைவு நாள்

- தொடர்புக்கு: kamarasuera70@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in