நூல் வெளி: பாரதியாரை மீட்ட தம்பலா!
பாரதியாரின் வாழ்க்கையில் ‘தம்பலா’ என்ற சுயமரியாதைச் சுடரொளி வந்துபோன பதிவு இரா.கனகலிங்கம் எழுதிய ‘என்குருநாதர்’ என்ற நூலில் மட்டுமே பதிவுபெற்றுள்ளது. எழுத்தாளர் பாரதிவசந்தன் அந்நூலை வாசிக்கிறபோது,தம்பலா கதாபாத்திரத்தைக் கண்டு அதிசயித்தார். அவரின் கம்பீரம் பாரதியைக் கவர்வதைப் போல பாரதிவசந்தனையும் கவர்கிறது.
அவர் வாழ்ந்த சுண்ணாம்புக் காளவாய்ச்சேரியைக் களஆய்வு செய்யத் தூண்டுகிறது அவரது மனம். சேகரித்த தகவல்களை ஒரு நூலில் அழகுறக் கோப்பதைப் போல நிரல்படுத்தி, தம்பலாவுக்கு முழு உருவம் கொடுத்திருக்கிறார் பாரதிவசந்தன்.
தம்பலா துப்புரவுப் பணியாளர் சமூகத்தைச் சார்ந்தவர். துப்புரவுப் பணியாளர் மக்களிடையே சற்று வசதி வாய்ப்பும், நாகரிகமும் கொண்டவராகக் கதையில் காட்டப்படுகிறார். நியாயத்துக்காக நிற்கும் அவரின் அறம் சார்ந்த மனதைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
தமது சமூகத்தைக் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்த முற்படும் ஆதிக்க மனநிலை கொண்டவர்களைத் துணிச்சலுடன் எதிர்க்கிறார்; நியாயம் கேட்கிறார்; அவரைப் பிடிக்காதவர்கள், அடங்காப்பிடாரி, முரடன் என்று பொதுவெளியில் அவர்மீது தவறான சித்திரத்தை உருவாக்கிவிடுகின்றனர். இக்கருத்தைக் கனகலிங்கமும் நம்பிவிடுகிறார் என்பதுதான் பெரும் சோகம்.
புதுச்சேரியில் அப்போது பிரெஞ்சு இந்தியாவின் தேர்தல் நடைமுறை அமலாகியிருந்த நேரம். பொல்திக் கட்சியினர் மிக மோசமாக நடந்துகொள்ளத் தலைப்பட்டனர். வன்முறை வெறியாட்டங்கள் கொடிகட்டிப் பறந்தன. வெளியில் நடமாடக்கூட இயலாத சூழலில் ஒருநாள் இரவில் கனகலிங்கத்தைத் தேடி அவரது வீட்டுக்கு பாரதி சென்றார். வழியில் சில வன்முறையாளர்கள் பாரதியை மறித்துக்கொண்டு வம்பிழுத்தனர்.
திடீரென அவ்விடத்தில் பிரசன்னமான தம்பலா, பாரதியைக் காப்பாற்றியதோடு அல்லாமல், “எலே.. இந்தப் பிச்சேரிக்கு (புதுச்சேரிக்கு) ஒரு மரியாதை இருக்குன்னா அது இவருமாரியான ஆளுங்களாலதான். அதைக் கெடுத்திடாதிங்க” என வன்முறையாளர்களைக் கண்டித்து அனுப்புகிறார். தம்பலாவுக்குப் பாரதியை நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், வந்தவர் தம்பலா என்று அறிந்திருக்க பாரதிக்கு வாய்ப்பில்லை. பராசக்தியே அவர் உருவில் வந்து தன்னைக் காப்பாற்றியதாக நம்பிச் செல்கிறார் பாரதி.
பாரதியின் வீட்டுக்கு கனகலிங்கம் ஈஸ்வரன் வருகிறார். பாரதி அக்னிக்குஞ்சாக மாறி ஒரு கவிதையை அவரிடம் படித்துக்காட்டுகிறார். ‘மழை பெய்கிறது. ஊர் முழுவதும் ஈரமாகி விட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள்...’ எனத் தொடங்கும் பாடல் இந்நாவலின் மிக முக்கியமான இடம்.
கவிதை சம்பாஷணைகளுக்குப் பிறகு முந்தைய நாள் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் பாரதி. எல்லாவற்றுக்கும் அந்தத் தம்பலாதான் காரணம் என்கிறார் கனகலிங்கம். அந்தப் பெயர் பாரதியைக் கவர்கிறது. தம்பலாவைப் பார்க்க வேண்டுமென அவரது வீடு நோக்கிக் கனகலிங்கத்துடன் பாரதி பயணப்படுகிறார்.
நாவலின் நிறைவுப் பகுதி, பாரதிக்கும் தம்பலாவுக்குமான உரையாடலாக அமைந்துள்ளது. தம்பலாவைப் பற்றி வெளியில் பேசிக்கொள்வதற்கும், அவருக்கும் தொடர்பில்லை என நேரில் கண்டதும் தெரிந்துகொள்கிறார் பாரதி. தனது துப்புரவுப் பணியாளர் இனமக்கள் படும் துயரங்களைத் தம்பலா எடுத்துரைக்கிறார்.
மலத்துடன் போராடும் அவர்களது வாழ்க்கையைச் சொல்லி பாரதியிடம் நியாயம் கேட்கிறார். தனது மக்களின் விடுதலைக்காக மன்றாடுகிறார். தம்பலாவின் வார்த்தைகள் பாரதியைக் கலங்கடிக்கின்றன. அவரது நியாயத்தை மதிக்கிறார் பாரதி. சீழ் பிடித்த சமூகத்தை நொந்தவாறு, தம்பலாவின் போராட்டத்தை வாழ்த்தி விடைபெறுகிறார்.
இக்கதை இதுவரை காணக்கிடைக்காத ஒரு புதிய வரலாற்று வார்ப்பு. தம்பலா என்ற மனிதனின் ஆன்மாவை உணர்ந்து மிகநேர்த்தியாக அவரது உரையாடல்கள் படைக்கப்பட்டுள்ளன.
இழிவாகப் பார்க்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து போர்வீரனைப் போலத் தம்பலா முளைத்தெழுந்து, அக்காலத்திலேயே போராடியது வியப்பைத் தருகிறது. பாரதியின் வரலாற்றில் கனகலிங்கம் அளவுக்குப் போற்றப்பட்டிருக்க வேண்டிய தம்பலா கதாபாத்திரம் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்ற வினா ஆழ்மனத்துள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பாரதிநேசர்களுக்கு இந்நூல் காணக்கிடைக்காத ஒரு பொக்கிஷம்.
தம்பலா (நாவல்)
பாரதிவசந்தன்
அகநாழிகை வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 7010139184
- meenaasundhar@gmail.com
