Published : 03 Feb 2018 10:44 AM
Last Updated : 03 Feb 2018 10:44 AM

நடந்தாய் வாழி அமராவதி!

மிழ் மொழியில் நதிகளைப் பற்றி வெளியான புத்தகங்கள் மிகக் குறைவே. காவிரியைப் பற்றி தி.ஜ-வும் சிட்டியும் எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி’க்குப் பிறகு, நதியைப் பற்றி விரிவான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியாகியிருக் கிறது, உடுமலையைச் சேர்ந்த இரா.ரவிக்குமார் எழுதிய அமராவதி நதியைப் பற்றி ஆய்வுப் பார்வையிலான புத்தகம். கொங்கு மண்டலத்தில் பழனி மலைத் தொடருக்கும் ஆனை மலைத் தொடருக்கும் இடையே உற்பத்தியாகும் அமராவதியை, அதன் நதிமூலம் தொடங்கி கரூருக்கு அருகே திருமுக்கூடலில் காவிரியில் கலக்கும் வரையில் பன்னோக்குப் பார்வையுடன் விரிவான கட்டுரைகளாக விவரிக்கிறது நூல். தமிழ் இலக்கியத்தில் அமராவதியைப் பற்றிய தரவுகள், தொல்லியல் சார்ந்த வரலாற்றில் கிடைத்த தரவுகள், நதிக்கரையின் கடந்த கால, தற்கால நாகரிகங்கள், வடிநிலங்கள் விவரங்கள், ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், நதியில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், நதியில் நடந்த ஆக்கிரமிப்புகள், சாயக் கழிவுகள் கலப்பது உட்பட நதியில் நடந்த சீரழிவுகள், நதிக்காக நடந்த போராட்டங்கள், சட்ட மன்றத்தில் நடந்த விவாதங்கள், அதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் நிகழ்ந்த நகர்வுகள், ஆற்றின் பாசன விவரங்கள், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், அணை விவரங்கள் என எதையும் தவறவிடாமல் நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் ரவிக்குமார். அமராவதியின் துணை நதியான பழனி அருகே உற்பத்தியாகும் சண்முக நதியைப் பற்றியும், இன்றைய தலைமுறையினர் அறியாத சண்முக நதியின் துணை ஆறுகளான பச்சையாறு, பாலாறு, சுருளியாறு, பொருந்தலாறு, கல்லாறு, வரடாறு ஆகிய நதிகளைப் பற்றியும் நூலில் தகவல் இடம்பெற்றிருப்பது சிறப்பான அம்சமாகும். நதிகளைப் பற்றி ஆய்வுசெய்ய முற்படுவோருக்கும், நதிகளைப் பற்றிய வரலாற்றைப் பதிவுசெய்ய விரும்புவோருக்கும் இந்நூல் நிச்சயம் வழிகாட்டியாக அமையும். கொங்கு மண்டல ஆய்வு மையம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

- டி.எல்.சஞ்சீவிகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x