

ஒரு மருத்துவ மாணவனின் தற்கொலையை முன்வைத்து, தற்கொலைக்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பகுப்பாய்வு செய்கிறது மயிலன் ஜி.சின்னப்பனின் இந்த நாவல். வழமையான நாவல்களுக்குரிய வடிவமைப்புகள் எதுவும் இல்லாவிடினும், பரிபூரண வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கத் தவறவில்லை.
உடற்கூறாய்வு (Postmortem) என்பது உடலுக்குத்தான்; இந்நாவலில் அது உள்ளத்துக்குள் நடக்கிறது. வன்மங்களும் சிறுமைகளும் மலிந்து கிடக்கும் மனித மனங்களையும் அமைப்பு சார்ந்த விழுமியங்களையும் ஊழல் மலிந்து கிடக்கும் மருத்துவத் துறையையும் இந்த நாவல் கூறாய்வு செய்கிறது.
ஒரு தற்கொலை நிகழும்போது இறப்பது அந்த நபர் மட்டுமல்ல; அவரைச் சார்ந்திருக்கும் அவரோடு பிணைக்கப்பட்டிருக்கும் எண்ணற்றவர்களின் மனங்களின் மென்மையான ஒரு பகுதியும்தான். அப்படியான ஒரு கதைசொல்லியின் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது இந்த நாவல்.
முதுநிலை மருத்துவ மாணவர்களின் தற்கொலை குறித்த செய்திகளை நாள்தோறும் நாம் கடந்து செல்கிறோம். இந்தச் செய்திகள், அந்த நிமிடத்தின் பச்சாதாப உணர்ச்சியை மட்டுமே நமக்குள் விளைவிக்கிறது. பிறகு, அவற்றை மறந்து, கடந்து விடுகிறோம். மனிதர்களுக்கு எத்தனையோ செய்திகள், எத்தனையோ கவலைகள்.
ஆனால், சக மாணவன் ஒருவனின் தற்கொலை ஒருவனை எந்த அளவுக்கு அலைக்கழிக்கும், அதன் தாக்கம் அவனுக்குள் எவ்வித மாற்றங்களை நிகழ்த்தும் என்கிற கோணத்தில் இந்த நாவல் நகர்ந்துசெல்கிறது. ஒரு சாதாரண செய்தி விளைவிக்கும் உணர்ச்சிக்கும் ஒரு தேர்ந்த இலக்கியம் நிகழ்த்தும் ரசவாதத்துக்கும் எத்துணை வேறுபாடு இருக்கிறது என்பதை இந்நாவல் மூலம் நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு நிகழ்வை நாம் முதலில் உணர்வுபூர்வமாகத்தான் எதிர்கொள்வோம். நாள் செல்லச்செல்ல, அந்த நிகழ்வு ஒரு தர்க்கபூர்வமான செய்தியை நமக்குச் சொல்லும்; வேறொரு பரிமாணத்தை நமக்குப் புலப்படுத்தும். இலக்கியத்தால் மட்டுமே அடையக்கூடிய பூரணத்துவம் அது. அதை இந்நாவல் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
மிக நேர்த்தியாக நாவலை மயிலன் கட்டமைத்திருக்கிறார். எந்த இடத்திலும் வாசகனின் கண்ணீரைக் கோரும்விதமாகவோ கொந்தளிப்பைத் தூண்டும்விதமாகவோ அவரது சொல்முறை இல்லை. எனினும் வாசிக்க வாசிக்க, அவருடைய நீரோட்டத்துக்குள் நம்மை இழுத்துக்கொள்ளும் மாயம் நிகழ்ந்துவிடுகிறது. கண்ணீரை வரவழைப்பதற்குப் பதில், ஆழ்ந்த துக்கத்தையும் தீவிர சிந்தனையையும் வாசிப்பவர்களிடையே ஏற்படுத்துகிறது. நாவலின் வெற்றியாக இதைக் கூறலாம்.
வெறும் கடந்த காலச் சம்பவங்களாலேயே இவ்வளவு தீவிரமாக நகர்த்திச் செல்ல முடிகிற காத்திரமான சொல்முறை. பெரும்பாலும் அயற்கூற்று வாக்கியங்களாகவே நாவல் கட்டமைக்கப்பட்டிருப்பினும், சலிப்பேற்படுத்தாமல் கதைசொல்லும் ஆற்றல் இந்த நாவலுக்கு உண்டு.
அவ்வளவு செறிவான, பிரவாகமான மொழி. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைக் கூட்டணி. தஸ்தயெவ்ஸ்கியை வாசித்தவர்களுக்கு மயிலனின் எழுத்தின் தன்மையை விளங்கிக்கொள்ள முடியும். முழுக்க முழுக்க மனதுக்குள் ஓடும் சிந்தனை ஓட்டத்தை, ஒரு கருவி மூலம் பதிவுசெய்ததைப் போல் எழுதும் பாணியை தஸ்தயெவ்ஸ்கியிடம் பார்க்கலாம். ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ அத்தகைய அனுபவத்தைக் கொடுக்கிறது.
நாவலின் முதல் பாகத்தில் கதைசொல்லியும் மற்ற கதாபாத்திரங்களும் இடும் முடிச்சுகளை, இரண்டாம் பாகத்தில் தனித்தனி அத்தியாயங்களில் கதைசொல்லியே விடுவிக்கிறார். ஒரு புதிரை விடுவிப்பதுபோல் வெறும் கிளர்ச்சியை ஏற்படுத்தாத, வாசகனை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் உளப் பகுப்பாய்வாக அமைந்துள்ளது, நாவலின் இரண்டாம் பாகம். படித்து முடித்த பிறகு, மீண்டும் நாவலின் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தூண்டுகிறது. அந்த அளவுக்கு நம்மை ஒரு தீராசுழற்சியில் சிக்கவைத்து நாவல் சித்ரவதை செய்கிறது. ஒரு படைப்பு நம்மை ஏதோ ஒரு விதத்தில் இப்படி ஆட்கொள்ளாவிட்டால், அதற்கு என்ன மகத்துவம் இருக்கும்?
இந்நாவலில் குறிப்பாக அவர் பயன்படுத்தும் சொற்கள், வாக்கிய அமைப்பு, தீவிர உளப்பகுப்பு, சொல்முறை ஆகிய அம்சங்கள் தமிழ்ச் சூழலுக்கு ஒரு திறப்பையும் பாய்ச்சலையும் நிகழ்த்தியிருக்கின்றன என்றே கூற வேண்டும். மருத்துவத் துறையில் ஒளிந்திருக்கும் அற்பத்தனங்களை யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் நாவல் பதிவுசெய்திருக்கிறது. அதைச் செய்திருப்பது ஒரு மருத்துவர் என்பதால், அதன் நம்பகத்தன்மை மேலும் வலுப்பெறுகிறது.
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
மயிலன் ஜி.சின்னப்பன்
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு:
044-4858 6727
- தொடர்புக்கு: narumugaikuppuswamy@gmail.com