அஞ்சலி: மு.ராமலிங்கம் | சிற்றிதழ் வழிச் செயல்பட்டவர்

அஞ்சலி: மு.ராமலிங்கம் | சிற்றிதழ் வழிச் செயல்பட்டவர்
Updated on
1 min read

‘இலக்கியச் சிறகு’ சிற்றிதழின் ஆசிரியர் மு.ராமலிங்கம் ஜனவரி 13இல் காலமானார். இவர் ‘இலக்கியச் சிறகு’ சிற்றிதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்திவந்தார். ஆங்கிலக் கவிதைகளுக்காக ‘SHINE’ என்னும் இதழையும் தொடர்ந்து இவர் நடத்திவந்தார். பிறமாநிலங்களிலிருந்தும் பல கவிஞர்கள் இந்த இதழில் தொடர்ச்சியாகப் பங்களித்துவந்தார்கள்.

‘நெய்தல் இலக்கிய வட்டம்’ என்னும் அமைப்பை நிறுவி மாதாந்திர இலக்கியக் கூட்டங்களையும் நடத்தினார். இதில் பங்கேற்று கவிதை , கட்டுரை ,
சிறுகதை வாசித்தவர்களில் பலர் இன்று சிறந்த பத்திரிகையாளர்களாகவும் சிறுகதை எழுத்தாளர்களாகவும் புகழடைந்திருக்கிறார்கள். கீரனூர் ஜாகிர் ராஜா, செல்வ புவியரசன், வல்லம் தாஜ்பால் எனப் பலரை இப்படிக் குறிப்பிட முடியும்.

‘நடை’ என்னும் தலைப்பில் அமைந்த அவரது சிறுகதை, சாதி சார்ந்த அவமானத்தால் நேர்ந்த மன இறுக்கத்திலிருந்து, அதைத் தொடர்ந்து நிகழும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் எப்படித் தன்னைச் சமன்படுத்திக் கொள்கிறார் என்பதைப் பேசுவதாகும்.

நடுத்தர நகரம் ஒன்றில் குடியிருக்கும் அவர் சற்று தொலைவில் இருக்கும் கிராமத்தில் நடக்கும் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, அக்கிராமத்தில் இருக்கும் தன் அலுவலக நண்பர் இல்லத்திற்குச் சென்று அன்றிரவு தங்கிவிட்டு, மறுநாள் அவரோடு சேர்ந்து அலுவலகம் செல்லலாம் என்னும் எண்ணத்தில் நண்பரது வீட்டுக்குச் செல்கிறார். நண்பர் இவரைக் கண்டதும் பதற்றமடைகிறார்.

இவரைத் தனது தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று ஒரு குடிசையைக் காட்டி , “இவரும் ஒங்க சாதிதான், இங்க தங்கிக்கிருங்க; சாப்பாடுகூட இங்கேயே ஒங்களுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லிட்டேன்” என்று சொல்லி இவரைத் தோப்பிலேயே விட்டுவிட்டு நண்பர் போய்விடுகிறார்.

அங்குத் தங்குவதற்கு இருப்புக் கொள்ளாமல் நடு இரவில் அங்கிருந்து புறப்பட்டு, விண்மீன்கள் செழித்த வானத்தை ரசித்துக்கொண்டு, சாலையில் தன் ஆட்டு மந்தையை நடத்திப்போகும் கீதாரியோடு உரையாடிக்கொண்டு தன் வீடு இருக்கும் அந்த நகரத்தை விடியலில் வந்தடைந்தபோது, முதல் நாள் நேர்ந்த அவமானம் கழுவிவிடப்பட்டிருப்பதை உணர்கிறார்.

வயது முதிர்வால் தளர்வடைந்து இருந்த போதிலும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து செயல் பட்டுக்கொண்டிருந்தவர். கோவை சிற்றிதழ் சங்கத் தலைவர் குன்றம் மு.ராமரத்தினத்தால் ‘இதழியல் மூப்பர்’ என்னும் பாராட்டு பெற்றவர் இவர்.

- தொடர்புக்கு: koothalingampalaniyappan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in