Last Updated : 16 Aug, 2014 11:34 AM

 

Published : 16 Aug 2014 11:34 AM
Last Updated : 16 Aug 2014 11:34 AM

ஊர் நினைவுகள்: தட்டு நிறைய மைசூர்பாகு

நீலக்குயில் என்கிற பெயர் சில பேருக்கு மட்டும்தான் இப்போது ஞாபகத்தில் இருக்கும். அது ஒரு திரைப்படத்தின் பெயர். ஜனாதிபதி பரிசு பெற்ற படம். தமிழ்ப் படம் இல்லை. என்றாலும் நண்பர் அண்ணாமலைக்கு அந்தப் பெயர் ரொம்பப் பிடித்திருந்தது. அதனால்தான் அவர் தனது சிற்றிலக்கிய இதழுக்கு ‘நீலக்குயில்’ என்று பெயர்வைத்தார்.

சிறுபத்திரிகை ஆரம்பிக்கும்போது மட்டும் அடுப்புக் கரியால் ‘நஷ்டம்’ என்று எழுதியே தொடங்கலாம். மேலே போட்ட கல் கீழே விழுவது எப்படி நிச்சயமோ, அவ்வளவு நிச்சயம் நஷ்டம் கிடைப்பது.

அண்ணாமலை கெட்டிக்காரர். அதிலும் செட்டி வீட்டுப் பிள்ளை. அவருக்கு நஷ்டம் ஏற்படவில்லை; லாபமும் கிடையாது! குல்லாயோடு போய்விட்டது.

சின்ன வயதிலிருந்தே பைசா பைசாவாகச் சேர்த்துவைத்த பணம் ஐயாயிரம் ரூபாய் இருந்தது. இதுதான் நீலக்குயிலுக்கு மூலதனம். இது முடிந்ததும், நீலக்குயிலும் பறந்து போய்விடும்; போகட்டும். என்ன ஆனாலும் சரி. பத்திரிகை தொடங்கிவிட வேண்டியதுதான். ஆனால் தலைக்கு மேலே - கடவுள் இருப்பதுபோலே - அப்பா என்று ஒருவர் இருக்கிறாரே. அவருடைய தலையசைப்பு இல்லாமல் எப்படித் தொடங்குவது?

அப்பாவிடம் நெருங்கிப்போவதும் பேசாமல் திரும்பி வருவதுமாகக் கொஞ்ச நாள் கழிந்தது.

அண்ணாமலையோட சித்தப்பா டாக்டர் கதிரேசன் நவீன இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். எழுத்தாளர் கு. அழகிரிசாமியுடன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தவர். என்னுடைய விசிறியுமாவார். அவரோடு பேசினால் பலன் கிடைக்கலாம் என்று அண்ணா மலையிடம் யோசனை சொன்னேன்.

அந்தச் சமயத்தில் டாக்டர் கதிரேசன் கோவில்பட்டிக்கு வருவதாகவும் இருந்தது. அண்ணாமலை, அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து இருக்கும் நேரத்தில், சித்தப்பாவிடம் - அப்பாவிடமும் சொல்லுவதுபோல - தான் சிற்றிதழ் ஆரம்பிக்க ஆசைப்படுவதாகச் சொல்லவும், ‘அப்படியா, நல்ல விஷயமாச்சே’ என்று வாய் தவறியது போல(!)ச் சொல்லவும் அண்ணாமலையின் அப்பா திடுக்கிட்டாராம்!

என்றாலும், ‘இதெல்லாம் சரிக்கு வருமா?’ என்று அப்பா கேட்க, ‘சரிக்கு வராதூன்னா, விட்டுற வேண்டியதுதானே’ என்று கதிரேச சித்தப்பா முத்தாய்ப்பு வைத்து முடிந்ததாம்.

‘நீலக்குயில்’ கருக் கொண்டுவிட்டது.

ஆக, ‘நீலக்குயில்’ அச்சில் வெளிவந்தது. தேவதச்சன், கெளரிசங்கருடன் நானும் கலந்துகொண்டேன் அந்த ஆட்டத்தில்.

* எம்மைப் போன்றவர்கள் சேது ராமலிங்கம் செட்டியார் கடை என்று சொல்லாமல் ‘சேது செட்டியார் கடை’ என்றே சொல்லுவோம். முதலில் ஜவுளிக் கடை, தெற்கு பஜாரில். தரையில் விரிக்கப்பட்ட ரெட்டைக் கோரைப் பாய்கள். உட்காரவே சுத்தமாகவும் சுகமாகவும் இருக்கும். சொல்லி நெசவுசெய்து பத்தமடையிலிருந்து வாங்கப்பட்டவை அந்தப் பாய்கள்.

கடையை விரிவாக்க வேண்டுமென்று நினைத்தார்கள். இந்த இடம் காணாது; அதோடு மெயின் பஜாரில் வைக்க வேண்டுமெனத் தீர்மானமாயிற்று. அண்ணா மலை குடும்பத்தார் ஒரு ஓட்டலையும் மெயின் பஜாரில் தொடங்கினார்கள். பிறகு சில காரணங்களால் அந்த ஓட்டல், ‘ஸ்வீட் மனோரமா’ என்ற பெயரில் பலகாரக் கடையாக - பார்சல் மட்டுமே - என்று ஆனது.

பலகாரக் கடை என்றால் அதில் ஒரு பெயர்பெற்ற இனிப்பும், காரமும் இருக்க வேண்டும். காரத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.

என்னிடமும் யோசனை கேட்டார்கள்.

‘சீடை செய்யலாமே’ என்றேன். ‘பல்லுக்குத் தொலியும்படியான முறையில் இருக்க வேண்டும்’ என்றேன்.

பாடு என்றால் அப்படி ஒரு பாடு சீடை செய்வதில். எந்திரத்தில் மாவு அரைக்கக் கூடாது; உலக்கை கொண்டுதான் குத்த வேணும் என்று சொல்லிவிட்டார்கள், பலகாரம் செய்வதில் தேர்ச்சிபெற்ற பாட்டிமார்கள்.

அரும்பாடு படாமல் பேர் வாங்க முடியாதே! ஒரு தொழிற்சாலைபோல இயங்க ஆரம்பித்தார்கள்!

வெற்றியும் பலனும் கிடைக்க ஆரம்பித்தன. கொஞ்ச நாட்களுக்கெல்லாம், மதுரை - நெல்லை சாலை வழி போகும் கார்களெல்லாம் ஸ்வீட் மனோரமாவில் நின்று போக ஆரம்பித்தன. சீடை, மைசூர்பாக் என்றால் அது ஸ்வீட் மனோரமாதான் என்று ஒரு பேரை நிலைநிறுத்திவிட்டார்கள்.

மைசூர்பாக்கும் ரசமும் செய்யக் கைவந்துவிட்டால் ஒரு மாஸ்டர் பட்டம் தந்துவிடலாம் என்பார்கள்.

ஒரு நாள் மாலை நேரம். ஓட்டல் மொழியில் டிபன் நேரம். கல்லாவில் அண்ணாமலை உட்கார்ந்திருந்தார். ஒரு கார் வந்து ஓட்டல் முன் நின்றது. அதிலிருந்து முழுசாக வளர்ந்த ஒரு மனிதன் தலைப்பாகையும் எடுத்துக்கட்டி தாடி, கோட்டு சூட்டுடன் இறங்கி வந்தான். கையில் வைத்திருந்த மணிபர்ஸ் கொள்ளாமல் ரூபாய் நோட்டுகள் துருத்திக்கொண்டிருந்தன. அதை அண்ணாமலையிடம் தந்துவிட்டு நேராக இனிப்புகள் அடங்கிய பீரோவுக்கு முன்னால் அப்போதுதான் செய்து அடுக்கிவைத்த மைசூர்பாக் தட்டுக்கு முன்னால் போய் நின்றான். நெய் மணம் வீசும் மைசூர்பாக்குகள் நேர்த்தியாகக் கோட்டைகட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தாம்பாளத்தை அப்படியே செந்தூக்கலாய்த் தூக்கிக் கொண்டுவந்து வைத்து, அண்ணாமலையைப் பார்த்து ஒரு சலாம் வைத்துவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தான்.

தட்டோடு தூக்கிக்கொண்டுவந்த முறையை ஆட்சேபிக்கும் விதமாகத் தலைமை சப்ளையர் வந்தபோது அண்ணாமலை, அவரை இஷ்டம்போல விட்டுவிடும்படி சைகை செய்தார்.

அதன் பிறகு சப்ளையர் செய்ததெல்லாம், அந்த ஆள் சாப்பிடச் சாப்பிட நாலு, அஞ்சி, ஆறு என்று எண்ணிக்கொண்டிருந்ததுதான்.

எண்ணவில்லையென்றால் துட்டை எப்படி வசூலிக்கிறது?

இந்தக் கோலத்தைப் பார்த்தவர்களுக்கு முதலில் ஆச்சரியம், பிறகு சிரிப்பு, எண்ணிக்கை கூடக்கூட ஒருவித பயம்.

இந்தக் கோவில்பட்டிக்காரங்களுக்கு எப்படித்தான் தகவல் தெரிந்ததோ. கூட்டம் கூடிவிட்டார்கள்.

பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள்:

- விளங்குமா

- செத்தான்

- இவ்வளவுக்கும் எப்படித் துட்டுக் கொடுக்கப்போறான்!

- வயித்து வலியிலே துடிக்கப்போறான் பாரு.

- இவன் வயித்துக்குள்ளெ அய்யனாருதாம் குடியிருக்கார்

எப்படியோ தட்டு முழுசும் சுத்தமாகக் காலியாகி விட்டது (கர ஒலிதான் எழுப்பவில்லை யாரும்).

வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டு மணிபர்ஸை அந்த மனிதனிடம் தந்ததும், அந்த அதிராட்சசன் கார் ஏறிப் பறந்துவிட்டான். அப்போதுதான் ஒருவர் கூட்டத்தி லிருந்து கத்திச் சொன்னார்: ‘தாராசிங், தாராசிங்’ என்று.

திருநெல்வேலியில் அப்போது குஸ்திப் பந்தயம், கிங்காங் - தாராசிங் இருவருக்கும் நடந்து கொண்டிருந்தது.

அடப் பாவி, அவர்தானா!

பின்னாட்களில் டி.வி.யில் ராமாயணத் தொடரில் இதே தாராசிங் அனுமானாக வந்தார். அதைப் பார்க்கும் போதெல்லாம் இந்த அனுமார்தான் நம்ம ஊரில் வந்து மைசூர்பாக்கைத் தட்டோடு சாப்பிட்டுப் போனது என்று சொல்லி மகிழ்ந்தார்கள்.

‘தாராசிங் புகழ் மைசூர்பாக்’ என்ற பேரும் பெற்றது அண்ணாமலையின் கடை.

கோவில்பட்டிக்கு எத்தனை வகையில் புகழ்!

- கட்டுரையாளர், சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x