சென்னைப் புத்தகக் காட்சி - சாதனைகளும் சோதனைகளும்

சென்னைப் புத்தகக் காட்சி - சாதனைகளும் சோதனைகளும்
Updated on
3 min read

100 பதிப்பகங்கள், 175 புத்தகங்கள்

47ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்தப் புத்தகக் காட்சி, 2ஆவது பன்னாட்டு புத்தகக் காட்சி குறித்து கடந்த 18 நாட்களாக இந்து தமிழ் திசையில் சிறப்புப் பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கிய ஆளுமைகளின் பேட்டிகள் (5), புத்தகக் காட்சி - துறை சார் நூல்கள் குறித்த விரிவான கட்டுரைகள் (10) முதன்மை இடத்தைப் பிடித்தன. அதே நேரம் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியான குறிப்பிடத்தக்க நூல்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகள் உடனுக்குடன் வெளியாகின. கடந்த 18 நாள்களில் 100 பதிப்பகங்கள் வெளியிட்ட 175-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தப் பக்கங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சாதனைகள்

‘என்றும் தமிழர் தலைவர்’ விற்பனையில் முன்னணி: ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான பெரியார் குறித்த பெருநூல் ‘என்றும் தமிழர் தலைவர்’. விற்பனைக்கு வந்த 20 நாள்களில் இணையவழி விற்பனை, 47ஆவது சென்னை புத்தகக் காட்சி என இரண்டு வகைகளிலும் இந்த நூல் முன்னணியில் இருந்துவருகிறது. பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், அவருடைய கொள்கை, சமூகப் பார்வையின் தேவை அதிகரித்திருப்பதன் வெளிப்பாடாக இதைக் கருதலாம். 864 பக்கங்கள், 100-க்கும் மேற்பட்ட சமகால எழுத்தாளர்களின் படைப்புகள், 15 ஓவியர்களின் கைவண்ணத்துடன் இந்நூல் வெளியாகியுள்ளது. அளவில் பெரிய இந்நூல் புத்தகக் காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துத் தொடர்ந்து பரபரப்பு குறையாமல் விற்பனை ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை நூல்களுக்கு வரவேற்பு: சென்னைப் புத்தகக் காட்சியில் புனைவு நூல்களைவிடக் கட்டுரை நூல்களே அதிகம் விற்பனையானதாகப் பதிப்பாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அதற்குச் சிறந்த உதாரணம், ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான ‘என்றும் தமிழர் தலைவர்’ நூல் வெளியான சில நாள்களில் ஒரு பதிப்பு விற்றுத் தீர்ந்துவிட்டது. இதுபோல் வரலாறு தொடர்பான நூல்கள், வணிகம் தொடர்பான நூல்கள் எனக் கட்டுரை நூல்களை வாசகர்கள் விரும்பி வாங்கிச் சென்றனர். தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகத்தின் வெளியீடுகளான தமிழ்ச் சங்க இலக்கியம், தமிழ் இலக்கண நூல்கள், செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் வெளியீடுகள் போன்றவற்றையும் இந்தப் புத்தகக் காட்சியில் மக்கள் அதிகம் நாடிச் சென்று வாங்கினர்.

புத்தகக் காட்சியில் பெரியார்: இந்தப் புத்தகக் காட்சியில் பெரியார் தொடர்பான நூல்களைப் பல்வேறு கடைகளில் காண முடிந்தது. பெரியார் தொடர்பான நூல்கள் விற்பனையிலும் முன்னணி வகித்ததாகப் பதிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். பெண்ணியச் செயல்பாட்டாளர் ஓவியாவின் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (புதிய குரல்), சுகுணா திவாகரின் ‘அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்’ (கருப்புப் பிரதிகள்) என்னும் பெரியார் குறித்த கவிதை நூல், வெற்றிச்செல்வன் எழுதிய ‘பெரியார் எப்படிப் பெரியார்’ (கருஞ்சட்டை பதிப்பகம்) உள்ளிட்ட நூல்கள் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகின. பண்ணன் எழுதிய ‘தமிழ்ச் செல்வங்களுக்குத் தந்தை பெரியார்’ (விடியல்) நீண்ட காலத்துக்குப் பிறகு மறுவெளியீடு கண்டுள்ளது.

அறுசுவை உணவு: புத்தகக் காட்சியில் தீராக் குறையாக நீடித்தது அதன் உணவகம். இந்த உணவகங்கள் கடந்த காலத்தில் வெறும் லாபநோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டுவந்தன. வாசகர்கள் இளைப்பாறலுக்காகவே உணவகம் என்பதைத் தாண்டி, விற்பனைக்காகவே என்றிருந்தது அதன் நடவடிக்கை. ஆனால், இந்த ஆண்டு புத்தகக் காட்சி நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த உணவகம், சுவையும் தரமும் மிக்கதாக இருந்தது என வாசகர்கள் பலரும் தெரிவித்தனர். உணவு வகைகளின் விலையும் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. வாசகர்கள் பலருக்கு இந்த உணவகம் வயிற்றுக்கும் விருந்தளித்தது.

எல்லாப் பதிப்பகங்களுக்கும் அரங்கு!: கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் சில பதிப்பகங்களுக்கு அரங்கு ஒதுக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சை ஆகியிருந்தது. சால்ட் போன்ற சில பதிப்பங்கள் புத்தகக் காட்சிக்கு வெளியே ஒய்.எம்.சி.ஏ. இடத்தில் வாடகை செலுத்திக் கடை போட்டிருந்தன. இந்தப் பிரச்சினையைப் பலரும் சுட்டிக்காட்டிப் பேசினர். இந்தப் புத்தகக் காட்சியில் சால்ட் பதிப்பகத்துக்கு அரங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பால் புதுமையினருக்கான அரங்கு அமைக்கப்பட்டதில் கடந்த ஆண்டு பிரச்சினை இருந்தது. இந்த ஆண்டு அது முறைப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனைகள்

சமதளமற்ற தள அமைப்பு: சென்னைப் புத்தகக் காட்சி இந்திய அளவில் நடைபெறும் இரண்டாவது மிகப் பெரிய புத்தகக் காட்சி. ஆனாலும் அதன் கட்டமைப்பு வசதிகளோ உலகத் தரத்தில் இருப்பதில்லை. அதற்குச் சிறந்த உதாரணம், அதன் தள அமைப்பு. ஏற்றமும் இறக்கமுமாக அதன் தளம் அமைக்கப்படுகிறது. இந்தப் புகார் பல புத்தகக் காட்சிகளாகச் சொல்லப்பட்டுவருவதுதான். ஆனாலும் பிரச்சினை மாறவில்லை. இதனால் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்கள் தடுமாறி விழ வாய்ப்புள்ளது. மட்டுமல்லாமல் புத்தகக் காட்சியில் இந்தச் சமதளமற்ற தளத்தில் வெகுநேரம் நடப்பதால் கால்வலி ஏற்படுவதாகவும் வாசகர்கள்
பலர் தெரிவித்தனர்.

கழிவறைப் பிரச்சினை: இந்த ஆண்டும் கழிவறைப் பிரச்சினை இருந்தது. தற்காலிகக் கழிவறை சரியாகப் பராமரிக்கப்படாதது வாசகர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. அதுபோல் கழிவறை எங்கே இருக்கிறது என்பதைச் சுட்டும் அறிவிப்புப் பலகை பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கவில்லை. “டாய்லெட் எங்க இருக்கு?” என்கிற கேள்வியைப் பலரும் பலமுறை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கழிவறை முறையாகப் பராமரிக்கப்படாததால் கார் நிறுத்தும் இடம் மலம் கழிக்கும் இடமாகப் பாவிக்கப்பட்டது. புத்தகக் காட்சியில் புறப் பகுதியை சிறுநீர் கழிக்கும் இடமாக ஆண்கள் மாற்றினர்.

மழை பாதிப்பு: புத்தகக் காட்சியின் தொடக்கத்திலேயே மழையால் சில பதிப்பகங்கள் பாதிக்கப்பட்டன. அதுபோல் புத்தகக் காட்சியின் தளமும் செல்லும் வழிகளும் மழையால் பாதிக்கப்பட்டு ஒரு நாள் விடுமுறை விடும் நிலை ஏற்பட்டது. இந்த மழை எதிர்பாராமல் ஏற்பட்டதல்ல. சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கன மழை எச்சரிக்கை விடுத்திருந்தது கவனம்கொள்ளத்தக்கது. ஆனால், பபாசி அதற்குத் தயாராகாமல் இருந்தது விவாதமானது. யாவரும் பதிப்பகம், ஜீரோ டிகிரி, காக்கைக் கூடு போன்ற சில பதிப்பகங்களின் புத்தகங்களும் மழையால் பாதிக்கப்பட்டன. இதற்கான இழப்பீடு குறித்து பபாசி எந்த உத்தரவாதமும் அளிக்காதது சர்ச்சையானது. மழைநீர் ஒழுகும் பிரச்சினைக்குக் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் புத்தகக் காட்சி முடிந்ததும் இது பற்றிக் கலந்து பேசி நல்ல தீர்வு எடுக்கவிருப்பதாகவும் பபாசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றரங்குக் கட்டணம் அதிகம்: புத்தகக் காட்சியை ஒட்டிப் புத்தக வெளியீட்டு நிகழ்வு, இலக்கிய நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குச் சிற்றரங்கு அமைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகச் சிற்றரங்குகள் புத்தகக் காட்சிக்கு அரங்குக்கு வெளியே அமைக்கப்பட்டுவருகின்றன. இதனால் வாசகர்கள் சிற்றரங்கைக் கண்டறிந்து வருவது சிரமமாக இருந்தது. மேலும் சிற்றரங்குக்காக பபாசி ரூ.5,000 வசூலிக்கிறது. பொதுவாகச் சிறு பதிப்பாளர்கள்தான் சிற்றரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவார்கள். அதனால் கட்டணம் அவர்களுக்குச் சுமையாக இல்லாத வகையில் வசூலிக்கப்பட வேண்டும் என்பது பதிப்பாளர்கள் பலரது கோரிக்கை.

ஓய்வெடுக்க இடமில்லை: சென்னைப் புத்தகக் காட்சி பரப்பளவில் மிகப் பெரியது. ஆனால், வாசகர்கள் புத்தகக் காட்சி அரங்குக்குள் ஓய்வெடுக்க எங்குமே இருக்கைகள் அமைக்கப்படவில்லை. அதனால் மூத்த குடிமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். அதுபோல் வயதான வாசகர்களுக்கு வழிகாட்ட வழிகாட்டிகளும் முறையாக நியமிக்கப்படவில்லை. குடிநீரும் புத்தகக் காட்சி அரங்கு நுழைவுப் பகுதியில் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

சென்னை புத்தகக் காட்சி, பன்னாட்டு புத்தகக் காட்சி சிறப்புப் பக்கங்கள் உருவாக்கக் குழு: ஆதி வள்ளியப்பன், ஜெயகுமார், வெ.சந்திரமோகன், ச.கோபாலகிருஷ்ணன், சு.அருண் பிரசாத், ச.சிவசுப்ரமணியன்

உருவாக்கத்தில் உதவி: பிருந்தா சீனிவாசன், எஸ்.சுஜாதா, டி.கார்த்திக், கார்த்திகா ராஜேந்திரன், இந்து குணசேகர், ஆனந்தன் செல்லையா, எஸ்.சண்முகம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in