

வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், நூல் உருவாக்கத்தையும் விற்பனையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட பதிப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட சில வாக்குறுதிகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை தவிர, அரசு தலையிட்டுச் சரிசெய்ய வேண்டிய வேறு சில குறைகளைப் பற்றியும் பதிப்பாளர்கள் தரப்பிலிருந்து அறிய முடிகிறது.
நின்றுபோன நூலக ஆணைகள்: தமிழ்நாடு அரசு நூலகங்களுக்குப் பதிப்பாளர்களிடமிருந்து நூல்களைப் பெறுவதற்கான நூலக ஆணைகள் வெளியிடப்படுவதில்லை என்பது பதிப்பாளர்களின் பெருங்குறையாக இருக்கிறது. “கடந்த 3-4 ஆண்டுகளாக நூலகத் துறை புத்தக ஆணைகளை வழங்கவில்லை. நாங்கள் நினைவுபடுத்தி வருகிறோம். முதலமைச்சருக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம். வரக்கூடிய காலத்தில் அதைச் செயல்படுத்திக்கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். புத்தக வாசிப்பு குறைந்துவரும் சூழலில் பதிப்பாளர்களுக்கு நூலக ஆணைதான் பொருளாதாரரீதியில் ஆதரவாக இருக்கும். இந்த நூலக ஆணையை விரைவாக அறிவித்தால்தான் பதிப்புத் துறையைக் காப்பாற்ற முடியும்” என்கிறார் பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன்.
“நூலக ஆணைகளுக்கு விண்ணப்பிக்கும்போது தமிழ்நாடு தலைமைச் செயலக நூலகம், கன்னிமாரா நூலகம், மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம், டெல்லி நாடாளுமன்ற நூலகம், மும்பை நூலகம், கல்கத்தா பொது நூலகம் என இந்தியா முழுக்க உள்ள ஏழு நூலகங்களுக்குப் பிரதி அனுப்பி வைக்க வேண்டும். 2019க்குப் பிறகு நூலக ஆணைகளை வெளியிடாதது மட்டுமல்ல, இந்த ஏழு நூலகங்களுக்கான மாதிரிப் பிரதிகளைக்கூட அரசு வாங்கவில்லை. மாதிரிப் பிரதிகளை வாங்கியிருந்தால் தமிழில் வந்த புதிய நூல்கள் முக்கியமான இந்த ஏழு நூலகங்களுக்கும் போயிருக்கும். அதன் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் இந்நூலகங்களுக்கு வரும் தமிழ் வாசகர்கள், ஆய்வு மாணவர்கள் ஆகியோர் பார்வைக்கு அந்நூல்கள் போயிருக்கும். இப்போது அதற்குக்கூட வழியில்லாமல் போய்விட்டது. புத்தகங்கள் அங்கிருந்தால் நூலகத் தரப்பினரும் வாசகர்களும் பதிப்பகங்களைத் தொடர்புகொண்டு அந்த நூல்களை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் இப்போது தடைபட்டிருக்கிறது” என்கிறார் பாரதி புத்தகாலயத்தின் விற்பனை மேலாளர் சிராஜ்.
எந்த நூல்கள்? டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் மு.வேடியப்பன் வேறு சில பிரச்சினைகளை அடையாளப்படுத்துகிறார். “நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை அரசு நூலகங்களுக்குக் கொள்முதல் செய்யக் கூடாது. அரசே அந்த நூல்களை அச்சடித்து அரசு நூலகங்களில் வைக்கலாம். நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களைப் பல பதிப்பகங்கள் அரசு நூலகங்களில் சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறச் செய்துவிடுகின்றன. உதாரணமாக, ரா.பி.சேதுப் பிள்ளையின் ‘ஊரும் பேரும்’ என்னும் நூல் வெவ்வேறு பதிப்பகங்களின் வெளியீடாக சென்னை அசோக் நகர் நூலகத்தில் 15 பிரதிகள் உள்ளன. அதே நேரம், கடந்த 15 ஆண்டுகளில் வெளியானசாகித்திய அகாடமி விருது வென்ற நூல்கள் உட்படப் பல முக்கியமான நூல்கள் அரசு நூலகங்களில் இல்லை.
நூலக ஆணையில் பழைய முறைப்படி ஃபாரத்துக்கு (16 பக்கங்களுக்கு) இவ்வளவு என்னும் கணக்கில் வாங்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக புத்தகத்தின் விற்பனை விலையிலிருந்து குறிப்பிட்ட சதவீதத் தள்ளுபடியில் அந்த நூல்களை வாங்க வேண்டும். ஆங்கில நூல்கள் இப்படித்தான் வாங்கப்படுகின்றன. அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றுக்குத் தமிழ் நூல்களை, விலை அடிப்படையில்தான் வாங்குகிறார்கள். அடுத்த நூலக ஆணை வெளியிடும்போது புதிய முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது பதிப்பாளர்களின் எதிர்பார்ப்பு” என்கிறார் வேடியப்பன்.
நிஜமாகாத புத்தகப் பூங்கா: 2009இல் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பதிப்பாளர்களின் நலனுக்காக நிரந்தரப் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இது கனவுத் திட்டமாகவே தொடர்கிறது. புத்தகப் பூங்கா அமைப்பதற்குச் சென்னையில் மூன்று இடங்களை அடையாளம் காட்டியிருப்பதாகச் சொல்கிறார் முருகன். “அரசு வாடகைக்குக்கட்டிடம் ஒதுக்கித் தருவதாகச் சொல்கிறது. பதிப்பாளர்கள் மு.கருணாநிதி அறிவித்தபடி சொந்த இடம் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்” என்கிறார் வேடியப்பன்.
செயல்படாத நலவாரியம்: 2009இல் அன்றைய திமுக அரசால் தொடங்கப்பட்ட பதிப்பாளர் நலவாரியமும் முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படவே இல்லை என்கின்றனர் பதிப்பாளர்கள். நலவாரியம் குறித்துப் பேசிய செண்பகா பதிப்பகத்தின் ஆர்.எஸ்.சண்முகம், “பதிப்பகம் சார் தொழிலாளர்களுக்கு வைப்புநிதி, தொழிலாளர் மருத்துவக் காப்பீடு போன்ற எந்தப் பாதுகாப்பும் கிடையாது. அவர்கள் பாதுகாப்புக்கு நலவாரியம் அவசியமான ஒன்று. இதுவரை நலவாரியத்துக்காக நூலக ஆணையிலிருந்து பதிப்பாளர்களிடம் பிடிக்கப்பட்ட 2.5% தொகை நூறு கோடிகளில் இருக்கும் எனப்படுகிறது.அது குறித்து வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இதை எல்லாம் சரிசெய்து நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்தத் தொடங்க வேண்டும்” என்கிறார் அவர்.
பங்கேற்க இயலாப் புத்தகக் காட்சிகள்: மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி நடத்துவது வரவேற்புக்குரியது என்றாலும், அதிலும் சில திட்டமிடல் கோளாறுகள் இருக்கின்றன. “மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி நல்ல திட்டம்தான். ஆனால், ஒரே நேரத்தில் 3-4 இடங்களில் நடப்பதால் அனைத்திலும்அனைத்துப் பதிப்பாளர்களும் பங்கேற்பது சாத்தியம் இல்லை. சென்னையிலிருந்து கடலூருக்குப் போய்ப் புத்தகக்காட்சியில் அரங்கு அமைக்கக் குறைந்தபட்சம் 40, 50 ஆயிரம் ரூபாய் செலவாகிவிடும். ஆனால், மொத்தவருமானமே 50,000 ரூபாக்குள்தான் இருக்கும். செலவோரூ.40,000. இதற்குப் பதிலாக ஆண்டுக்கு 12 புத்தகக் காட்சிகள் நடத்தலாம். அருகருகே புத்தகக் காட்சி நடத்தினால் எப்படிப் புத்தக வியாபாரம் நடக்கும்?” என்று கேட்கிறார் சண்முகம்.
பதிப்பாளர்களின் பிரச்சினைகள் அரசுக்கு முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை என்கிறார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுப்பையா முத்துகுமாரசுவாமி. “ஒரு காலத்தில் பபாசி நிர்வாகிகள், அரசிடம் பதிப்புத் துறை சார் நலன்களைக் கேட்டுப் பெறுவதில் எல்லா நிலைகளிலும் செயல்பட்டார்கள். இப்போது நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு அந்தத் தெளிவு இல்லை” என்கிறார் அவர். புத்தகத்துக்கான காகித விலையைக் குறைப்பது, புத்தகக் காட்சி நுழைவுக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு ஆகிய கோரிக்கைகளையும் பதிப்பாளர்கள் முன்வைக்கிறார்கள்.
“நூலக ஆணை, புத்தகப் பூங்கா, நலவாரியம் ஆகிய மூன்றுகோரிக்கைகளும் 2024இல் நிறைவேறிவிடும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பபாசி செயலாளர் முருகன். அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.