Published : 10 Feb 2018 09:04 AM
Last Updated : 10 Feb 2018 09:04 AM

தொடுகறி: நெல்லை சூப்பர் ஸ்டார்!

நெல்லை சூப்பர் ஸ்டார்!

ரு நீண்ட இடைவெளிக்குப் பின் நெல்லையில் புத்தகக்காட்சி நடைபெற்றுவரும் சுழலில் கொண்டாடித் தீர்த்துவருகிறார்கள் வாசகர்கள். நெல்லை மட்டும் அல்லாது தூத்துக்குடி, குமரி, மதுரை என்று சுற்று மாவட்ட மக்கள் கூட்டம்கூட்டமாக வந்துசெல்லும் இந்தப் புத்தகக் காட்சியின் சூப்பர் ஸ்டார் தொ.பரமசிவம்! இதய அறுவைச் சிகிச்சை, நீரிழிவு நோயின் விளைவாகக் கால் துண்டிப்பு என்று வீட்டோடு முடங்கியவருக்குப் பெரிய உத்வேகம் கொடுத்திருக்கிறது புத்தகக் காட்சி. தமிழ், தமிழர் உணவு, தமிழர் உடை, தமிழர் பண்பாடு என்று தமிழ் மக்களின் வரலாற்றை நாட்டாரியல் சுவை தோயச் சொல்லும் ‘பண்பாட்டு அசைவுகள்’ (காலச்சுவடு பதிப்பகம்) புத்தகம் எப்போதும், எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் விற்பது போல இந்தப் புத்தகக் காட்சியிலும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்த நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ‘இந்து தேசியம்’ (கலப்பை பதிப்பகம்) புத்தகமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுவரை எழுதிய நூல்களிலேயே தனக்குப் பிடித்தமானது என்று தொ.ப. குறிப்பிடும் ‘நான் இந்து அல்ல... நீங்கள்?’ உள்ளிட்ட ஐந்து சிறு நூல்களின் தொகுப்பு இந்தப் புத்தகம்!

ஊர்தோறும் வாசகசாலை

சென்னையில் கடந்த மூன்று ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க இலக்கிய நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்திவரும் ‘வாசகசாலை' அமைப்பு, தன்னுடைய சிறகை சென்னை யைத் தாண்டியும் விரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. மாதம் ஒரு படைப்புக்கான விமர்சனக் கூட்டம் என்று துவங்கிய அதன் பயணம், முன்னோடிப் படைப்பாளி களுக்கான க்ளாசிக் வரிசை, ஈழ இலக்கியம், முழுநாள் இலக்கிய அரங்கு, சிற்றிதழில் வெளியாகும் சிறுகதைகளுக்கான கதையாடல், இலக்கிய விருது கள் என வெவ்வேறு வடிவங்களில் தன் பணியைத் தொடர்ந்துவருகிறது. தமிழகம் எங்கும் இலக்கிய விவாதங்களை வளர்த்தெடுக்கும் விதமாக மதுரை, கோவை, திருப்பூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் மைய நூலகத்தில் நாளை (பிப்.11) மாலை 5:30 மணிக்கு இலக்கிய நிகழ்வுகளுக்குத் திட்டமிட்டிருக்கிறது ‘வாசக சாலை’.

பாரதி விருதுகள் 2018

ஸ்ரீராம் நிறுவனங்களின் ஓர் அங்கமான ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் வழங்கும் பாரதி விருதுகள் இந்த ஆண்டு கெ.பக்தவத்சலம், புலவர் தி.வே.விஜயலட்சுமி, மருத்துவர் ச.பத்மாநந்தன் மூவருக்கு வழங்கப்பட்டது. ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையைக் கொண்ட விருது இது. அவ்வை நடராசன், ஆண்டாள் பிரியதர்ஷினி, இலங்கை ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்ற விழாவில், விருதோடு நிகழ்ச்சி யில் பங்கேற்ற அனைவருக்கும் 'பாரதி வாழ்வு' நூலும் பரிசாக வழங்கப்பட்டது.

எஸ்.சண்முகத்துக்கு ‘அன்னம்’ விருது!

இலக்கிய வீதி மற்றும் பாரதிய வித்யா பவன் வழங்கும் இந்த மாதத்திற்கான அன்னம் விருதுக்கு கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான எஸ்.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிப்ரவரி 23-ல் மாலை 6:30 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ்வு நடைபெறவுள்ளது. வாழ்த்துகள் சண்முகம்!

மணமேடையில் கவிதை நூல்கள் வெளியீடு

கடந்த வாரம் திண்டுக்கல்லில் நடைபெற்ற தனது திருமண விழாவில், இதயம் வெப்பமயமாதல்..., பிழைத்தலில் பிழை, பயம் உனக்கு பயப்பட வேண்டும் எனும் மூன்று கவிதை நூல்களை மணவிழா மேடையிலேயே வெளியிட்டுள்ளார் கவிஞர் மணி அற்புதராஜ். “என்னோட திருமண நாள் ஒரு அர்த்தபூர்வமான நாளாக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். என் பெற்றோர்களும் நண்பர்களும் இதற்குப் பெரிதும் ஆதரவு அளித்தார்கள்” என்று சொல்லும் மணி அற்புதராஜ், சமூகப் பணித் துறையில் முதுகலை படித்தவர். தற்போது கிராமப்புற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக மாலை நேர கற்றல் மையங்களை நடத்திவரும் யுரேகா கல்வி இயக்கத்தில் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x